3 Jan 2019

ரொக்கப் பணத்தைப் பரிசீலனைச் செய்யுங்கள்!


ரொக்கப் பணத்தைப் பரிசீலனைச் செய்யுங்கள்!
டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், மொபைல் பேங்கிங் இவைகள் எல்லாம் நகரப் பொருளாதாரத்துக்கு உதவலாம். கிராமப் பொருளாதாரத்துக்கு ரொக்கப் பணமே அச்சாரம், ஆதாரம் எல்லாம்.
செல்போனில் சரியாக சிக்னல் கிடைக்காத எத்தனையோ கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. மொபைல் பேங்குக்கு உதவும் டச் போன் எனும் ஸ்மார்ட்போன் இல்லாத எத்தனையோ கிராமத்தவர்கள் இன்னும் உள்ளனர்.
பத்து கிராமங்களுக்கு சேர்த்தாற் போல் கூட வங்கிகள் இங்கு கிடையாது. வங்கிகள் எல்லாம் நகரத்தில்தான் குவிந்து கிடக்கின்றன. வங்கிச் சேவையைப் பெறுவதற்கு பெரும்பாலான கிராமத்தில் இருக்கும் மக்கள் நகரத்திற்குதான் செல்ல வேண்டியிருக்கிறது.
தனது வங்கிக் கணக்கிலிருந்து இருநூறு ரூபாய் பணத்தை எடுப்பதற்காக செல்லான் பூர்த்தி செய்து வரிசையில் அரை நாள் வரை அதற்காகக் காத்து நின்று பணம் எடுத்துச் செல்லும் எத்தனையோ கிராமத்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
ரொக்கப் பணத்தால் முறைகேடுகள் அதிகரிப்பது போல ஒரு குற்றச்சாட்டு உள்ளது. டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், மொபைல் பேங்கிங்கிலும்தான் எத்தனையோ முறைகேடுகள் நடக்கின்றன.
எப்படி டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், மொபைல் பேங்கிங் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதோ, அதைப் போன்ற ஒரு வாய்ப்பு ரொக்கப் பணத்தைப் பயன்படுத்துவதற்கும் இருக்க வேண்டும்.
ஆளானப்பட்ட அமெரிக்காவே தொழில்நுட்பத்தில் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும் இன்னும் ரொக்கப் பணத்தைக் கையாளவே செய்கிறது.
ரொக்கப் பணத்தைத் தொழில்நுட்ப பயன்பாட்டு மூலம் குறைப்பதற்கு முயற்சி செய்வது நல்லது போன்று தோன்றலாம். ரொக்கப் பயன்பாட்டுக்குப் பழகி, அதிலிருந்து மாற முடியாமல், புதிய தொழில்நுட்பத்தைப் புரிந்து கொண்டு அதற்கு முன்னேறி வர முடியாமல் எவ்வளவோ பேர் தவிக்கின்றனர்.
டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், மொபைல் பேங்கிங் ஆகியன பணப் பரிமாற்றத்தில் எளிமையைக் கொண்டு வந்து இருப்பது உண்மையாக இருக்கலாம். அதை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நிறைய பேரைக் கொண்டுள்ளது நமது நாடு. அவர்களுக்கும் ஏற்றாற்போல் அவர்களையும் அரவணைத்துச் செல்வது போல பணப் பரிமாற்ற நடைமுறைகள் அமைய வேண்டியது அவசியம். 
டிஜிட்டல் மணி என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கலாம். அதற்கேற்ப மாற்றங்கள் நிகழப் போவது நிச்சயமாகவும் இருக்கலாம். அதை விரைவுபடுத்துகிறேன் பேர்வழி என்று அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களை அவதிப்படுத்துவது ஒரு நல்ல நடைமுறையாக இருக்க முடியாது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...