மனத்தோற்றம்
எதுவும் நிரந்தரமில்லை.
எல்லாம் மனதின் தோற்றம். மனம் கருதிக் கொள்ளும் சூழ்நிலையின் தோற்றம். சூழ்நிலைகள்
மாறிக் கொண்டே இருக்கின்றன. தோற்றமும் மாறிக் கொண்டே இருக்கின்றன. மனதும் மாறி விடும்.
அதே மாதிரி,
எண்ணிக்கை
எண்ணுவதால் உருவாவதில்லை. மனநிலையால் உருவாகிறது. மனநிலைக்கு அது பிரசவம். சில வங்கிகளில்
பார்த்து இருப்பீர்களே! இயந்திரம் எண்ணிக் கொடுத்தப் பிறகும் பணத்தை மறுபடியும் மறுபடியும்
எண்ணுவார்கள் வங்கி ஊழியர்கள். மறுபடியும் திருப்தி வராமல் மீண்டும் இயந்திரத்தில்
விட்டு மீண்டும் எண்ணோ எண்ணென்று எண்ணுவார்கள். நிற்கின்ற நமக்கு அந்த ஏ.சி.யிலும்
வியர்த்துக் கொட்டி விடும்.
ஒரே நேரத்தில்
மீன்களின் முட்டைகள் போல் பல்கிப் பெருகுவதும், மரத்தின் விதைகள் போல் பல நூறு உண்டாவதும்
அல்லது மனிதர் போல் ஒன்று ஈனுவதும் அந்த நேரத்தில் மனதின் இயல்புகள்.
திட்டமிட்ட
நடைமுறைகள் அதனிடம் தோற்று விடக் காண்பீர்கள். கரை உடைக்கும் வெள்ளம் அது. கதையைக்
கடக்கும் கற்பனை அது.
அது எப்படி
உண்டாகிறது, ரெண்டாகிறது, மூன்றாகிறது என்பது அதற்கே வெளிச்சம். சூரியனின் வெளிச்சத்தை
யார் ஏற்றி வைத்து இருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்.
அதன் தொடக்கமும்,
முடிவும் அதற்கே தீர்மானமானவை. யாராலும் தீர்மானிக்கப்படுவதற்கில்லை.
*****
No comments:
Post a Comment