9 Jan 2019

பகடு நடந்த கூழ்


மாட்டு உழவுக்கும், டிராக்டர் உழவுக்கும் உள்ள வேறுபாட்டைப் போட்டில் அடித்தது போல ஜே.சி. குமரப்பா சொல்வார், 'மாடு சாணி போடும், டிராக்டர் சாணி போடுமா?' என்று.
நம்மாழ்வார் ஒவ்வொரு மேடையிலும் இந்த வாசகத்தைச் சொல்வார். உண்மைதான். மாடு சாணி போடும். டிராக்டருக்கு நாம்தான் டீசல் போட வேண்டும்.
'பகடு நடந்த கூல் பல்லாரோடு உண்க' எனும் நாலடியாரின் வரிகளைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு குமரப்பாவும், நம்மாழ்வாரும் நினைவுக்கு வந்து விடுகிறார்கள்.
நம் எருதுகள் நடந்த வயலில் விளைந்ததை அல்லவா நாம் தின்றோம்.
நம் மாடுகள் இட்ட சாணத்தில் விளைந்ததை அல்லவா நாம் புசித்தோம்.
நம் மாடுகள் தந்த பாலை உண்டல்லவா நாம் ருசித்தோம்.
பெண்ணைக் கட்டிக் கொடுத்த தகப்பன்கள் பெண்ணுக்காக ஒரு பசு மாட்டை வாங்கித் தராமல் மன அமைதி கொள்ள மாட்டார். ஒருவேளை தகப்பன்மார் மறந்தாலும் அந்தப் பெண் அப்பனைக் குத்திக் காட்டிக் காட்டியே மாட்டைக் கொண்டு வந்து கட்ட வைத்து விடும். அந்தப் பெண்ணும் இது எங்க அப்பா வாங்கித் தந்த மாடு என்று சொல்லிச் சொல்லி இறுமாந்து போகும்.
என் அம்மாவுக்கு சிறுநீரகக் கல் வந்த பிறகு வீட்டில் மாடுகளை விற்பதாகத் தீர்மானித்தோம். விற்க வேண்டும் தீர்மானித்து அதற்கான முயற்சிகள் எடுப்பதற்குள் இரண்டு ஆண்டுகள் ஆயின மாடுகளை விற்று முடிக்க.
இப்போது மாடு வளர்க்க வேண்டும் என்ற ஆசை. எந்த மாடுகளை விற்க வேண்டும் தீர்மானித்தோமோ அதே மாடுகளை வாங்க வேண்டும் என்று பெருவிருப்பம். வீட்டில் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இன்னும் வாங்கியபாடில்லை. விற்க நினைத்து விற்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது போல, வாங்கி நினைத்து வாங்குவதற்கும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்ற நம்பிக்கையில்தான் இன்னும் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்பது என்பது சாதாரண விசயமில்லை.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...