8 Jan 2019

மாடுகளைப் பார்ப்பதே அபூர்வமாகி விட்டது


மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி ஆனை கட்டிப் போரடித்ததாக ஒரு நாட்டுப்பாடல் கேள்விபட்டு இருப்பீர்கள்.
காலம்தான் எவ்வளவு மாறி விட்டது. யானை விளைநிலங்களிலும், வீடுகளிலும் புகுவதாக இன்று புகார்கள்தான் வருகின்றன. ஆனையெனும் யானையென்ன? இன்று மாடுகள் இல்லாத வீடுகளாகி விட்டன விவசாயிகளின் வீடுகள்.
வீட்டில் வைத்திருந்த மாட்டுக்கு வைக்கோல் போட முடியாத நிலையில் இன்று இருக்கும் விவசாயியும், ஆனை கட்டி போரடிப்பதற்காக யானையை வைத்து தீனி போட்ட அன்றைய விவசாயியும் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும்?
உழவும், மாடும் இணைந்திருந்த அந்த நாட்கள் அற்புதமானவை. மாடுகளிலே உழவு மாடு என்ற ஒரு பிரிவு மாடுகள் வீட்டில் இருக்கும். மாடுகளில் கறவை மாடு, வண்டி மாடு, செக்கு மாடு, உழவு மாடு என்று பல வகைகள் இருந்தன. இன்று மாடுகளைப் பார்ப்பதே அபூர்வமாகி விட்டது.
வேளாண்மைக் கண்காட்சிகளில் மாடுகளைப் பார்க்கும் போது ஓர் ஏக்கம் வந்து மனதில் அமர்ந்து கொள்கிறது.
அப்போதெல்லாம் மாட்டுப் பொங்கல் அன்று சாயுங்காலம் எவ்வளவு பிரமாதமாக இருக்கும் தெரியுமா? மாட்டுக்குப் பொங்கலிட்டு கோயிலுக்குக் கொண்டு சென்று பட்டியில் இடுவோம். பட்டியில் பூசை போட்டு மாடுகளை வீட்டுக்குக் கொண்டு வருவோம். கொண்டு வருவோம் என்று கூட சொல்ல முடியாது. மாடுகளோடு ஓடி வருவோம். பட்டியிலிருந்து வீட்டுக்குக் கிளம்பும் மாடுகள் குதிரைகள் போலாகி விடும். அந்த ஓட்டம் ஓடும். கொல்லை கொட்டகைக்குள் நுழைவதற்கு முன் உலக்கையைப் போட்டு அதனருகில் சிறிது வைக்கோலைப் போட்டு கொளுத்தி விடுவார்கள். அதைத் தாண்டிதான் மாடு செல்ல வேண்டும். வேகமாக ஓடி வரும் மாடு ஒரு கணம் அந்த தீயைப் பார்த்துத் திகைத்து நிற்கும். எல்லாம் ஒரு நொடிதான். அடுத்த நொடியே பாயும் பாருங்கள். அடுத்த ரெண்டாவது பாய்ச்சலில் கொட்டகையில் போய் நிற்கும் பாருங்கள் அவ்வளவு பவ்வியமாக.
மாடுகளின் அழிவையும், முடிவையும் மாட்டு ஆஸ்பத்திரிகளும், உரக்கடைகளும் சேர்த்தே எழுதின என்று நினைக்கிறேன். உரக்கடைகள் இல்லாத அப்போது சாணம்தான் உரம். காசு கொடுத்து உரத்தை வாங்க முடியும், அதுவும் கடன் வாங்கியாவது வாங்கி விட முடியும் என்ற நிலை வந்த பிறகு எதற்கு மெனக்கெட்டு மாடுகளை வளர்க்க வேண்டும் என்ற மனநிலை மக்களுக்கு வந்து விட்டது.
டிராக்டர் வந்த பிறகு உழவு மாடுகள் அழிந்தன.
மாட்டு ஆஸ்பத்திரிகள் வந்த பிறகு நாட்டு மாடுகள் அழிந்தன.
உரக்கடைகள் வந்த பிறகு மாடுகள் வெகுவாகக் குறைந்தன.
பாக்கெட் பால் வீடு தேடி வந்த பிறகு மாடுகள் முற்றிலுமாக வெளியேறி விட்டன.
இப்போது எங்கே மாடுகள் வளர்க்கிறார்கள்? எங்கிருந்து எந்த மாட்டிலிருந்து கறந்து இந்தப் பால் பாக்கெட்டில் அடைபட்டு வருகிறது? என்ற நிறைய கேள்விகள் மனதில் எழுகின்றன.
அதையெல்லாம் நிரம்ப யோசித்தால் பாலோ, டீயோ, காபியோ குடிக்க முடியுமா என்ன!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...