8 Jan 2019

காளைக்குப் போட்ட நாட்கள்


காளைக்குப் போட்ட நாட்கள்
ஒரு பசு மாட்டுக்கு காளை போட வேண்டிய பருவத்தைப் பெரியவர்கள் சரியாக கணித்து விடுவார்கள். அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கும் இது ஓரளவுக்குத் தெரியும். இதையெல்லாம் 'ஏ' டைப் விசயமாக அல்லாமல் அந்த பசுவுக்கு செய்ய வேண்டிய அவசியமான ஒன்றாக அந்த இளம் வயதில் எப்படி மனதுக்குப் புரிந்தது என்பதை இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.
காளைக்குப் போட வேண்டிய நிலையில் இருக்கும் பசு மேயாது. மற்ற மாடுகள் மேல் ஏறி மேயும் மாடுகளுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். அதை வைத்தே இது எல்லாருக்கும் புரியும். "அந்த வெள்ளையைப் பாரு, மத்த மாடுகளை மேய வுட மாட்டேங்குது. தெக்குட்டுக்காரங்கிட்ட சொல்லி காளைக்குப் போடச் சொல்லுங்கடா!" என்று ஒரு பெரிசு சவுண்ட் விடும். அதன் கழிசலை வைத்து சரியாகக் கணித்து காளைக்குப் போட அழைத்துச் செல்வார்கள்.
காளைக்கு அழைத்துச் செல்லும் அந்த நாள் கொண்டாட்டம்தான். அதிகாலை நேரத்தில்தான் காளைக்குப் போட அழைத்துச் செல்வார்கள். அந்த அதிகாலை நேரத்திலும் எப்படியும் நான்கைந்து பொடிசுகள் சேர்ந்து கொள்ளும். மாட்டை முன்னால் விட்டு பின்னால்தான் பிடித்துச் செல்வார்கள். முன்னால் சென்றால் மாடு பிடித்துச் செல்பவர் மேலே ஏறி விடும். போகும் வழியெல்லாம் பொடிசுகள் சத்தம் போட்டுக் கொண்டே செல்லும்.
எப்படியும் இரண்டு மூன்று ஊர்களுக்கு ஒரு காளை இருக்கும். ஒரு சில ஊர்களில் ஒரு ஊரிலே நான்கைந்து காளைகள் கூட இருக்கும். காளை என்றால் அதுதான் காளை. அப்படி இருக்கும். யானை மாதிரி என்று சொன்னாலும் பிழையில்லை என்று நினைக்கிறேன்.
காளை போடுவதற்குத் தகுந்தாற் போல் ஒரு மரத்தில்  v வடிவில் மூங்கில்களை வைத்துக் கட்டியிருப்பார்கள். மாட்டை அதற்குள் கட்டி வைத்து மூக்காணாங்கயிற்றைப் பிடித்துக் கொள்ள வேண்டும். காளையை ஓட்டிக் கொண்டு வந்தால் அது மாட்டின் மேல் ஏறி தன் கடமையை வெகு குஷியாகச் செய்யும். ஒருவேளை காளைக்கு மூடு இல்லையென்றால் பசு மாட்டின் மூத்திரத்தைப் பிடித்து ஊற்றி, காளை மாட்டின் வாலைப் பிடித்துத் திருகி காளை போடுபவர் விதவிதமான வேலைகளைச் செய்வார் பாருங்கள். பார்க்க ரசமாக இருக்கும். காளை போட்ட பின் பசு அமைதியாக நடந்து வரும். பொடிசுகள் அந்த பசு மாட்டை அடக்கி விட்டது போல ஆர்ப்பாட்டம் போட்டுக் கொண்டே வரும். மாட்டு ஆஸ்பத்திரிகள் வந்த பிறகு இந்தக் கொண்டாட்டம் எல்லாம் போய் விட்டது. மாட்டைக் கொண்டு போய் மாட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு முளையில் கட்டி விட்டு மாட்டு டாக்டர் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதில் அவ்வளவு சுவாரசியம் இருந்ததாக நினைவில் இல்லை. சில நாட்களில் மாட்டு டாக்டர் வர மாட்டார். அது போன்ற நாட்களில் மாட்டை ஏமாற்றத்தோடு அழைத்து வர வேண்டியிருக்கும்.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...