16 Jan 2019

சபரிமலைச் சமத்துவம்


சபரிமலைச் சமத்துவம்
உச்சநீதிமன்றம் தீர்ப்பிட்டப் பிறகும் சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு மறுப்பும், எதிர்ப்பும் நிலவுகிறது.
இவ்வளவு காலம் மறுக்கப்பட்ட ஆண்-பெண் சமத்துவத்துக்கு ஒரு நல்ல தீர்ப்பையே உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
அறிவில் நிகராக ஆணையும் பெண்ணையும் கொள்வதால் வையம் தழைக்கும் என்று பாரதி சொல்கிறார். ஆன்மீகத்திலும் அவ்வாறே கொள்வதால் ஆன்மீக முன்னேற்றம் இன்னும் கூடுதலாகவே அன்றோ நிகழும்.
பெண்களும் சபரிமலைக்குச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படுவதால் ஆண்கள் மட்டும் செல்லும் நிலை மாறி குடும்பத்தோடு சபரிமலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு உண்டாகியிருக்கிறது அல்லவா!
ஐயப்பன் பிரம்மசரியமான சாமி என்கிறார்கள். விவேகானந்தரும் பிரம்மசரியமான சாமிதான் அன்றோ! அவர் நிவேதிதையை சீடராக ஏற்றார். விவேகாந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாதேவியோடு இணைந்த ஆன்மீகப் பயணத்தையே மேற்கொண்டார். ஆன்மீக சாதகத்திலிருந்து பெண்ணை விலக்கி வைக்கவில்லை.
ஐயப்பனின் தீவிர பக்தர்களாகக் காட்டிக் கொள்ளும் சிலர் சபரிமலைக்குப் பெண்கள் வர மறுப்பு தெரிவிப்பது சரியான ஆன்மீகத்துக்கு எதிரான நிலைபாடு இல்லாமல் அது வேறென்ன?
ஆம், சரியான நிலைபாடு கொண்ட ஆன்மீகம் என்பது பெண்களைத் தாயாகவும், சகோதரியாகவும் பார்ப்பதுதானே! அப்படித் தாயாகவும், சகோதரியாகவும் பார்க்க வேண்டிய அந்தப் பெண்களை, குடும்ப அமைப்புக்காகத் தன்னையே தரும் தியாகத்தின் திருவுருவங்களைச் சபரிமலைக்கு வரக் கூடாது என்று தடுப்பதும், மறுப்பதும் எப்படி சரியான ஆன்மீகமாக இருக்கும்?
அதுவும் அன்றி, எவராக இருப்பினும் ஒருவர் ஐயப்பனுக்கு மாலை போட்டு சாமியாகி விட்ட பின் சாமி என்றே அழைப்பார்கள். அங்கே பேதம் கிடையாது. வேறுபாடு கிடையாது. பின் ஆண் சாமி-பெண் சாமி என்ற பேதம் எப்படி உருவாகும்? எல்லாரும் சாமிதானே!
எந்த மனபேதமும் இல்லை என்பதுதான் ஆன்மீகத்தின் சரியான நிலை. அப்படி இருந்தாலும் அதை நிர்மூலமாக்கிக் கொள்வதில்தான் ஆன்மீகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது எனும் போது அதில் ஆண்-பெண் என்ற பேதம் இருப்பதாகச் சொன்னால் அது எப்படி ஆன்மீகச் சாதகத்தின் சரியான நிலையாக இருக்க முடியும்?
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...