16 Jan 2019

மர்ம மரணங்களின் மாநிலம்


மர்ம மரணங்களின் மாநிலம்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடங்கி, தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கொடநாட்டு மரணங்கள் வரை மர்ம மரணங்கள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
எந்நேரமும் விழித்துக் கொண்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் இருக்கின்றன. அந்த கேமராக்களைப் பயன்படுத்தி பேய்களையே கண்டுபிடிக்க முடியும் என்பது போல சுந்தர்.சி. ஒரு திரைப்படம் எடுத்திருப்பார். மர்ம மரணங்களுக்கானக் காரணங்களைத்தான் கண்டுபிடிக்க முடியவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தது அப்போல்லோ போன்ற சர்வதேசத் தரமிக்க ஒரு மருத்துவமனையில்.
அப்படி ஒரு மருத்துவமனையில் மரணமடைந்தும் மர்மம் நீடிக்கிறது.
இங்கிலாந்து போன்ற நாட்டில் இருந்து மருத்துவர் எல்லாம் வருகை தந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அவரது மரணத்தில் மர்மம் நீள்கிறது.
எய்ம்ஸ் போன்ற நமது நாட்டின் உச்சபட்ச மருத்துமனையிலிருந்து மருத்துவர்கள் குழு வந்து பரிசோதித்துப் பார்த்துச் சென்றிருக்கிறார்கள் என்றாலும் இன்னும் மர்மம் தொடர்கிறது.
அவரது மரணத்தைத் தொடர்ந்து கொடநாட்டில் நிகழ்ந்த மரணங்களும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த விபத்து மரணங்களும் தற்போது பேசுபொருளாயிருக்கின்றன.
இவைகளையெல்லாம் காவல்துறையின் துறையின் விசாரணைகள் மற்றும் கைதுகளின் பின்னடைவாக மட்டும் பார்க்க இயலாது. காவல்துறை விசாரணைகள் மற்றும் கைதுகளின் மீதான மக்களின் நம்பிக்கைக் குறைவதற்கும் காரணமாகி விடலாம்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலின் கைது, சமூகப் போராளி திருமுருகன் காந்தியின் கைது ஆகியவற்றில் நீதிபதிகள் அவர்களைச் சிறையிலடைக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். கொடநாடு விவகாரத்திற்காக டெல்லி வரை சென்று காவல்துறை கைது செய்தவர்களையும் கூட நீதிபதிகள் சிறையிலடைக்க மறுப்பு தெரிவித்து விடுவித்து இருக்கிறார்கள்.
வேறு ஒரு பார்வையில் கொடநாடு மரணங்கள் குறித்த பரபரப்பு எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கொடுக்கப்படும் நெருக்கடிகள் என்பது போல ஒரு கருத்தை முன்வைத்தாலும் சந்தேக மரணங்களை அப்படியே விட்டு விட முடியாதே. மர்மங்கள் விலகத்தானே வேண்டும், விலக மறுத்தாலும் விலக்கித்தானே ஆக வேண்டும்.
மர்மங்கள் விலகாமல் இருப்பது தர்மங்கள் நிலைபெறுவதற்குத் தடையாக அமைந்து விடக் கூடாது அல்லவா!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...