24 Jan 2019

வேஷமிடும் திரை



இந்த மனித குலத்துக்கு இன்னும் மிருக பலத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் என்று வந்த பிறகும் மிருக பலத்தின் மீதான நம்பிக்கை நீடிக்கிறது.
இப்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் இந்தக் கருத்தின் மீது இருக்கும் உண்மை புரிய வரும்.
ஹீரோ பத்து பேருக்குக் குறையாமல் இப்போதும் அடிக்கிறார். அதிலும் உருட்டுக் கட்டை, இரும்பு ராடு, வீச்சரிவாள் என்று ஆயுத பலத்தோடு வரும் அடியாட்களை நிராயுதபாணியாக நின்று ஹீரோ பந்தாடுகிறார். அவரது ஒவ்வொரு அடிக்கும் பறந்து போய் விழும் அடியாட்களால் சுவர் உடைகிறது, காங்கிரீட் தெறிக்கிறது, கதவுகள் பறக்கின்றன.
சேனை அளவு அடியாட்கள் பலமுள்ள வில்லன் இதனாலேயே திரையில் ஹீரோவின் முன் தோற்று அடிபணிகிறான். இது ஒன்றே பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவின் திறமையாக இருக்கிறது. இதையே மக்கள் ஏற்கின்றனர். அடி உதைக்கு மிஞ்சி எதுவும் இல்லை என்று மக்கள் மனதில் பதிந்து விட்ட நம்பிக்கைக்கு மேலும் தீனி போடும் முயற்சி இது.
நடைமுறை என்பது வேறாக இருக்கிறது. அடியாட்கள் எவரின் மீதும் கை வைத்து விட முடியாது. அந்த கை வைக்க முடியாத மக்களின் ஏக்கம்தான் திரையில் விரியும் சிறிதேனும் நம்ப முடியாத அடிதடிக் காட்சிக்கு அவர்களை விசிலடிக்கச் செய்கிறது.
இவ்வளவு அடிதடி உதைகளையும் நிகழ்த்திக் கொண்டே ஹீரோ மனமாற்றம் செய்வதற்கான வசனங்களையும் உதிர்ப்பார். அதில் ஒரு பஞ்ச் இருக்குமாறும் பார்த்துக் கொள்வார். இதற்கும் மக்களிடமிருந்து அமோக வரவேற்பு இருக்கும். கைதட்டிக் காட்டு கூச்சல் போடுவார்கள்.
இன்றைய நவீன வாழ்வில் எவ்வளவோ சிடுக்குகளும், முடிச்சுகளும் இருக்கின்றன. திரையோ இன்னும் அதே நல்லவர் மற்றும் கெட்டவர் என்ற ஒரே கருவில் காலத்திற்கேற்ற டெம்ப்ளேட் கதைகளைப் பின்னிக் கொண்டிருக்கிறது.
கெட்டவர்களை அடித்து உதைத்துத் திருத்தி விட்டால் அல்லது அவர்களைக் கொலை செய்து விட்டால் நாட்டில் நல்லது நிகழ்ந்து விடும் என்ற ஒற்றைத் தன்மையையே திரை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறது. இது புராணக் காலத்திலிருந்து தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கதாநாயக பிம்பம்.
நல்லது மற்றும் கெட்டது என்ற அடிப்படையில் பார்த்தால் இதுவே ஒரு கெட்டதுதான். ஏனென்றால் கெட்டதற்கானப் பின்னணி ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும்.
திரையோ கெடுவதற்கானப் பொழுதுபோக்கிற்கான அம்சங்களை மட்டும் ஆராய்ந்து பார்த்து அதையே காலந்தோறும் நிகழ்த்திக் கொண்டு அத்தகைய அம்சங்களையே நல்லது என்று வேஷமிடும் வேலையையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...