8 Jan 2019

திருவாளர் ரெளடி அவர்கள்


தவறு செய்பவர்களெல்லாம் பயப்படாமல் தவறு செய்கிறார்கள்.
நல்லது செய்பவர்களெல்லாம் பயந்து கொண்டு அதைச் செய்யாமல் இருக்கிறார்கள்.
இப்படித்தான் தவறு செய்வதற்கான துணிச்சல் இருப்பவர் திருவாளர் ரெளடி ஆகிறார். திருவாளர் ரெளடி அவர்கள் மேலும் மேலும் துணிவை வளர்த்துக் கொண்டு மதிப்பிற்குரிய கல்வித் தந்தை ஆகிறார் அல்லது முறைகேடுகள் செய்யும் மாண்புமிகு தலைவர் ஆகிறார்.
எத்தனை திரைப்படங்களில் பார்க்கிறோம், திருவாளர் ரெளடி சொல்கிறார் - "மக்களிடம் ஒரு பயம் இருக்க வேண்டும். அந்தப் பயம்தான் மூலதனம்" என்று.
மற்றவர்களைப் பயமுறுத்துவதில் மகிழ்ச்சி அடையும் திருவாளர் ரெளடியும் பரிதாபத்துக்கு உரியவர்தான். அவரது செயல்களால் சமூகத்தில் பலர் பரிதாபத்துக்கு உரிய நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.
இதில் எங்கே தவறு நடக்கிறது?
இதை எப்படித் திருத்துவது?
இதைப் பற்றி இலக்கியத்தில் ஏதேனும் செய்திகள் இருக்கின்றனவா?
இதற்கெல்லாமா இலக்கியத்தில் செய்திகள் இருக்குமா என்று கேட்டால்...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலைமைதான் இப்படி இருந்திருக்கிறது. அப்போது வள்ளுவர் இது குறித்துத் தீவிரமாக சிந்தித்து திருவாளர் ரெளடிகளுக்காக ஒரு குறளைப் படைத்து இருக்கிறார்,
தீவிளையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.
அதாவது வள்ளுவர் திருவாளர் ரெளடிகளை திருவாளர் தீவினையார் என்கிறார்.
அந்தக் காலத்திலே திருவாளர் ரெளடிகள் தீவினைகளை அஞ்சாமல் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் திருந்துவதற்கான வழியையும் வள்ளுவர், விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு என்ற வரிகளில் குறிப்பிடுகிறார். அதாவது தீவினை செய்ய அஞ்ச வேண்டும் என்கிறார். திருவாளர் ரெளடிகள் தீவினை செய்ய அஞ்ச வேண்டும் என்பது செய்தி. அவர்கள் எங்கே அஞ்சுகிறார்கள்? அவர்களைப் பார்த்து நாம்தான் அஞ்ச வேண்டியிருக்கிறது இல்லையா!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அப்படி என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அது இன்னும் குறைந்தபாடில்லை. குறளின் பொருள் மாறி விடக் கூடாதே! அதற்காகக் கூட அவர்கள் அப்படியே அஞ்சாமல் தீவினைகளைச் செய்து கொண்டிருக்கலாம் அல்லவா!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...