8 Jan 2019

மாடுகளைத் தொலைத்த கிராமங்கள்


அந்தக் காலத்தில் எல்லாம்... என்று பெரிசுகள் ஆரம்பித்தால் நமக்கு எரிச்சல் எங்கிருந்தோ வந்து விடும்.
ஆனால், அந்தக் காலம் அருமையான காலமாகவே இருந்திருக்கிறது.
நான் சிறு பிள்ளையாய் இருந்த காலங்களில் வீட்டுக்கு வீடு மாடு இருக்கும். பால் வாங்கிக் குடித்த ஞாபகமே இல்லை. வீட்டுப்பால்தான். கறந்தபாலில் டீ போட்டுக் குடிக்க வேண்டுமே! அப்படி ஒரு சுவை. தயிர், மோர், வெண்ணெய், நெய் என்று வதையழியும்.
ஒரு மாடு மாற்றி மற்றொரு மாடு என்று கன்று ஈன்று கொண்டே இருக்கும். பாலுக்குப் பஞ்சமே இருக்காது.
உழவுக்காலம் வந்து விட்டால் மாட்டுவண்டி கட்டிக் கொண்டு வயலுக்கு எரு அடிப்பார்கள். பொடிசுகளாகிய நாங்கள் வண்டிகளில் ஏறிக் கொண்டு கூச்சலிட்டுக் கொண்டு வண்டிகளில் ஏறியும், வண்டிகளின் பின்னே ஓடியும் ரெளசு பண்ணிக் கொண்டிருப்போம். வயலில் எருவை இறக்கிய பின் அதை வயல் முழுவதும் விசிறியடித்து விளையாடி விட்டு, இப்போது விளம்பரங்களில் சொல்கிறார்களே, கறை நல்லது என்று அப்படி நல்லதோடு வீடு வருவோம்.
அப்போதே டிராக்டர் உழவுதான். ஏர் உழுது நான் பார்த்ததில்லை. எனக்கு முன்பிருந்த தலைமுறை பார்த்து இருக்கும்.
காலம் அவ்வளவு விரைவாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.
எங்கள் வீடுகளில் இருந்த நாட்டு மாடுகளை எல்லாம் மாட்டு ஆஸ்பத்திரி ஆரம்பித்து கலப்பின மாடுகளாக மாற்றினார்கள்.
ஒரு மாடே இவ்வளவு பால் கறக்கிறதே, ஏன் நிறைய மாடுகளை வைத்துக் கொண்டு கஷ்டப்பட வேண்டும் என்று மாடுகளைக் குறைத்துப் பார்த்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இருந்த மாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தன.
அப்புறம் பால்காரர்கள் எங்கள் தெருக்களில் வரத் துவங்கினார்கள்.
கடைசியில் பெரும்பாலான வீடுகளில் ஒரு மாடு என்ற நிலை வந்து, கடந்த பத்தாண்டுகளில் எந்த வீட்டிலும் மாடுகள் இல்லை என்ற ஆகி விட்டது.
மாடுகள் நடந்த வீதிகளில் இப்போது பாக்கெட் பால்காரர்கள் மோட்டர் வாகனங்களில் பாம் பாம் ஒலியோடு போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
பசு மாட்டுக்கு காளை போடுதல் பற்றியும், ஆனால் இன்று காளைகளே இல்லாமல் போன கிராமங்களைப் பற்றியும் கூட எழுத நிறைய இருக்கிறது. எழுதுகிறேன். மாடுகளைத் தொலைத்த கிராமங்கள் பற்றி எழுத நிறையவே இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...