6 Jan 2019

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி?


தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி?
நிறைய நூல்கள் இருக்கின்றன தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பற்றி. எல்லாம் பெரிய பெரிய நூல்கள். அவைகளைப் படிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதே பெரிய வேலையாக இருக்கும். அப்புறம் அவைகளைப் படிக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது அடுத்த வேலை.
ஒரே விசயத்தைத்தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும் மாற்றி மாற்றிச் சொல்லியிருப்பார்கள். அதற்காக சலித்துப் போய் தன்னம்பிக்கையை விட்டு விடக் கூடாது.
தன்னம்பிக்கை என்பது தன் மேல் கொள்ளும் நம்பிக்கைதான் என்பது அந்த நூல்கள் சொல்லும் சாரம். இது தெரியாதா? என்று விசனப்பட்டு அது போன்ற நூல்களைத் தூக்கி தூர எறிந்து விடக் கூடாது. ஒருவர் எவ்வளவு தன்னம்பிக்கை இருந்திருந்தால் இப்படி ஒரு நூல் எழுதியும் சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள அந்த நூல்கள் உதவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்புறம் அந்த நூல்களில் நிறைய தன்னம்பிக்கையாளர்கள் பற்றிய கதைகளைச் சொல்லி இருப்பார்கள். அந்தக் கதைகள் எல்லாம் அவர்களுக்கே பொருந்தும். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை என்பதுதான் இந்த உலகின் நியதி என்பதால் அதில் உங்கள் கதைகள் எதையும் தேடாதீர்கள்.
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதில் ஒரே ஒரு சூட்சமம் இருக்கிறது. அது தெரிந்தால் போதும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை அது தானாகவே வளரும் என்பது ஓர் எளிய சூட்சமம். அந்த சூட்சமத்தின் சாரம் இதுதான்,
அவநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும். அதுதான் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள சிறந்த வழி. இதை யாரும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். சொன்னால் பெரிய பெரிய தன்னம்பிக்கை நூல்கள் விற்காமல் போய் விடும். தன்னம்பிக்கைப் பேச்சாளர்களுக்கு பேச வாய்ப்பில்லாமல் போய் விடும்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...