6 Jan 2019

இவ்வாறு பேசுகிறார் கணியனார்


பேச்சு குறித்துப் பேசுமாறு கணியனார் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
எவ்வளவோ பேசியிருக்கிறார், எவ்வளவோ தலைப்புகளில் பேசியிருக்கிறார் கணியனார். பேச்சுக் குறித்து பேசுமாறு சொல்லப்படுவது இதுவே முதல்முறை அவருக்கு.
அவர் பேசத் தொடங்கினார்...
"தன்னம்பிக்கையாக எல்லா இடங்களிலும் பேசக் கூடாது. பேசக் கூடாத இடங்களும் இருக்கின்றன. அந்த இடத்தில் மெளனமாக இருப்பவரே உண்மையான தன்னம்பிக்கை மிகுந்தவர்.
பேசுவதை எல்லா நேரங்களிலும் தவிர்க்க முடியாது. சில நேரங்களில் பேச்சு உள்ளார்ந்த தன்மையிலிருந்தும் வெளிவருகிறது.
தோல்விக்காகப் பேச்சை நிறுத்தக் கூடாது. தோல்வி என்பது பேச்சில் இல்லை. பேசும் அணுகுமுறையில்தான் இருக்கின்றது.
மனஇறுக்கம் கோபமாகப் பேசச் செய்யும். மன உளைச்சல் விரக்தியாகப் பேசச் செய்யும். இரண்டுமே மனத்தோற்றமே. மனஇறுக்கம் போய் விட்டால், மன உளைச்சல் நீங்கி விட்டால் இயல்பான பேச்சு தானாக வந்து விடும்.
நமது மாறுபட்ட கருத்தை மென்மையாகவாவது எடுத்துச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் நமக்கு அப்படி ஒரு கருத்து இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாமல் போய் விடும். அதன் பிறகு என் கருத்துக்கு யாரும் மதிப்பு அளிக்கவில்லை என்று குதியாட்டம் போடக் கூடாது.
மென்மையாகச் சொல்வதால் காரியங்கள் நடக்காதது போல் தோன்றலாம். அதற்காக கடுமையைக் கைகொள்ளக் கூடாது. கடுமையாகச் சொல்வதை விட நாம் சொல்வதைச் சரியாகச் சொல்ல வேண்டும். சரியாகச் சொல்லக் கற்றுக் கொண்டு விட்டால் மென்மையாகச் சொல்வதோ, கடுமையாகச் சொல்வதோ ஒரு பிரச்சனையாகத் தெரியாது.
தேவையான நேரங்களில் மெளனமாக இருப்பது என்பது வேறு. எப்போதும் மெளனமாக இருப்பது என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. சரியான நிலையில் நின்று பேசித்தான் ஆக வேண்டும். அது ஏற்கப்படவில்லை என்பதோ, தோல்வியைத் தழுவுகிறது என்பதோ ஒரு பிரச்சனையே இல்லை.
தோல்வியைத் தழுவினாலும் சரியானப் பேச்சுகள் காலத்தைக் கடந்து நிற்கின்றன. காலத்தைக் கடந்து அதுதான் பின்பற்றுதலுக்கு உரியதாகிறது. ஆகவே சரியானப் பேச்சுக்கு நிகழும் தோல்விகள் என்பவைகள் தற்காலிகமானவைகளே. நிரந்தரமானவைகள் அல்ல."
கணியனார் பேசி முடித்தார்.
மெளனமாக கலைந்து சென்றனர் மக்கள்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...