18 Jan 2019

பேட்டை நாவல் விமர்சனம்


பேட்டை நாவல் முன்வைக்கும் அரசியல் மற்றும் உளவியல்
பேட்டை நாவல் தொடர்பான அரசியல், உளவியல் மற்றும் கருத்தாக்கம் சார்ந்த முன்னெடுப்புகளை உருவாக்கவும், உருவாக்கிய முன்னெடுப்புகளை விவாதித்து வளப்படுத்தவும் வழிகாட்டித் துணை நின்ற எம் பேராசிரியர் ஐயா குடவாசல் எம்.ஜி.ஆர். கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ. ஜான்பீட்டர் அவர்களுக்கும், பேட்டை நாவலை வாசிக்க வித்திட்ட திருவாரூர் மாவட்ட வாசக சாலை ஒருங்கிணைப்பாளர் அன்பு நண்பர் ஐயா நரேன் கிருஷ்ணா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழ்ப்பிரபா எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் பேட்டை நாவல் பின்வரும் சில அரசியல் கருத்துகளையும், உளவியல் பார்வைகளையும் முன்வைக்கிறது என்று கருதுகிறேன். வாசிப்புப் பார்வையில் இன்னொருவரின் கருத்துகளிலிருந்து இவைகள் மாறுபடலாம் எனினும் அவைகளை விவாதிக்கவும் கருத்து மாறுபாடுகளை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
விவாதிப்பதற்கும் பரிசீலிப்பதற்கும் முந்தைய எனது பார்வையாக இவைகளைக் கொள்ள வேண்டும். விவாதம் மற்றும் பரிசீலனைக்குப் பின்னான திருத்தங்களையும், மாறுபாடுகளையும் இதே போலே பின்னர் தொகுக்கவும் வெளியிடவும் செய்வோம்.
பேட்டை நாவல் முன்வைக்கும் அரசியல் மற்றும் உளவியல் என்பவைகளாக நான் கருதுபவைகள்,
சாதி அரசியல்
சிந்தாதரிப்பேட்டை உருவாகக் காரணமாக இருக்கும் மாடர்ன் பிட்டிடம் ராமர் தோட்டத்தில் மூர்த்தியப்ப நாராயண செட்டியார் கீரிப்பிள்ளையைச் சுட்டிக் காட்டுகிறார். கீரிப்பிள்ளையின் பெயரில் பிள்ளை என்று முடிவதால் அதை சாதிப்பெயர் என நினைத்துக் கொண்டு பிட் கேட்கிறார், "உங்கள் ஊரில் விலங்குக்கும் சாதி இருக்கிறதா?" என்று. இந்தியச் சமூகத்தின் சாதியைப் பற்றி ஆங்கிலேய துரைகள் நன்கு புரிந்து வைத்து இருந்திருக்கின்றனர். அதில் தலையிடாமல் அதே நேரத்தில் அதை அவர்கள் லாவகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வணிகத்தை நிலைநாட்டுவதில் குறியாக இருந்திருக்கின்றனர்.
இன்னொரு இடத்தில் பிட் இந்தியாவின் சாதி கட்டமைக்கு தமக்குப் பிடிபடவில்லை என்கிறார். மேலும் அதை ஆராய்ந்தால் பைத்தியம்தான் பிடிக்கும் என்று அவர் தந்தையார் கூறியதை நினைவு கூர்கிறார்.
வருணாசிரம அரசியல்
இறுதியாக பிட்டிடம் இந்தியச் சமூகவான்கள் சிந்தாதரிப்பேட்டையில் சாதி வாரியாக தெருக்கள் அமைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் போது இந்தியா-பாகிஸ்தான் பிரிவை ஆங்கிலேய அரசு அனுமதித்தது போல பிட்டும் அதற்கு அனுமதி அளிக்கிறார். அந்த அனுமதியை கூடி நின்று கேட்கும் இந்தியச் சமூகவான்கள் அவர் தரும் அந்த அனுமதிக்காக அவர் காலில் விழுகின்றனர், கோஷம் எழுப்பி மகிழ்கின்றனர், கை தட்டி ஆரவாரிக்கின்றனர்.
சிந்தாதரிப்பேட்டையில் வீதிகள் அப்படித்தான் அமைக்கப்படுகின்றன.
பிராமணர்களுக்கான அக்ரஹாரம்,
நாயக்கர்கள், செட்டியார்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள் என்று அவர்களின் இனவிருத்திக்கு ஏற்ப மூன்றோ நான்கோ தெருக்கள் அமைக்கப்படுகின்றன. அப்படித் தெருக்கள் அமைக்கப்பட்ட பின் வர்ணாசிரமத்தின் கடைசிப் படிநிலையில் இருக்கும் ஏவல் வேலைகளுக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் அத்தெருக்களில் வாழ அ‍னுமதி இல்லை என்று தெருவுக்கு வெளியே விரட்டி அடிக்கப்படுகிறார்கள். அவர்கள் தெருவில் நுழைய வேண்டும் என்றால்,
இறந்து போன ஜீவன்களைத் தூக்க வரலாம்,
மயிர்ச்சவரம், மாப்பிள்ளைச் சவரம் செய்ய வரலாம்,
மலம் அள்ள வரலாம்,
ஏவல் வேலைகள் செய்ய வரலாம்,
கடவுளை தூர நின்று பார்க்கலாம் என்று நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. ஊர்க்கிணற்றில் நீரெடுக்க அவர்களுக்கு அனுமதியில்லை. நல்லவேளையாக கூவம் நதி அப்போது தேங்காய்த் தண்ணீரைப் போல சுவையோடு ஓடியதால் அவர்களுக்கு அந்த அவசியம் இல்லாமல் போகிறது. ஊருக்கு வெளியே அவர்கள் கூவம் நதிக்கரையில் விளிம்பு நிலையில் தள்ளப்படுகிறார்கள்.
புறக்கணிப்பின் அரசியல்
கூவம் நதி நோய்த் தொற்றுக்கிருமிகளைப் பரப்பும் போது கூவம் நதிக்கரை பேட்டைவாசிகளே அதிகம் பலியாகிறார்கள். கூவம் நதியின் வழியாக ஊடுருவி கடல் பாம்புகள் உள்ளே வரும் போது அவைகள் தீண்டி அவர்களே அதிகம் பலியாகிறார்கள்.
கூவம் நதியின் துர்நாற்றத்தைச் சுமந்து, கொசுக்கடிகளைத் தாங்கிக் கொண்டு, நோய்க்கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்கள் அவல வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக தமிழ்பிரபா நாவலில் பதிகிறார். அவல வாழ்வின் எஞ்சிய நிலையில் வேறுவழியில்லாமல் தெறித்து விழும் மகிழ்ச்சியாகவே அதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஒரு கட்டத்தில் சிந்தாதரிப்பேட்டையில் கூவம் நதிக்கரையில் திரண்டு வரும் மக்கள் இடம் போதாமல் கோணிகள் மற்றும் தார்ப்பாய்களைக் கூரைகளாக்கிக் கொண்ட நடைபாதைவாசிகளாகி விடுகின்றனர்.
வாக்குவங்கி அரசியல்
அரசாங்கமே பேட்டைவாசிகளுக்கு குடிசை வீடுகள் கட்டிக் கொடுக்கிறது. அது போதாமல் அப்புறம் வரிசையான கூவத்தை ஒட்டி ஓட்டு வீடுகள் கட்டி கொடுக்கிறது. கடைசியாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட நான்கு ப்ளாக்குகள் உருவாக்குகின்றது. இதுவும் கூட அரசியல்வாதிகள் ஒரே இடத்தில் ஓட்டுக்கேட்பதற்கு வசதியாக இருப்பதற்காகத்தான் என்று தமிழ்ப்பிரபா சொல்கிறார். என்றாலும் துர்நாற்றமெடுத்த கூவத்தின் சேரிப் பகுதிகளில் வாழும் பேட்டைவாசிகளுக்கு ஹவுசிங் போர்டு குடியிருப்பு ஒரு கனவாக இருப்பதை ருபனின் அம்மா ரெஜினாவின் மூலம் அறியலாம். அவளுக்கு நேரும் மனப்பிறழ்வுக்கு பஜார் தெருவில் இருக்கும் அருவருப்பையும் ஒரு காரணமாகச் சுட்டலாம். அதைப் போக்கிக் கொள்ள அவள் மாமியார் கிளியாம்பாளைப் பற்றி அறிந்து கொண்டு அவளைப் போல மனம் பிறண்டு பேயாட்டம் போடுகிறாள்.
மதமாற்ற அரசியல்
சாதியின் பெயரால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களை கிறித்துவம் எப்படி தன்னுள் இழுத்துக் கொள்கிறது என்பதையும் இந்நாவல் பேசுகிறது. மதுரையிலிருந்து வரும் பால் மோசஸ் எனும் மோசஸ் ஐயா எனும் பாஸ்டரய்யா ராமர் தோட்டத்தின் சேரிகளுக்குச் செல்கிறார். இயேசு கிறிஸ்துவை அறிமுகம் செய்கிறார். மக்களின் குறைகளுக்காக அவர் ஜெபம் செய்கிறார். பணமில்லாதவர்களுக்கு மளிகை சாமான்கள் வாங்கித் தருகிறார். நம்பிக்கையோடு ஜெபித்தால் நோய் குணமாகும் என்ற கருத்தை விதைக்கிறார். பால்மோசஸ் அந்தப் பேட்டைவாசிகளுக்கு மோசஸ் ஐயாவாகி இறுதியில் பாஸ்டரய்யாவாகி விடுகிறார். அங்கே இருப்பவர்கள் அனைவரையும் ஞானஸ்தானம் செய்வித்து அல்லேலூயா சொல்லவித்து இயேசுவின் சுவிசேஷ ஜெபவீட்டை நிறுவுகிறார். இப்படித்தான் ரெஜினாவின் மனப்பிறழ்வையும் ஜெபத்தின் மூலமாக அவர் குணம் செய்கிறார். அதற்கு நன்றிக்கடனாக ரெஜினா தேவஊழியம் செய்வதற்கு தன்னையே ஒப்புவிக்கிறாள். தனக்குப் பிறக்கும் மகன் ரூபனையும் வருங்காலத்தில் தேவஊழியம் செய்வதற்கு சம்மதிக்கிறாள். தனக்கு ஹவுசிங் போர்டு வீடு கிடைத்தது கூட ஜெபத்தின் சக்திதான் என்று சாட்சி சொல்கிறாள். தேவஊழியத்தின் காரணமாக அவள் கணவனோடு உறவு கொள்வதை விலக்குகிறாள். அணிமணிகளைத் துறந்து வெள்ளாடை அணிகிறாள். பாஸ்டரய்யாவின் கருத்தின் படி இயேசு கிறிஸ்துவே வணங்கப்பட வேண்டியவர், மாதா வணங்குவதற்குரியவர் அல்லர் என்ற கருத்துகளில் உடன்படுகிறாள். இயேசு கிறிஸ்து இரண்டாம் வருகையின் போது தன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் அவள் இறுதிகாலம் வரை வாழ்கிறாள்.
தனது மகன் ரூபனும் தன்னைப் போலவே வாழ்வான் என்று எதிர்பார்த்தவளுக்கு அதிர்ச்சியான இடம் நாவலில் உண்டாகிறது. ரூபன் இரவுப்பாடசாலைக்கு வரும் முஸ்லீம் பெண்ணான முபீனாவை விரும்புகிறான். அந்தக் காதலைச் சேர்த்து வைக்குமாறு இயேசுவிடம் ஜெபிக்கிறான். அவனது ஜெபத்துக்கு இயேசு நியாயம் செய்யவில்லை என்று முதன் முறையாக அவன் மத நம்பிக்கையிலிருந்து விலகுகிறான். இதை ஒரு பிள்ளைப்பிராயத்துக் காதல் என்றாலும் மதத்தை ஒரு பொருட்டாக நினைக்காதத் தன்மையைக் காதலே உருவாக்குகிறது என்பதை இதன் மூலம் அறியலாம் என்றே நினைக்கிறேன்.
வேலைவாய்ப்புகளின் பின்னுள்ள அரசியல்
பேட்டையிலிருந்து கேரம் ஆடி விளையாட்டு வீரராகி அதன் மூலம் அரசு வேலைவாய்ப்பு பெற்ற லாரன்ஸ் தனது மகன் செளமியன் பேட்டைப் பிள்ளைகளோடு விளையாடுவதை விரும்பாதவர். தனது சமூகத்திலிருந்து வளர்ந்த ஒருவர் பின் தனது சமூகத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை என்றாலும் செளமியனின் பிடிவாதமான நடத்தையினால் அவர் பேட்டைவாசிகளான ரூபன் மற்றும் பாலுவோடு நட்பு கொள்வதை அனுமதிக்கிறார். தனது வீட்டில் வந்து விளையாட சம்மதிக்கிறார். அப்படித்தான் அவர் பாலுவின் போர்டு ஆட்டத்திறத்தைக் கண்டுபிடித்து பாலுவை மாசிலாமணி எனும் மாசிலாவின் கையில் கொண்டு சேர்க்கிறார். பாலுவே நாவலின் இறுதியில் பேட்டைவாசிகளுக்கான இரவுப்பாடசாலை மற்றும் பேட்டைப் பிள்ளைகள் போர்டு ஆடுவதற்கான வசதிகளை ஜெபவீட்டை வாங்கி உருவாக்குகிறான். பொருளாதார வேறுபாடுகளை நட்பு எனும் உணர்வே தகர்க்கிறது. அந்த நட்பே பாலுவுக்கு செளமியனின் அப்பா லாரன்ஸ் மூலம் ஒளிமயமான எதிர்காலம் உருவாகக் காரணமாகிறது.
அந்நியமயமாதலின் பின்னணிகள்
ரூபனும் கூட செளமியனின் உதவியால்தான் தேர்வுகளில் தேர்வாகிறான். பின்னர் ஐ.டி. கம்பெனி ஒன்றில் வேலைக்குச் செல்கிறான். நட்பின் வலிமையாக இதனைக் கொள்ளலாம். ‍ரூபன், பாலு முன்னேற காரணமாக இருந்த செளமியன் மது, மாது, போதை என்று அடிமையாகி இளம் வயதிலேயே இறப்பது ஒரு முரண். செளமியன் மற்றும் அவனது தந்தையின் மரணத்தை எதிர்கொள்ள முடியாமல் ரூபன் மனம் பிறழ்வது நாவலின் முக்கிய முடிச்சு. ஒருவேளை செளமியன் வெறும் படிப்பு என்று மாத்திரம் இல்லாமல் விளையாட்டிலோ, கலையிலோ ஈடுபட்டிருந்தால் மது மற்றும் போதையின் உச்சத்திலிருந்து விலகி இளம் வயதிலேயே மரணமடையாமல் இருந்திருப்பானோ என்ற கேள்வியும் எழுவே செய்கிறது. அவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பு பாலு மூலமாகவோ, ரூபன் மூலமாவோ இருக்கவே செய்கிறது. ஆனால் செளமியன் அரசுத்தேர்வு எழுதி வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறான். அந்த நேரத்தில் ரூபனோ, பாலுவோ அவனோடு தொடர்பில் இருந்து பழகியிருந்தால் அவன் பூமாவோடு பொருந்தாத உறவில் இல்லாமல் மனம் மாறியிருப்பானோ என்று கேள்வியும் எழச் செய்கிறது. ரூபன் அந்த நாட்களில் தனது ஐ.டி.வேலை, பேஸ்புக், காதலி என்று பிஸியாக இருக்கிறான். நட்போடு இருப்பது மட்டுமல்லாமல் நட்பில் தொடர்ந்து இருப்பதும் முக்கியமானதாக இந்நாவல் மறைமுகமாக வலியுறுத்திச் சொல்வதாகக் கூட இதைப் பார்க்கலாம் என்று கருதுகிறேன்.
போதைக்கு அடிமையாகும் செளமியனுக்கு ஜான்டியின் நட்பு கிடைக்கிறது. அவன் மூலம் டாடி என்ற ஆங்கிலோ இந்தியரின் நட்பு கிடைத்து போதையில் அவர்கள் இருவரும் புதிய பாதைகளைத் தேடுகின்றனர். டாடியின் திடீர் மாரடைப்பு மரணத்துக்குப் பிறகு இருவரும் பஞ்சர் ஒட்டும் சொல்யூசன், நெயில்பாலிஸ், மெடிக்கல் ஷாப் மருந்துகள் என்று போதையைப் பெற்று நரம்பில் குத்தி ஊசியடிக்கும் நிலை வரை செல்வது நாவலில் காட்சிப்படுத்தப்படுகிறது. செளமியனுக்கு பூமாவோடு கூடிய காதலும் காமமும் என்பது பொருந்தாத காதல் என்றாலும் அதன் பாதிப்பிலிருந்து வெளிவர முடியாமல் அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். அன்பு என்ற ஒன்று தான் விரும்பும் ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெறாத போது அந்நியமாகும் தன்மையை செளமியனிடம் காண முடிகிறது.
வளர்ச்சி என்ற பெயரிலான புறந்தள்ளும் அரசியல்
நேப்பியர் பூங்கா எனும் மே தினப் பூங்கா பேட்டைவாசிகளின் கிரிக்கெட் மைதானம். அது மெட்ரோ ரயிலுக்காக கையகப்படுத்தப்படுவதால் ஜான்டி மோசமான குடிகாரன் ஆகிறான். இது போன்ற விளையாட்டுப் பூங்காக்கள், மைதானங்கள் இல்லாமல் பேட்டைவாசிகள் பெருங்குடிகாரர்களாக, குடிநோயாளிகளாக மாறி அழிவதை காட்சிப்படுத்தும் தமிழ்ப்பிரபா அதன் மூலம் சொல்ல வருவது வளர்ச்சி என்ற பெயரால் முன்னெடுக்கும் அரசியலைத்தான் என்று நினைக்கிறேன். இதை நாம் நான்கு வழிச் சாலைகளுக்காக, மின்கோபுரங்களுக்காக கையகப்படுத்தும் விவசாய நிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். கிராமங்களில் விவசாய நிலங்கள் குறிவைக்கப்படுகிறது என்றால் நகரம் மற்றும் மாநகரங்களில் விளம்பு நிலை மக்களுக்கான கேளிக்கை மற்றும் விளையாட்டு இடங்கள் குறி வைக்கப்படுகின்றன.
பணியிடங்களின் உள் அரசியல்
ரூபன் பணியாற்றும் ஐ.டி. துறையில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவராக இருப்பதால் குழுவிலிருந்து ஒதுக்கப்படும் நிகழ்வைப் பற்றி நாவலில் பேசுகிறார் தமிழ்ப்பிரபா. அதிலிருந்து உண்டாகும் வெறி அவரை கடுமையாக உழைக்கச் செய்கிறது. அவர் சிறந்தப் பணியாளர்களுள் ஒருவராகத் தேர்வாகும் நிகழ்வையும் சொல்கிறார். வாய்ப்புகள் சமமாகக் கிடைக்கும் போது எவராலும் சாதிக்க முடியும் என்பதை நாவல் பேசும் இடம் இது.
அதே போலே ஐ.டி. பணியாளர்களிடம் அமெரிக்க, ஐரோப்பிய கிளெய்ண்டுகள் நடந்து கொள்ளும் விதமும், ஆசிய நாடுகளைச் சார்ந்த கிளய்ண்டுகள் நடந்து கொள்ளும் முறையும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆசிய நாடுகளில் காணப்படும் அதிகார ஆதிக்க முறை இலங்கைப் பிரஜையான ஜனக சந்திரஜித் ரூபனை அணுகும் முறையிலிருந்து தெரிகிறது. அதுவும் ரூபன் தமிழனென்று தெரிந்த பிறகு ஜனக சந்திரஜித் தரும் பணிசார் அழுத்தம் ஒருவகையில் இலங்கை-தமிழர் பிரச்சனையை நினைவு கூர்வது போலவும் தோற்றம் தருகிறது. அந்த இடத்தில் ரூபன் சொல்லும், Process pressure is better than people pressure என்ற பழமொழி அர்த்தப் பொதிவு வாய்ந்தது.
மதங்களைக் கடக்கும் மனிதநேயம்
ஐந்து மணி நேரத்தைத் தாண்டி போதை இல்லாமல் இருக்க முடியாத யோசேப்பு மதங்களைக் கடந்த அரசியலைப் பேசும் நாவலின் பாத்திரம். அவன் வேளாங்கண்ணிச் சென்று மாதாவை வழிபடுபவன். அதே நேரத்தில் மாலை போட்டு சபரிமலைக்கும் செல்கிறான். அதிகாலை நேரக் குடியர்களில் ஒருவனான யோசேப்பைப் பொருத்தவரை அறிய வரும் செய்தி மனிதரை நேசிக்கும், மனிதரை உய்விக்கும் எந்த மதத்தையும் எவரும் கடைபிடிக்கலாம் என்பதே.
நவீன சுரண்டலின் அரசியல்
கட்அவுட் மற்றும் பேனரின் ஓவியக் கலைஞராக இருக்கும் பூபாலன் ப்ளக்ஸ் எனும் தொழில்நுட்பம் வந்த பிறகு தொழிலில் பின்னடைவைச் சந்திக்கிறார். பெயிண்டையும், பிரஸ்ஸையும் விடுத்து அவர் ஏ.டி.எம். காவலாளியாகச் செல்கிறார். விவசாயத்தை இழந்து நகரத்துக்கு வேலைக்குச் செல்லும் ஒரு விவசாயியோ அல்லது அபார்ட்மெண்டுக்கு வாட்ச்மேனாக ஆகும் வாழ்ந்து கெட்ட ஒரு மனிதரைப் போன்ற தோற்றம் மாநகரம் விலக்கித் தள்ளிய போதும் அதிலிருந்து விலகாமல் ஏ.டி.எம். காவலாளியாகத் தொடரும் பூபாலனிடம் தெரிகிறது. எவ்வளவோ சம்பாதித்த அவருக்கு காலலாளியாக வேலை பார்ப்பதில் வரும் மாத வருமானம் எட்டாயிரத்தில் மூவாயிரத்தை அவரை வேலைக்குச் சேர்த்து விட்ட கம்பெனி எடுத்துக் கொண்டு ஐயாயிரத்தை மட்டும் அவரிடம் கொடுக்கும் கம்பெனிகளின் உறிஞ்சல் தனத்தையும் நாவல் படம் போட்டுக் காட்டுகிறது.
மத்திய அரசு ஊழியராக இருக்கும் லாரன்ஸை அவருக்கு இருக்கும் மெடிக்கல் கிளைமிற்காகத் தனியார் மருத்துவமனைகள் இஷ்டத்துக்கு மருத்துவம் பார்த்து முப்பதெட்டு லட்சத்தை விழுங்கி விட்டு அவரைப் பிணமாய் வெளித்தள்ளும் காட்சியும் நாவலில் உள்ளது. தனியார் மருத்துவமனைகள் செய்யும் நோய்கள் குறித்த அரசியல் நோய்க்கிருமிகளின் தாக்குதலை விட மிக மோசமானதாக இருக்கும் இடத்தை வெளிகாட்டும் இடமாக அதைப் பார்க்கலாம்.
இடம்பெயர்தலின் & இடமாற்றத்தின் துயரச் சுமைகள்
கேரள மாநிலத்திலிருந்து சென்னை மாநகரில் நர்ஸாகப் பணியாற்றும் ரூபனின் காதலியும் நாவலின் இறுதியில் ரூபனின் மனைவியாகவும் ஆகும் இவாஞ்சலின் பெண்கள் விடுதியில் உள்ளாகும் புறக்கணிப்புகள் அழகாய் அவள் இருப்பதாக கருதிக் கொண்டு தங்களை அழகற்றவர்களாக கருதிக் கொள்ளும் பெண்கள் நிகழ்த்தும் வன்முறையாக நீள்கிறது. ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலம் வருவதால் அவர் எதிர்கொள்ளும் துயராகவும் அதை அரசியல்படுத்தலாம். ஒரு கட்டத்தில் பொங்கி எழும் அவளுக்காக ஆறுதல் கரங்கள் நீட்டப்படுகின்ற இடம் சென்னை மாநகரின் இன்னொரு இளகிய முகத்தைச் சொல்கிறது.
அவரவர் பேட்டையில் இடுகாடு இல்லாமல் இன்னொரு பேட்டையில் இருக்கும் இடுகாட்டைப் பயன்படுத்த நேரிடும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அரசியலை கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்கு லாரன்ஸின் பிணம் எடுத்துச் செல்லப்படும் காட்சியில் விளக்கப்படுகிறது. கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்குச் செல்லும் போது கோயிலின் அருகே பறைமேளம் இசைக்கப்படக் கூடாது என்ற கட்டுபாட்டையும் இதனால் சிந்தாதரிப்பேட்டைவாசிகள் கடைபிடிக்கின்றனர். அதையும் அது போன்ற மற்றும் சில கட்டுபாடுகளையும் மீறுவதால் ஏற்படும் பிரச்சனைகள் கலவரமாகவும் வெடிக்கின்றன.
பேரன்பின் வசை மொழிகள்
நாவலின் தொடக்கம் தொட்டு இறுதி வரை பயணிக்கும் பாத்திரம் நாகம்மாள் எனும் நகோமியம்மாள். எதார்த்தமாக எப்படி வாழ முடியுமோ அப்படித்தான் வாழ முடியும் என்கிற வாழ்வியலுக்குப் பொருத்தமானவர் அவர். அவரின் மனதிலோ வார்த்தைகளிலோ எந்த வித இலைமறை காய்மறையோ இருப்பதில்லை. மனதில் பட்டதை வசை மொழியோ, வசவு மொழியே அதை இயல்பாகப் பேசுபவர் அவர். சில நேரங்களில் அப்படிப் பேசியதற்காக அவர் யேசப்பாவிடம் மன்னிப்பும் கோருகிறார். எதையும் கொண்டாட்டமாகவும் வெள்ளந்தியாகவும் அணுகும் அவர் ரூபனின் மீது பேரன்பு கொண்டவர். அந்த பேரன்பே ரூபனின் அம்மா தொடங்கி அவனது மனைவி வரை காட் மதர் போன்ற தோற்றத்தை நகோமியம்மாவுக்குத் தருகிறது. மனிதர்களுக்காகவே மதம், சடங்கு, சம்பிரதாயம், சமூக கட்டமைப்புகள் எல்லாம் என்பதில் தெளிவாக இருக்கும் ஒரு பாத்திரமாகவே அவர் நாவலில் காட்சி தருகிறார். தனது பேரன் ரூபனுக்காக வன்முறையிலும் இறங்கத் தயாராக இருப்பவர். ரூபனின் மகனையும் அவரே ஆயாவாக இருந்து வழிநடத்தப் போகுபவர் என்றாலும் அதற்குள் நாவல் முடிந்து விடுகிறது. ரூபனின் அப்பா ஜெயசீலன் பல காலம் ரெஜினாவை விட்டுப் பிரிந்திருந்தாலும் அந்தப் பிரிவுத் துயர் அண்டாமல் ரூபனின் குடும்ப தூணாக இருப்பர் அவரே. ரூபனின் பாட்டியும் ரெஜினாவின் மாமியாருமான கிளியாம்பாளுக்கு பக்கத்துணையாக இருந்தவரும் அவரே. ரூபனின் அம்மா ரெஜினா ஜெபத்தில் இருந்தாலும், ரூபன் அதை மறுத்தாலும் அவர்களுக்குள் ஒரு பாலமாய் இருப்பவரும் அவரே என்பதன் அடிப்படையில் மூன்று தலைமுறைகளாக வீட்டின் சமரசம்வாதியாக திகழ்பவர் நகோமியம்மாள். அவரே நாவலின் கதையை சிங்கப்பூரான்-கிளியாம்பாள், குணசீலன்-ரெஜினா, ரூபன்-இவாஞ்சலின் என்று கடத்துகிறார் எனலாம்.
உட்சாதிகளின் அரசியல்
ரூபன் திருமணத்தின் போது குறுக்கிடும் உட்சாதிப் பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட இரு பிரிவுகளுக்கு இடையே ஒரு குறுக்கீடு வந்த போதும் காதலே வெல்கிறது. காதலே மதம், சாதி, உட்சாதிப் பிரிவினைகளை அழிக்கவல்ல சரியான அரசியல் சக்தி என்பது புலனாகிறது.
தோழமைகளின் பரிவும் பிரிவும்
கல்வியின் மூலம் ஐ.டி. பணியாளர்களாக உள்ள ரூபன் மற்றும் நண்பர்கள் சாதி, மத பாகுபாடு இல்லாமல், ஆண்-பெண் பேதமில்லாமல் பழகுவதையும் நாவல் காட்சிப்படுத்துகிறது. ரூபனோடு ஏற்படும் பிரிவினையை கிரண்யா நாசுக்காக எதிர்கொள்ளும் விதம் அழகானது. காதலுக்குப் பின் உண்டாகும் தோழமையைக் காட்சிப்படுத்தும் இடமாக அது திகழ்கிறது.
மீண்டெழுதலில் பின் நிற்கும் மனித நேயம்
நண்பன் மற்றும் நண்பனின் தந்தையின் மரணங்கள் ஏற்படுத்தும் மனப்பிறழ்வால் பாதிக்கப்படும் ரூபன் நண்பர்களின் நட்பாலும் அவர்களின் பொறுமையான எதிர்கொள்ளல்களாலும் ஹோமில் சேர்க்கப்பட்டு மீள்கிறான். சக மனிதர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாகும் போது எதிலும் மனிதரால் மீள முடியும் என்பது நாவல் உள்ளீடாக உணர்த்தும் உண்மை.
சக மனிதர்கள் மேல் கொள்ளும் மனிதநேயமும், பரிவுணர்ச்சியுமே சுரண்டல்கள், பறித்தல்கள், சூறையாடல்கள் இவைகளைத் தாண்டியும் மனிதகுலத்தை மகிழ்ச்சியோடு வாழ வைக்கிறது. அத்தகைய மனிதநேயமும் அந்த மனிதநேயத்துக்குக் குறுக்கீடாக உள்ள அறியாமை, சுயநலம், சுரண்டல்கள், சமனின்மை போன்றவைகள் பரஸ்பர அன்பின் மூலம் சமன்செய்யப்பட வேண்டும் என்பதே பேட்டை எனும் இந்நாவல் பேசும் முடிவான அரசியல் எனலாம். அவ்வகையில் பேட்டை பேசும் இவ்வரசியல் என்பது விளிம்பு நிலை மக்களுக்கான அரசியல் மட்டுமன்று, உலகெங்கும் வாழும் சுரண்டப்பட்ட, மனம் நலம் பிறழ்ந்த மனிதர்களுக்கான மனிதநேய அரசியல் எனலாம்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...