19 Jan 2019

சில மாடுகளும் பல பால் பாக்கெட்டுகளும்


சில மாடுகளும் பல பால் பாக்கெட்டுகளும்
நான் சிறுவனாய் இருந்த நாட்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாடாத வீட்கள் ஒன்றிரண்டு இருந்தால் ஆச்சரியம்.
இப்போது பார்க்கையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடும் வீடுகள் ஒன்றிரண்டுதான் இருக்கின்றன.
மாடுகள் இல்லாத எல்லாரின் வீடுகளிலும் மாடுகள் கோலமாய் வரையப்பட்டு இருக்கின்றன. அவ்வளவுதான் அவர்களால் முடிந்த மாட்டுப் பொங்கல்.
நகரங்களில் கூட மிகு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு சிலர் மாடுகளை வளர்ப்பதைப் பார்க்கும் போது ஓர் ஆச்சரியமாக வரவே செய்கிறது.
நகரங்களில் சுற்றித் திரியும் மாடுகளைப் பார்க்கும் போதும் அதே ஆச்சரியம். கிராமத்து மாடுகளை விட வெகு புஷ்டியாக இருக்கின்றன.
நகரத்து மாடு ஒன்றின் வயிற்றிலிருந்து கிலோ கணக்கில் பாலிதீன் பைகள் எடுக்கப்பட்ட செய்தியைப் பின்னொரு நாளில் நாளிதழ் ஒன்றில் படித்த போது அதிர்ச்சியாகவும் இருந்தது.
வீட்டில் விஷேசம் என்றால் முன்கூட்டியே பால் கறக்கும் வீடுகளில், பால்காரர்களிடம் பாலுக்கான தேவை குறித்து சொல்லி வைத்து வாங்கி வரும் அந்த நாட்களின் நினைவும் மனதில் வந்து போகிறது.
இப்போது அந்தக் கவலைகள் எதுவும் இல்லை. அந்த நேரத்தில் செல்பேசியில் அழைத்துச் சொன்னால் வீடு தேடி பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து போட்டு விட்டுப் போகிறார்கள்.
மாடுகளின் பால் மடியும், பால் பாக்கெட்டுகளும் ஒன்றா என்ன?
மாடுகளையும் பாலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது,
மாடுகள் குறைந்து விட்டன. ஆனால், பால் பாக்கெட்டுகள் அதிகரித்து இருக்கின்றன.
ஒவ்வொரு முறை பால் குடிக்கும் போது இது எப்படி என்று யோசிக்கத் தோன்றுகிறது? விடைதான் கிடைத்தபாடில்லை. ஒருவேளை குடிக்கும் பாலின் புரதம் இதைச் சிந்தித்து விடை காண்பதற்குப் போதவில்லையோ என்னவோ!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...