18 Jan 2019

பேட்டை நாவல் முன்வைக்கும் கருத்தாக்கங்கள்


பேட்டை நாவல் முன்வைக்கும் கருத்தாக்கங்கள்
தமிழ்ப் பிரபாவின் பேட்டை நாவல் முன்வைக்கும் கருத்தாக்கங்கள் என்று நான் கருதுபவைகளை முன்வைக்கிறேன்.
இதன் மாறுபாடுகளையும், திருத்தங்களையும் விவாதித்துப் பரிசீலிக்க தயாராக இருக்கிறேன்.
நிராதரவு என்ற கருத்தாக்கம்
பேட்டை நாவல் விளிம்பு நிலை மக்களிடமிருந்து அடிப்படை ஆதாரங்கள் பறிக்கப்படுவதையும், துரத்தி அடிக்கப்படுவதையும், அவர்கள் போதையால் துண்டாடப்படுவதையும் பேசுகிறது.
மரணம் குறித்தக் கருத்தாக்கங்கள்
நாவலில் கவனம்பெறத் தக்க வகையில் மரணிப்பவர்கள் அநேகம். நாவலை வைத்துக் கொண்டு மரணிப்பவர்களின் பட்டியலை தயாரித்தால்,
            1. கூவம் நதியால் ஏற்படும் தொற்றுநோயால் மரணிப்பவர்கள்,
            2. கடல்பாம்பு தீண்டி மரணிப்பவர்கள்,
            3. குடி போதையால் மரணிப்பவர்கள்,
            4. மருத்துவமனைகளில் மரணிப்பவர்கள்,
            5. தொழில் போட்டியின் பழிவாங்குதல் மரணிப்பவர்கள் ஆகியோர் உள்ளனர்.
இம்மரணங்களின் பின் நிற்கும் காரணிகளாக,
            விளிம்பு நிலை மக்களின் மீதான சமூக மற்றும் அரசு கட்டமைப்பின் அலட்சியம், புறக்கணிப்புகள், அக்கறையின்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் அடிப்படைக் கட்டமைப்புகள் பறிபோதல், வேலைவாய்ப்புகளின் உறுதியற்ற தன்மைகள் மற்றும் சமவாய்ப்புகளின்மையால் நிகழும் சுயஅந்நியமாதல் ஆகியவற்றையும் மரணங்களுக்கானக் காரணிகளாகக் குறிப்பிடலாம்.
உளவியல் கருத்தாக்கங்கள்
            நாவலில் நிகழும் அகால மரணங்கள் உருவாக்கும் மனப்பிறழ்வு நாவலின் மிக முக்கியமான பேசுபொருள் எனலாம். ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பும் சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அப்பேசுபொருள் முன்வைக்க விழைகிறது. ஒவ்வொருவரும் கல்வி கற்று அதன் மூலம் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதற்கான அணுக்கமான சூழ்நிலைகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான தன்மையோடு வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவமே அப்பேசுபொருளின் சாரம் என்று சொல்லலாம்.
சமூகவியல் கருத்தாக்கங்கள்
            தவிர்க்க முடியாத பல காதல்கள், அவைகளின் கைகூடாதத் தன்மைகள், தற்காலத்தின் பிரேக் அப் குறித்த நிகழ்வுகள் ஆகியனவும் நாவலில் ஊடாடுகின்றன. இவைகளெல்லாம் நிகழ்கால சமூகக் கட்டமைப்பின் குறியீடுகள் என்றாலும் கட்டிய மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணோடு வாழும் பேட்டைவாசி ஆண்கள் சிலரின் வாழ்முறையும், அதைப் பெரிதுபடுத்திக் கொள்ளாத பெண்களின் அணுகுமுறையும், மீண்டும் ‍அதே ஆண் கட்டிய மனைவியிடம் திரும்பி வரும் போது அதை ஏற்றுக்கொள்ளும் பெண்ணின் மனப்பாங்கும் நாவலில் இடம்‍ பெறுகிறது. இதை வெறுமனே பேட்டைவாசிகளின் வாழ்முறையாக மட்டுமே பார்க்க முடியாது. சிலப்பதிகாரக் காலத்திலிருந்தே தொடரும் பெண்டிரின் வாழ்முறையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் கோவலன் அப்படி கண்ணகியிடமிருந்து பிரிகிறான், வெறொரு பெண்ணோடு வாழ்கிறான், மீண்டும் கண்ணகியோடு சேர்கிறான். பிரிவுக்கானக் காரணங்கள் வேறாக இருந்தாலும் அதே போன்ற கதைத்தன்மை தொடர்கதையாக இருப்பதை உணரலாம்.
மதமாற்றக் கருத்தாக்கங்கள்
            தீண்டாமை, புறக்கணிப்பு, ஏழ்மை போன்றவை மதமாற்றத்திற்கானக் காரணிகளாக அமைகின்றன. விளிம்பு நிலை மக்களின் கிறித்துவம் மற்றும் பெளத்தம் சார்ந்த மதமாற்றங்கள் அத்தகைய தன்மையைச் சார்ந்தவை. இந்நாவலில் அத்தகைய கிறித்துவ மதமாற்றம் பற்றிப் பேசப்படுகிறது. கிறித்துவ மதத்திற்குள் நிகழும் உள் மதமாற்றம் குறித்தும் பேசப்படுகிறது.
            கிறித்துவச் சபைகள் உண்டான ஆரம்ப காலக் கட்டம் சேவை உணர்வு நிரம்பிய தன்மையோடு இருப்பதையும், நிறுவனமயமாகக் கெட்டிப்பட்டப் பிறகு முறைகேடுகள், பாலியல் பிரச்சனைகள் மிகுவதையும் நாவல் பதிவு செய்கிறது. நிறுவனமயமாக்கப்படும் அமைப்புகள் பிற்காலத்தில் நோக்கத்திலிருந்து விலகி எவ்வாறு பின்னடைவைச் சந்திக்கின்றன என்பதன் சாட்சியமாக இதை நோக்க இயலும்.
மாறும் நம்பிக்கைகள் குறித்த கருத்தாக்கங்கள்
நாவலின் துவக்கத்தில் ரூபனின் தாயான ரெஜினாவுக்கு நிகழும் மனப்பிறழ்வு மதநம்பிக்கையின் மூலம் குணமாவதாகவும், அதே போன்ற மனப்பிறழ்வு ரூபனுக்கு நிகழும் போது மருத்துவத்தின் மூலமே அது குணமாவதாகவும் நாவல் சித்தரிக்கிறது. நோய் குணமாதல் குறித்த நம்பிக்கைகள் மதத்திலிருந்து மருத்துவம் நோக்கி மாறும் கருத்தாக்கத்தை நாவல் இவ்வகையில் பதிவு செய்கிறது. அதே நேரத்தில் மருத்துவமனைகள் சாகப் போகின்ற ஒருவருக்கு லட்சக் கணக்கில் செலவு செய்ய வைத்து மரணமடைய வைக்கும் அறமற்ற மருத்துவத்தையும் நாவல் காட்சிப்படுத்துகிறது.
வாதைகளின் மாற்றங்கள்
 இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பு விளிம்பு நிலை மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகள், புறக்கணிப்புகள் உடல் வாதை சார்ந்ததாகவும், சுதந்திரத்திற்குப் பின் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் மனம் சார்ந்ததாகவும் அமைவதையும் பேட்டை நாவல் பேசுபொருளாக ஆக்கியிருக்கிறது. அந்த மனவாதையே விளிம்புநிலை மக்களை குடி மற்றும் போதையில் ஆறுதல் காண வைக்கிறதோ என்ற கருத்தாக்கத்தையும் இந்நாவல் மூலம் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.
நகரமயமாதலின் கருத்தாக்கங்கள்
நகரமயமாதலின் கோரப்பிடி விளிம்பு நிலை மக்களின் மீதே முதலில் இறுகுகிறது. அவர்களே இடம் பெயர கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்களே தங்களின் பூர்வக் குடியிருப்புகளை இழந்து வேற்றிடம் போக நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். தமது சொந்த நிலத்தில் வாழ்ந்தும் அவர்களே அதிகாரமற்றவர்களாக அகதிகள் போல இருக்கிறார்கள். அந்த வலிகளை, வேதனைகளை அவர்களே ஒரு சுயசரிதைத் தன்மையோடு சொல்லும் போது உண்டாகும் மனநெருக்கடிகள் ஒரு நெருடலைத் தந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பேட்டை நாவல் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைப் புரிந்து கொள்வதற்கான ஆழமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்கிறது என்றே சொல்ல வேண்டும்.
*****
பேட்டை நாவலைப் புரிந்து கொள்வதில் பின்வரும் கருத்து வரைபடங்கள் வாசிப்பவர்களுக்கு உதவக்கூடும்.







No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...