ஹோம்ஒர்க் குழந்தைகள்
வேண்டுதலை
நிறைவேற்றுவதற்காக மண்சோறு உண்பவர்களைப் பார்த்து இருக்கிறோம். எந்த வேண்டுதலும்
இல்லாமல் முதன் முதலாக மண்சோறு உண்டவர்கள் குழந்தைகள்.
குழந்தைகளைக்
கொண்டாட தனி மனநிலை வேண்டும். அதற்கான மனநிலையை இந்த உலகம் இழந்து கொண்டிருக்கிறது.
எப்போது குழந்தைகள் மூன்று வயதிலேயே படிப்பு எனும் பூர்ஷ்வாவின் காலடிகளுக்கு செருப்புகள்
போல பூட்ஸ்களை அணிந்து எல்.கே.ஜி., யு.கே.ஜி. என்று போனார்களோ அன்றே குழந்தைகள்
பெரியவர்கள் போல பாவிக்கப்படும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள்.
பாப்பாவுக்கு
இன்னும் இங்கிலீஷ் மட்டும் வர மாட்டேன்கிறது என்று சொல்லும் தகப்பனார் மற்றும் தாயிடம்
உங்கள் பாப்பாவின் வயது என்று கேட்டால், மூணரை என்கிறார்கள்.
அந்த பாப்பா
பேசும் மழலை எனும் மொழியை விடவா, அது பேசும் இங்கிலீஷ் எனும் மொழி அழகாக இருந்து
விடப் போகிறது.
தங்கச் சங்கிலி
அணிந்த குழந்தைக்கு மண்ணில் விளையாடும் உரிமை மறுக்கப்படுகிறது என்று சும்மாவா சொன்னார்
தாகூர்.
நர்சரி பள்ளிகளில்
சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு மழலையாக இருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட
சூழ்நிலையில்தான் குழந்தைகளைக் கொண்டாடும் கவிஞராக முதல் மண்சோறு உண்டவர்கள் குழந்தைகள்
என்கிறார் துஷ்யந்த் சரவணராஜ்.
நர்சரியில்
சேர்த்து பேனா பிடித்த மறுநாளே பிள்ளைகள் ஸ்டெத்தாஸ்கோப் பிடித்து காசு சம்பாதிக்க
ஆரம்பித்து விட்டால் இந்தப் பெற்றோர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அதற்காக
குழந்தைமை பறி போவதைப் பற்றி எந்தப் பெற்றோருக்கு என்ன கவலை?
அதையும் மிக
அழகாகப் பதிவு செய்கிறார் துஷ்யந்த் சரவணராஜ்,
எழுதத் தெரியாமல்
குழந்தைகள் கிறுக்கிக் கொண்டிருப்பதாக நாம் கவலைபடுகிறோம், ஆனால் பென்சில் பிடிக்கக்
கற்றுக் கொண்டு விட்டதாக மகிழ்ச்சியடைகிறார் அவர்.
கடவுள் பொம்மையாக
இருக்கவே பிரியப்படுகிறார் எனும் அவரது கவிதைத் தொகுப்பில் இப்படிக் குழந்தைகளைக்
கொண்டாடித் தீர்க்கிறார்.
அப்புறம்
ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால்...
குழந்தைகளுக்காகத்தானே
பென்சில்!
பென்சிலுக்காகவா
குழந்தைகள்?!
*****
No comments:
Post a Comment