10 Jan 2019

பேச்சு விபத்துகள்


பேச்சு விபத்துகள்
யாருக்கும் யாரும் பகைவர் இல்லை. அவரவர்களின் மனமே அவரவர்களுக்குப் பகை. நீங்கள் ஒரு அர்த்தத்தில் சொன்னதாக நினைக்கலாம். அதைக் கேட்டவர் வேறு ஒரு அர்த்தத்தில் புரிந்து கொள்ளலாம். இங்கு சொல்லப்பட்டதன் அர்த்தம் செயலிழந்து போகிறது. மனநிலையே முக்கியத்துவம் பெறுகிறது.
அவரவர் அவரவரது மனநிலையின்படியே அர்த்தம் கொள்கின்றனர் என்பதால் பேச்சில் கவனம் அதிகம் தேவைப்படுகிறது. அதனால்தான் பேசாமல் இருப்பது பல நேரங்களில் சிறந்த நன்மதிப்பைப் பெறுகிறது. பேசாமல் இருப்பதன் மூலம் கேட்பவருக்கு அர்த்தம் செய்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகிறது.
இதுதான் நுட்பமாகக் கருதப்படுகிறது.
அநாவசியமாகப் பேசி தேவையில்லாத அர்த்தங்கள் செய்து கொள்வதற்கு எதிரில் இருப்பவருக்கு வாய்ப்புகள் தரக் கூடாது.
புதிய விசயங்களைப் பேசுவதாக நினைத்து அதன் மூலம் கேட்பவர் மனதில் இடம் பிடித்து விடலாம் என்று நினைப்பது இப்படித்தான் முட்டாள்தனமாகப் போகிறது. புதிய விசயங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை மிக முக்கியமானது. அது இல்லாதவரிடம் அப்படிப்பட்ட விசயங்களைப் பேசுவது அவருக்கு எதிரான விசயங்களைப் பேசுவது போலாகி விடும்.
அது போன்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தலைப் போன்ற பாதுகாப்பனது வேறேன்ன இருக்கிறது!
அவர்களாகவே விதவிதமாக அர்த்தம் செய்து கொண்டு நாம் புதிய புதிய விசயங்களைப் பேசியதாக கற்பிதம் செய்து கொள்வார்கள் நிறைய இருக்கிறார்கள்.
நமக்காக அவரவர்களின் மனமே வேலை செய்யும் போது அநாவசியமாகப் பேசி அவரவர்களின் மனதை இயக்க வேண்டியதில்லை.
வெகு முக்கியமாக நாம் நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டுதான் சிக்கிக் கொள்கிறோம். அவரவர்களுக்கான நகைச்சுவைகள் அவரவர்களிடமே இருக்கிறது. யார் யாருக்கு எந்த விதமான நகைச்சுவைச் செல்லுபடியாகும் என்பது அறியாமல் அந்த ஏரியாவில் கை வைப்பது நெருப்பை வெறுங்கையால் கையாளுவது போன்றதாகும். நீங்கள் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கலாம். கேட்பவரும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே. அதுதான் சிக்கல்.
ஒரு வகையில் பார்த்தால் பேச்சில் அதிக கவனமாக இருப்பது வாழ்க்கையில் அதிகப் பாதுகாப்பாக இருப்பதற்கு சமம். பேச்சில் நாம் கொள்ளும் கவனமின்மையே வாழ்வில் எதிர்பாராத விபத்துகள் ஏற்படுவதற்குக் காரணமாகி விடுகின்றன. விபத்துகள் சாலை விதிகளைப் பின்பற்றாததால் மட்டும் ஏற்படுவதில்லை. பேச்சு விதிகளைப் பின்பற்றாததாலும்தான் ஏற்படுகின்றன. பேச்சு விதியில் மிக முக்கியமானது அதிகம் பேசாமல் இருப்பதுதான். எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அதற்கும் குறைவாகப் பேசுவதுதான்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...