ஆணியைப் பிடுங்காதீர்கள்!
நிலத்தடி
நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இந்த ஆண்டு
உபரியாக கர்நாடகாவில் பெய்த மழையால் காவிரி நீர் வந்திருக்கிறது. வரும் ஆண்டுகளில்
நிலைமை எப்படி வேண்டுமானாலும் அமையலாம். இவ்வளவு நீர் தமிழகத்துக்குத் தர வேண்டும்
என்று உச்சநீதி மன்றத் தீர்ப்பு இருக்கிறது. அதை கர்நாடகம் காப்பாற்றலாம் அல்லது மீறலாம்.
எரிவாயுவுக்கான
குழாய்கள் டெல்டா மாவட்டங்களில் பதிக்கப்பட்டு வருகின்றன. ஹைட்ரோ கார்பனுக்கான ஆழ்துளைக்
குழாய்களும் இறக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாக்கப்பட்ட
விவசாய மண்டலமாக இருக்க வேண்டிய டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்ற அறிவிப்புகள் துடித்துக்
கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே பெருமளவில்
விளைநிலங்களை கபளிகரம் செய்து விட்டன வீட்டுமனைகள் எனும் ரியல் எஸ்டேட்டுகள்.
அது போதாது
என்று எட்டுவழிச்சாலைகள் விவசாய நிலங்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன.
அதுவும் போதாது
என்று உயர்அழுத்த மின்கோபுரங்களும் விவசாய நிலங்களை விழுங்கத் துடித்துக் கொண்டிருக்கின்றன.
அந்த விழுங்கும்
பட்டியலில் அண்மையில் விமான நிலைய விரிவாக்கங்களும் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
விளைநிலங்கள்
சுருங்கிக் கொண்டிருக்கின்றன.
விவசாயத்
தொழிலாளிகள் கட்டிடத் தொழிலாளிகளாகவும், வளாகக் காவலாளிகளாகவும் மாறிக் கொண்டிருக்கின்றனர்.
உணவுத் தேவை
அதிகரிக்கும் சூழ்நிலையில் விவசாயத்தின் தேவை அதிகமாக அல்லவா உணரப்பட வேண்டும். நிலைமை
தலைகீழாக அல்லவா உணரப்படுகிறது. விவசாயம் வேண்டப்படாதத் தொழில் போலவும், விவசாயிகள்
தேவையில்லாத தொழிலாளிகள் போலவும் உணரப்படுகிறார்கள்.
அதனாலென்ன
விவசாயத்துக்கு டிராக்டர், அறுவடை இயந்திரம், உரம், பூச்சிக்கொல்லி என்று கண்டுபிடித்துக்
கொடுக்கப்பட்டு விட்டது, அவைகளை வாங்க கடன்கள் வாங்கவும் வழிவகை செய்யப்பட்டு விட்டது
என்ற திருப்தியில் தொழில்நுட்பமும், பொருளாதாரமும் கண்களை மூடிக் கொண்டு விட்டது
போலத் தெரிகிறது.
சுழன்றும்
ஏர் பின்னது என்கிறார் வள்ளுவர். நாமோ அரிசி மூட்டைகள் கடைகளில் காய்ப்பதாக நினைத்துக்
கொண்டிருக்கிறோம்.
உழுவார் உலகத்தார்க்கு
ஆணி என்கிறார் வள்ளுவர். நாமோ தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்குவதாக நினைத்துக் கொண்டு
அச்சாணியைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறோம்.
யார் அந்த
நாம்? என்று கேட்கிறீர்களா?
அது நாம்
என்பது நம் நிர்வாகமாக இருக்கலாம்.
அது நாம்
என்பது நம் அமைப்பாக இருக்கலாம்.
அது நாம்
என்பது நம் நிறுவனமாக இருக்கலாம்.
அவைகளில்
எல்லாம் அங்கம் வகிக்கும் நாமாகவும் இருக்கலாம்.
*****
No comments:
Post a Comment