12 Jan 2019

கருணைக் கடவுள் எங்கிருக்கிறார்?


கருணைக் கடவுள் எங்கிருக்கிறார்?
யாரும் யாருடைய மனதைப் போட்டும் இறுக்குவதில்லை. அவரவர்களே அவரவர் மனதைப் போட்டு இறுக்கிக் கொள்கிறார்கள்.
ஒருவர் தன் மனதைப் போட்டு இறுக்கிக் கொள்வதற்குக் காரணம் அவர் மேலே அவர் கொள்ளும் சந்தேகம்தான்.
தன்னை மீறி நடந்து கொண்டு விடுவோமோ? என்ற அச்சம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அப்படி நடந்து கொண்டு விடக் கூடாது என்று நினைத்துதான் முதலில் மனதைப் போட்டு இறுக்கிக் கொள்கிறார்கள்.
ஒரு சில நேரங்களில் தன்னையும் மீறி நடந்து விடும் போது தன் மேலே ஒரு சந்தேகம் வந்து விடும். அந்த சந்தேகம் வந்த பிறகு இன்னும் போட்டு இறுக்கிக் கொள்வார்கள். யாராவது தன்னைத் தானே கயிற்றைப் போட்டு அவிழ்க்க முடியாத முடிச்சுகளை இட்டுக் கொள்வார்களா? ஆனால் அப்படித்தான் தன் மேல் சந்தேகம் எழுந்த ஒருவர் செய்வார். தன்னைச் சந்தேகப்பட்டுதான் இப்படி செய்கிறோம் என்பதை அவர் புரிந்து கொள்ள நாளாகும். அதைப் புரிந்து கொள்வதற்குள் இப்படி இறுக்கத்திற்குள் இருந்தே இறந்து போனவர்களும் உண்டு.
வாழ்க்கையில் சரியாக முடிவெடுக்கும் தருணங்களைப் போல தவறாக முடிவெடுக்கும் தருணங்களும் இருக்கவே செய்கின்றன. எந்தத் தவறும் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான தவறு இல்லை. தன்னைத் தானே இறுக்கிக் கொள்ளும் ஒருவருக்கு ஒரு சிறு தவறும் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான தவறாகத் தெரியும். அதுதான் பிரச்சனை.
இனிமேல் இது போன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்து மேலும் மோசமான தவறுகளுக்கு ஆளாவார். ஒரு சிறு தவறையே ஏற்றுக் கொள்ள முடியாத அவர் அடுத்தடுத்து தவறுகள் நடக்கும் போது என்ன நிலைக்கு ஆளாவார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
தன்னை இறுக்கிக் கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாத வரையில் இந்தத் தவறை ஒருவர் புரிந்து கொள்வது சிரமமானது, புரிய வைப்பதும் சிரமமானது.
தன்னை விடுவித்துக் கொள்வதில்தான் பிரச்சனையிலிருந்து விடுபடுவது இருக்கிறது. தனக்குத் தானே ஒருவர் வழங்கிக் கொள்ளும் சுதந்திரம் முக்கியமானது. தன்னைத் தானே சிறைபடுத்திக் கொள்ளாமல் இருப்பது ஒருவர் தன் மேல் காட்ட வேண்டிய அதிகபட்ச கருணையாகும். அந்தக் கருணையைத் தன் மேல் காட்டத் தெரிந்த ஒருவர்தான் அதே போன்ற கருணையை மற்றவர்கள் மேலும் காட்ட இயலும்.
ஆக, கருணைக் கடவுள் எங்கிருக்கிறார்? இங்குதான் இருக்கிறார். தன்னைப் போட்டு இறுக்கிக் கொள்ளாத ஒரு மனிதரின் மனதுக்குள் இருக்கிறார்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...