17 Jan 2019

அப்டேட் அவசியம் மக்கா!


அப்டேட் அவசியம் மக்கா!
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் குறித்த கணக்கெடுப்பு எந்த அளவுக்கு சாத்தியம்?
யார் தங்கள் சொத்துக் கணக்கை  வெளிப்படையாகக் காட்டுவார்கள்?
வருமான வரித்துறையின் ரெய்டே அதனால்தான் நடக்கிறது.
உதாரணமாக விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், டி.வி. வாங்கியவர்களே தங்கள் வீடுகளில் அவைகளெல்லாம் இருக்கிறது என்பதைக் கணக்கெடுப்பில் சொல்லத் தயங்குவார்கள். அப்படிச் சொல்லி அந்த விவரங்கள் பதிவாகி அதனால் அரசால் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற ஆழ்மன அச்சம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
நீங்கள் ஒரு ரேஷன் கடைக்குச் சென்றால் மாளிகை வீட்டைச் சார்ந்தவரும், குடிசை வீட்டைச் சார்ந்தவரும் விலையில்லா அரிசி வாங்கிக் கொண்டிருப்பார்கள். மாளிகை வீட்டைச் சார்ந்தவர் வறுமை கோட்டுக்குக் கீழே வருமானம் பெறுவதாகத்தான் கணக்கில் இருக்கும்.
இவைகளையெல்லாம் மீறி ஒரு கணக்கெடுப்பு செய்வதாக வைத்துக் கொண்டால் அரசின் உதவிகள் எப்படிப் போய் சேருகின்றன என்பதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம்.
தற்போது அடித்த கஜா புயலின் போது,
மாடி வீடுகளுக்கு நிவாரணம் கிடையாது என்று மறுக்கப்பட்டது.
அந்த மாடி வீடுகள் பல அரசால் உதவிக்கரம் நீட்டப்பட்டு கட்டப்பட்ட பசுமை வீடுகள். அவர்கள் பசுமை வீடுகள் எனும் மாடி வீடுகளில் இருந்தாலும் அவர்களில் பலர் அன்றாட வாழ்வின் வறுமையோடு போராடிக் கொண்டிருப்பவர்கள்.
இவை ஒரு பக்கம் என்றால்...
பொருளாதாரக் கணக்கெடுப்பில் இன்னும் சில பிரச்சனைகள் இருக்கின்றன.
இந்த மாதம் வசதியாக இருப்பவர் அடுத்த மாதம் நொடித்துப் போய் ஏழையாக ஆகவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி ஆனவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
இதனால் எல்லாம் பொருளாதாரக் கணக்கெடுப்பு என்பது தேவையில்லை என்பதைச் சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இந்த மாதம் வசதியாக இருந்தவர் அடுத்த மாதம் நொடித்துப் போனால் அந்த விவரங்களை உடனுக்குடன் அப்டேட் செய்து கொள்ளும் அளவுக்கு அரசின் கணக்கெடுப்புகள் இருக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரக் கணக்கெடுப்புகள் சரியாக இருக்கும்.
ஆனால் எதார்த்தம்,
அரசின் சில சான்றிதழ்களைப் பெற மூன்று மாதம், நான்கு மாதம், ஒரு வருடம், பல வருடம் என அலைந்து கொண்டிருப்பவர்களையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கலாம்.
அதே வகையில், போன மாதம் பொருளாதாரத்தில் வசதியாக இருந்தவர் இந்த மாதம் நொடித்துப் போன விவரத்தைப் பதிவு செய்ய மாதக்கணக்கில், வருடக் கணக்கில் அலைந்தார் என்றால் வைத்துக் கொள்ளுங்கள் நிலைமை எப்படி இருக்கும்? அரசின் கணக்குப் பதிவேடுகளில் அவர் வசதியாக கணக்குக் காட்டிய அந்த மாதப் பதிவே இருக்கும். அவர் ஏழையாகி விட்டப் பதிவைச் செய்வதற்குள் நாக்கு தள்ளி விடும், நாட்கள் கடந்து விடும்.
ஆகவேதான் இது போன்ற கணக்கெடுப்புகளில் அப்டேட் என்பதற்கான அனைத்து வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அந்தக் கணக்கீடுகளினால் விளையும் பயன் மக்களை முழுமையாக சென்று சேரும்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...