17 Jan 2019

கருத்துகளில் ஏவப்படும் வன்முறை


கருத்துகளில் ஏவப்படும் வன்முறை
இரவு பகல் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
கருத்துகள் எதிர்க்கருத்துகள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.
இரவுக்கு எதிரானது பகல். பகலுக்கு எதிரானது இரவு.
எதிரெதிரான இரண்டையும் எப்படி ஏற்றுக் கொள்கிறோம்?
அப்படியே பழகி விட்டது.
அது போன்ற ஒரு பழக்கம் கருத்துகள் - எதிர்க்கருத்துகளை ஏற்றுக் கொள்வதிலும் இருக்க வேண்டும்.
இங்கு நாம் கருத்து - எதிர்க்கருத்து என்று முன்வைக்கும் சொல்லாக்கம் எது ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து, எது ஏற்றக் கொள்ள முடியாத எதிர்க்கருத்து என்ற அடிப்படையில் அல்ல. ஒரு கருத்துக்கு எதிராகப் பொருள் கொள்ளும் தன்மையின் அடிப்படையில்தான் முன்வைக்கிறோம்.
சான்றாக இரவு என்பதைக் கருத்தாகக் கொண்டு, பகல் என்பதை எதிர்க்கருத்தாகக் கொள்ளலாம். அல்லது பகல் என்பதைக் கருத்தாகக் கொண்டு இரவு என்பதை எதிர்க்கருத்தாகக் கொள்ளலாம். அவ்விரு கருத்துகளையும் அடையாளப்படுத்தவே கருத்து - எதிர்க்கருத்து என்பதைச் சொல்கிறோம். ஆகவே எதிர்க்கருத்து என்பது எதிரான கருத்து என்ற அடிப்படையில் முன்வைக்கவில்லை. ஆகவே இரண்டும் கருத்துகளே.
எனினும் எதிர் என்ற சொல் எதிரான என்ற பொருளைத் தருமானால் நாம் மாற்றுக்கருத்து என்ற சொல்லையும் பரிசீலிக்கலாம்.
நடைமுறையில் மாற்றுக்கருத்துகள் முடக்கப்படுகின்றன, எதிர்ப்புக்கு உள்ளாகின்றன. அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.
மாற்றுக்கருத்துகளை முன்வைத்ததால் கொலையுண்டவர்கள் இருக்கிறார்கள். கெளரி லங்கேஷ் போன்றவர்கள் அப்படி பலியாகியிருக்கிறார்கள்.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப்பில் கருத்துகள் - மாற்றுக்கருத்துகளின் மோதல் பலிக்களத்தை விட மோசமாக இருப்பதைக் காணலாம்.
மாற்றுக்கருத்துகளை முன் வைப்பவர்கள் மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கப்படுவதும், வசை மொழிகளில் அர்ச்சிக்கப்படுவதும் சமூக ஊடகங்களின் பழக்கம் என்பது போல ஒரு வழக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
மாற்றுக்கருத்துகள் உள்வாங்கப்பட வேண்டும். அதிலுள்ள உணர்வுகள், நியாயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். கருத்துகளும் மாற்றுக்கருத்துகளும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும். ஒரு நல்ல புரிதலை உருவாக்கும் வரை அவைகள் நீள வேண்டும். அதை விடுத்து மாற்றுக்கருத்துகளை அதிகாரத்தின் துணை கொண்டு அடக்க முற்படுவது மீண்டும் காட்டுமிராண்டித்தனமான சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு உதாரணமாகி விடும்.
கருத்துகளோ, மாற்றுக்கருத்துகளோ அதன் மூலம் மனிதகுலம் அடையவிருக்கும் நன்மையை அடிப்படையாகக் கொண்டே அவைகளைப் பரிசீலிக்க வேண்டும். ஒரு மாற்றுக்கருத்தை முன்வைப்பதனால் அதனாலேயே கொலைக்கு நிகரான வன்முறைக்கு ஆளாக நேரிடும் என்ற சூழல் இருக்குமானால் அந்த மாற்றுக்கருத்துக்கு முன்னே வைக்கப்பட்டே கருத்தே  மனித குலத்துக்கு எதிரான கருத்தாகத்தான் இருக்க முடியும் என்று சொல்வதில் தவறென்ன இருக்க முடியும்?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...