5 Jan 2019

எனது விவசாய அனுபவம்


எனது விவசாய அனுபவம்
எனது விவசாய அனுபவத்தைப் பகிர்வதாக நேற்று தெரிவித்து இருந்தேன்.
எனது ஒரு மா (100 குழி அதாவது ஒரு குழி என்பது 144 சதுர அடி ஆக 14400 சதுர அடி) வயலில் அறுவடை கூலி போக ஐந்து மூட்டைகள் நெல் அறுவடை செய்திருக்கிறேன். வயலைப் பண்படுத்தியது, தெளிப்பு விதைத்தது, களை பறித்தது ஆகியவற்றுக்கான செலவு தனி.
எனது வயல் இருக்கும் பகுதியில் அறுவடை செய்ததில் மிக குறைந்த அளவு கண்டுமுதல் இதுவாகத்தான் இருக்கும்.
அக்கம் பக்கத்து நிலத்துக்காரர்கள் போல் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, ஊட்ட ரசாயனம் போன்ற இத்தியாதிகளை அடித்திருந்தால் மகசூல் எட்டிலிருந்து பனிரெண்டு மூட்டைகளை எட்டியிருக்கக் கூடும். இங்கு மற்ற வயல்களில் ஒரு மா-வுக்கு எட்டு முதல் பனிரெண்டு மூட்டைகள் வரை அறுவடை ஆகிக் கொண்டு இருக்கின்றன.
எப்படியும் ரசாயன இத்தியாதிகளைப் பயன்படுத்தியிருந்தால் மூன்று மூட்டைகளாகவது கூடுதலாக கிடைத்திருக்கும் என்பதுதான் இங்கிருப்பவர்களின் அங்கலாய்ப்பு. நான் தவறு செய்து விட்டதாகவும், ஆர்வமில்லாமல் விவசாயம் செய்வதாகவும் இங்கிருப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ரசாயன இத்தியாதிகளுக்கு நான் செலவழித்திருந்தால் அந்தச் செலவும், கூடுதலாக கிடைக்க இருக்கும் மூன்று மூட்டைகளுக்கான வரவும் கிட்டத்தட்ட சமமாக இருந்திருக்கக் கூடும் என்றே நான் கருதுகிறேன்.
நான் செய்த முறையில் எனக்குப் பெரிதாக லாபமும் இல்லை. நட்டமும் இல்லை.
பெரிதாக லாபம் இல்லை என்பதை விட பெரிதாக நட்டமும் இல்லை என்பதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.
விதைநெல் என்னிடம் இருந்தது.
ஆட்களும், நாங்களுமாக, டிராக்டருமாக நிலத்தைப் பண்படுத்தி, தெளிப்பு விதையாக விதைத்தோம். களை பறித்தோம். அவ்வளவுதான் செலவு. முடிந்து விட்டது. அறுவடை மற்றும் கண்டுமுதலுக்கான கூலியை ஆட்கள் நெல்லாகவே பெற்றுக் கொண்டு விட்டார்கள்.
கூடுதலாக செலவு செய்து கூடுதல் லாபம் பார்ப்பதை விட, கூடுதல் நட்டம் அடையாமல் இருப்பதே விவசாயத்துக்கானத் தேவையாக நான் பார்க்கிறேன்.
விளைச்சல் குறைவுதான்.
ரசாயன உரம், ஊட்ட மருந்துகள், பூச்சிக்கொல்லிகள் என்று வாங்கிக் கடன்படவில்லை.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் எதுவும் தெளிக்காததைக் கேள்விபட்டு கூடுதல் விலை தரவும் விசயம் கேள்விபட்டவர்கள் தயாராக இருக்கிறார்கள். சந்தை விலை என்னவோ அந்த விலையில் கொடுக்கவே நான் விரும்புகிறேன். எனக்கு அதிக செலவு இல்லாத போது நான் ஏன் கூடுதல் விலையில் கொடுக்க வேண்டும்?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...