5 Jan 2019

எனது புத்தக வாசிப்பு - 2018


எனது புத்தக வாசிப்பு - 2018
நண்பர்கள் பலரும் தாங்கள் கடந்த ஆண்டு அதாவது 2018 இல் வாசித்த புத்தகங்கள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நிறைய வாசித்து இருக்கிறார்கள். வாசித்தப் புத்தகங்களைப் பற்றி நச் என்று கருத்துகளையும் கொடுத்து வருகிறார்கள்.
இவ்விசயத்தில் எழுத வேண்டும் என்று நினைத்து நான் காலம் கடத்திக் கொண்டிருக்கிறேன்.
வாசித்தப் புத்தகங்கள் பற்றி நான் எதுவும் குறித்து வைக்க வில்லை. குறிப்புகள் எடுக்கவும் இல்லை. நண்பர்கள் இந்த விசயத்தில் பக்காவாக இருக்கிறார்கள். தாங்கள் வாசித்தப் புத்தகங்கள் பற்றிய குறிப்பு நோட்டுகளைக் காட்டுகிறார்கள். இன்னும் சில நண்பர்கள் அதில் முக்கியப் பக்கங்களை அழகாக ஸ்கேன் செய்து வைத்து இருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது.
பயணக் காட்சிகளைப் பற்றி எந்தக் கவலையுமின்றி, அதை மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற பிரக்ஞையின்றி பயணிக்கும் ஒரு நாடோடிப் பயணியைப் போல படித்ததில் வாசித்த பல புத்தகங்கள் நினைவில் இல்லை. மனதில் நிற்பவைகள் ஒரு சில புத்தகங்களே.
சரி அவைகள் பற்றியாவது எழுதலாம் என்றுதான் எழுதுகிறேன்.
சி.எம். முத்துவின் கறிசோறு நாவல் இன்னும் மனதில் நிற்கிறது. இதைப் பற்றி வலைபூவில் எழுதியிருக்கிறேன். வலைபூவின் தேடுபொறியில் கறிசோறு என தட்டச்சு செய்தாலே வந்து விடும் என்பதால் அதைப் பற்றி குறிப்புகள் எதுவும் எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.
பால் பிராண்டன் எழுதிய 'இந்திய புதையல் ஒரு தேடல்' என்ற புத்தகமும் மனதில் நிற்கிறது. மனிதர் இந்திய ஞானத்தைத் தேடி இந்தியா முழுவதும் அலையோ அலை என்று அலைந்திருக்கிறார். அவரின் அந்த அலைச்சல் பயணம்தான் இந்த நூல். தனக்கான ஞான குருவைத் தேடும் வேட்கையும் அவரது இந்தப் பயணத்தில் அடக்கம். இறுதியில் ரமணரிடம் அவருக்கான தேடல் கிடைக்கிறது. அவரது பயண அனுபவங்கள் வாசிக்க வாசிக்க சுவையாக இருக்கும். இந்தியாவின் ஆன்மீகம் குறித்த ஒரு முழுமையானப் பார்வையை உள்வாங்க இந்த நூல் உதவக்கூடும்.
ஜான் கிரே எழுதிய 'ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்' என்ற புத்தகமும் மனதில் நிற்கிறது. ஆண்கள் பெண்களைப் புரிந்து கொள்வதிலும், பெண்கள் ஆண்களைப் புரிந்து கொள்வதிலும் உள்ள சூட்சமங்களை இந்நூல் அழகாகச் சொல்கிறது. அட இவ்வளவு விஷயங்கள் தெரியாமலே கல்யாணம் செய்து இருந்து இருக்கிறோமே என்று வாசித்த பின் நினைக்க வைத்த நூல். ஆகவே கல்யாணம் செய்வதற்கு முன் அனைவரும் படிக்க வேண்டிய நூல். கல்யாணம் செய்து கொண்டவர்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களும் படிக்க வேண்டிய நூல்தான்.
இறையன்புவின் 'இலக்கியத்தில் மேலாண்மை' என்ற நூல் 2018 இல் வாசித்ததா? 2017 இல் வாசித்ததா? என்று தெரியவில்லை. மேலாண்மை குறித்த நிறைய விவரங்களை சுவையாக பல இலக்கியங்களிலிருந்தும் தொகுத்து இருக்கிறார். அந்நூலில் மனதை அட போட வைத்த ஒரு தகவல். திருக்குறளில் போர்க்களத்தில் அம்புகளைத் தாங்கி முன்னேறும் யானை புலி தாக்கினால் அஞ்சிப் பின்வாங்குகிறதே என்பதற்கு இறையன்பு தரும் விளக்கம்தான் அது. போர்க்களத்தில் அம்புகளைத் தாங்கி முன்னேறும் யானை பயிற்சி பெற்றது. காட்டில் புலி தாக்குவதற்கு அஞ்சிப் பின்வாங்கும் யானை பயிற்சி அற்றது. பயிற்சிதான் முன்னேறித் தாக்கும் மனவலிமையையும், பயிற்சியின்மைதான் தாக்கும் வலிமை இருந்தும் பின்வாங்கும் மனப்பான்மையையும் தருகிறது என்பது இறையன்பு தரும் கருத்து.
ந. முத்துமோகனின் ஐரோப்பியத் தத்துவங்கள் என்ற நூலும் மனதில் நிற்கிறது. வழக்கம் போல் இந்த நூலிலும் முத்துமோகன் அதகளம் செய்திருக்கிறார் என்றே சொல்வேன். எடுத்தால் முடிக்காமல் வைக்க முடியாது.
இன்னும் பத்து பதினைந்து நூல்களாவது வாசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஞாபகத்தில் கொண்டு வருவதில் சிரமம் நிலவுவதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ஞாபகம் வராமல் இருப்பதும் நல்லது. இல்லையென்றால் இந்தப் பத்தி இன்னும் பத்திக் கொண்டு பெரிதாக நீண்டு விட வாய்ப்பு இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...