15 Jan 2019

பேட்டை நாவலின் கிளைக்கதைகள்


பேட்டை நாவலின்  கிளைக்கதைகள்
பேட்டை நாவலின் கதை பிறந்த கதையில்,
காக்ஸ் மற்றும் ரெக்ஸ் என்ற ஆங்கிலேய இரட்டையர்கள் கூவம் நதிக் கரையில் நெரிசலோடு வாழ்ந்து தொற்றுநோய்களுக்கு மடியும் மக்கள் மீது இரக்கப்பட்டு தங்களுக்குச் சொந்தமான இடங்களில் மக்களைக் குடியேற அனுமதிக்கிறார்கள். அப்படிக் குடியேறிய மக்களும் அதற்குக் நன்றிக்கடனாக காக்ஸ் தெரு, ரெக்ஸ் தெரு என்றெல்லாம் பெயர் சூட்டுகிறார்கள்.
கூவம் கடலோடு கலக்கும் லாக் நகரில் மணல் மேடாகி அடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்பை எடுக்க மணல் தோண்டப்படுகிறது. இதனால் கடல்பாம்புகள் கூவத்தின் வழியாக ஆற்றில் நுழைந்து ஆற்றோரத்தில் இருக்கும் மக்களைக் கொத்தி சாகடிக்கிறது. பிறகு தோண்டிய அடைப்பு மணல் மூட்டைகளால் அடைக்கப்படுகிறது. கூவம் தேங்கி சாக்கடையாக தன் துர்நாற்றத்தைப் பரப்புகிறது.
இப்படி கூவம் நாறிப் போனதற்கும், தோற்றுநோய்ப் பரவி அழிப்பதற்கும் காரணம் சுங்குராமரின் சாபமே என்று நம்பும் மக்கள் அவருக்கு ஒரு எருமையைப் பலியிட்டு அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தும் சம்பவமும் நிகழ்கிறது.
நாவலில் பல பாத்திரங்களின் கதைகள் கிளைக்கதைகளாகப் பரவி அறியப்படாத பெருநகரச் சேரி வாழ்வின்  பல பரிமாணங்களைக் காட்டுகின்றன.
அவைகளில் ஒரு சில,
ரெஜினாவின் மாமியார் கிளியாம்பாளும் நகோமியம்மாளும்
            கிளியாம்பாள் வட்டிக்கு விட்டு நன்றாகச் சம்பாதிக்கிறாள். அவளுக்குத் தோழி நாகம்மாள். நாகம்மாள் ஞானஸ்தானம் செய்யப்பட்டப் பிறகு நமோமியம்மாள் ஆகிறாள். கிளியாம்பாள் சம்பாதித்தாலும் அவளின் வீட்டுக்காரன் சிங்கப்பூரான் பெண் சகவாசத்தாலும், குதிரை ரேஸாலும் எல்லாவற்றையும் அழிக்கிறான். கெத்தாக வட்டி வசூலித்த கிளியாம்பாள் கடைசியில் சாப்பாட்டுக் கடை வைக்கிறாள். அவள் வைக்கும் கவாப்பு எனும் மாட்டுக்குடலில் செய்யும் அசைவ உணவு தனிச்சுவையானது. அவள் கவாப்புச் செய்வதை நகோமியம்மா வாயால் கேட்கும் போதே தனிச்சுவையாக இருக்கும். கிளியாம்பாள் கடைசிக் காலத்தில் சின்னாபின்னப்பட்டு இறக்கிறாள். நகோமியம்மாளே அவளுக்கு வாழும் போதும், சாகும் போதும் ஒரே துணை. கிளியாம்பாள் இறந்தாலும் அவள் நகோமியம்மாள் வடிவில் ரெஜினாவுக்கு மாமியால் போல், ரூபனுக்கு ஆயா போல் கடைசி வரை நிற்கிறாள். நாவலின் ஆரம்பம் முதல் கடைசி வரை பேசிக் கொண்டிருக்கும், நாவல் முடிந்தும் பேசப்படும் பாத்திரம் நகோமியம்மாள். நகோமியம்மாள் எதையும் மறைக்கத் தெரியாதவள். அன்பில் மருகுபவள். ரூபனுக்காகவே வாழ்கிறவள் என்றும் சொல்லலாம். அவள் பேசும் வசவு மொழிகள் ஒவ்வொன்றும் அந்த கணத்திற்கானவை. அதைப் பேசி முடித்தபின் அவளே யேசப்பா என்னை மன்னிச்சிடு என்கிறாள். நகோமியம்மாளே இந்நாவலின் மாந்தர்களுக்கான வாய்வழிச் சாட்சியம். எழுதப்படாத அறியப்படாத பேட்டையின் வரலாற்றை அவளே கதைகளாகச் சொல்கிறாள்.
ரூபனின் நண்பன் யோசேப்பு
பேட்டையின் அதிகாலைக் குடிகாரர்களில் இவனும் ஒருவன் மற்றும் ரூபன், செளமியனின் நண்பன். வருடந்தோறும் வேளாங்கண்ணிச் செல்பவன். அப்படி வேளாங்கண்ணிச் செல்லும் போதுதான் ரூபனின் இருபத்து ஒன்பதாவது பிறந்த நாளைக் கொண்டாட தன் வீட்டைக் கொடுக்கிறான். வீட்டிலிருக்கும் தாத்தாவுக்கு ஒரு பீடிக்கட்டு கொடுத்தால் போதும் எதையும் கண்டு கொள்ள மாட்டார் என்பது யோசேப்பு சொல்லிச் சென்ற ரகசியம். தாத்தாவோ பீடிக்கட்டையும் வாங்கிக் கொண்டு போலீஸூக்குப் போட்டுக் கொடுத்து விடுவது நாவலில் நடக்கும் அதிசயம். போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ரூபன் போன் பேசும் போது யோசேப்புன் முன்பல் உடைந்து அதற்கு ஒருவாறாக சிகிக்சைச் செய்து கொண்டு அப்போதும் உணர்ச்சி அடங்காமல் அதன் காரணமாக போதையேற்றிக் கொண்டு சுருண்டு கிடப்பான். செளமியனின் மரணத்துக்குத் தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்ச்சி யோசேப்புக்கும் உண்டு. ஐந்து மணி நேரத்துக்கு மேல் போதையில்லாமல் இருக்க முடியாத யோசேப்பு சபரிமலைக்கு மாலை போட்டு குடிக்காமல் இருக்கும் ஆச்சரியமும் நாவலில் அதன் பின் நடக்கும்.
செளமியனின் நண்பன் ஜான்டி
செளமியனைப் போதையில் இழுத்துச் செல்லும் நண்பன் ஜான்டி. அவன் ஜான்டி ரோட்ஸைப் போல் பீல்டிங் செய்வதில் வல்லவன் என்பதால் ஜான்டி என அழைக்கப்படுகிறான். நேப்பியர் பூங்கா எனச் சொல்லப்படும் மேதினப் பூங்காவில் அவன் பிட்ச் செட் செய்யும் விதமே செம ரகளையாக இருக்கும். மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மேதினப் பூங்கா ஆக்கிரமிக்கப்படும் போதும், தலைமைச்செயலகம் கட்டுவதற்காக ராஜாஜி ஹால் இடம் கையகப்படுத்தப்படும் போதும் அவன் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இல்லாமல் மேலும் குடி, போதை என தன்னை அழித்துக் கொள்ளத் துவங்குவான். தங்களுக்கான நிலம் துண்டாடப்படும் போதும் மனிதன் ஒன்று போதைக்கு அடிமையாகிறான் அல்லது மனநலம் பிறழ்கிறான். செளமியனும், ஜான்டியும் போதையின் வழியே கண்டடையும் டாடி எனும் ஆங்கிலோ இந்தியன் கதைப் பாத்திரமும் கவனிப்பிற்குரியது.
செளமியனின் மாமா பூபாலன்
பூபாலன் ஒரு நல்ல ஆர்டிஸ்ட். தலைவர்களின் படங்களாகட்டும், நடிகர்களின் படங்களாகட்டும் அவ்வளவு தத்ரூபமாக வரையக் கூடியவர். பேனர்கள், கட்அவுட்டுகள் என்று பேட்டை முழுவதும் அவரது ராஜ்ஜியமே. ஒரு காலத்தில் தன் ஆர்ட்ஸால் கொடிகட்டிப் பறப்பவர் அதே தொழிலில் இருக்கும் இருதயராஜால் தாக்குதலுக்கு ஆளாவார். அந்தத் தாக்குதலில் அவர் தப்பித்தாலும் அவரோடு கூட வந்த ஜானா இறந்து விடுவான். ஜானாவின் இறப்புக்காக இருதயராஜ் பின்னர் பழி தீர்க்கப்படுவார். அதில் ஆவேசமடையும் இருதயராஜின் மகன் ஆமோஸ் சாப்பாடு கொண்டு செல்லும் பூபாலனைத் தாக்கும் போதுதான் ரூபன் வந்து காப்பாற்றி லாரன்ஸ்க்குச் சாப்பாடு கொண்டு செல்லும் வேலையை இவாஞ்சலினைப் பார்க்கும் பொருட்டு தான் எடுத்துக் கொள்வான். பெரிய பேனர் ஆர்டிஸ்ட்டான பூபாலன் ப்ளக்ஸ்களின் வருகைக்குப் பின் நொடித்துப் பொய் குடும்பத்தை ஓட்டுவதற்காக ஏ.டி.எம். காவலாளியாக ஆவார். அவரே ரூபனின் வேண்டுகோளுக்கு இணங்க இவாஞ்சலினின் ஓவியத்தை வாட்டர் கலரில் தீட்டித் தருவார். அவரின் அக்கா பூங்கொடியை லாரன்ஸ் காதலித்து திருமணம் செய்வார். அவர்களுக்குப் பிறக்கும் தன் மருமகன் செளமியனின் மீது அவருக்கு அளவுகடந்த பிரியம். பூபாலன் ஆர்ட்ஸ் எழுதி வரும் பூபாலன் செளமியனின் பிறப்பிற்குப் பின் செளமி ஆர்ட்ஸ் என்று எழுதுவார். மிகப் பெரிய கேரம் பிளேயரான லாரன்ஸ் அண்ணா முதன் முதலாக தனக்குச் சூட்டிக் கொண்ட செளமியன் எனும் புனைப்பெயரைத்தான் தன் மகனுக்குப் பெயராகச் சூட்டியிருப்பார் என்பது நாவலில் இடம்பெறும் இன்னொரு விசயம்.
பூமாவும் ஜியாலுதின் பாயும்
பூமா ஏழு வயது குழந்தையோடு இருப்பவள். கணவர் ஜியாலுதின் பாய் டெய்லர் கடையில் வேலை பார்ப்பவர். செளமியன் அரசு வேலைக்கானத் தேர்வுக்காகத் தயார் செய்யும் நேரத்தில் பூமாவுக்கு ஏற்படும் மையலும், செளமியனுக்கு அவள் மீது ஏற்படும் மையலும் இருவரும் இணையக் காரணமாகி, அது பேட்டை முழுவதும் பரவி அவர்கள் இணைந்திருந்த அந்தரங்க வீடியோ வாட்ஸப்பில் பரவி, ஜியாலுதின் பாய் பூமாவை அடித்துத் துவைத்து, அதனைத் தொடர்ந்து அவள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்ள். அவள் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் அவமானம் தாங்க முடியாமல் உடலில் தீ வைத்து விடுகிறாள். பின் காப்பாற்றப்படுகிறாள். அந்தரங்க வீடியோவை வாட்ஸப்பில் யார் வெளியிட்டார்கள் என்று கண்டுபிடித்து அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று ரூபனுக்குள் செளமியனின் குரல் கட்டளையிடுவதாக ரூபன் பிறழ்வு நிலையில் இருக்கும் நாவலின் பின் பகுதியில் வெளிப்படும் இடத்தில் பூமாவை நெருங்கச் சொல்லும் ரூபனின் உள்ளிருக்கும் செளமியனின் குரலும், பாய் தனக்கு செய்வினை வைத்து விட்டதாக அலறும் ரூபனின் குரலும் பயங்கரமாக எதிரொலிக்கும்.
பால் மோசஸ் எனும் மோசஸ் அய்யா எனும் பாஸ்டரய்யா
மதுரையில் இருக்கும் பால் மோசஸ் பேட்டை மக்களோடு மக்களாகப் பழகி இயேசுவின் சுவிசேஷ ‍ஜெபவீட்டை நிறுவுகிறார். அவர் அந்தரங்கச் சுத்தியோடு சேரிப் பிள்ளைகளின் கல்வியிலும் அவர்களை வெளிநாடு அனுப்பி முன்னேற்றுவதிலும் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார். ரூபனின் அம்மா ரெஜினாவின் பேயாட்டத்தை அவரே ஜெபம் செய்து விரட்டுகிறார். அவருக்குப் பின் ஜெபவீடு அவரது தம்பி எபினேசர் கைக்கு வந்தப் பிறகு ஜெபவீட்டின் சிறப்பு குறைகிறது. எபினேசரின் வஞ்சிப்பால் வயிற்றில் கருவைச் சுமந்து ஜாய்ஸ் தீக்குளித்து இறப்பதும் நடக்கிறது. அந்தத் தற்கொலை விவகாரத்தில்தான் எபினேசர் போலீசில் சிக்குவார். நான்கு பிளாக்குகள் இருக்கும் அந்தச் சந்துகளில் சுமார் இருத்தாறு சபைகள் முளைத்து இருக்கின்றன என்றாலும் தாய்ச் சபை என்பது பாஸ்டரய்யா நிறுவிய சபையே. பாஸ்டரய்யா இயேசு கிறிஸ்துவை மட்டுமே வணங்க வேண்டும், மாதாவை வணங்கக் கூடாது என்று சொல்லும் இடங்களும் அதற்கான அவரது விளக்கங்களும் நாவலில் அழுத்தமாகச் சொல்லப்படுகின்றன. அதன் தாக்கம் ரெஜினாவிடம் மிகுவதும் நாவலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ரூபனின் காதலியும் மனைவியும் ஆன இவாஞ்சலின்
இவாஞ்சலின் கேரளாவின் குருசுமலை தேயிலைத் தோட்டப் பகுதியைச் சார்ந்தவள். நர்ஸாகி மாநாகரின் பிரஜையானவள். பெண்கள் விடுதியில் அவள் படும் அவமானங்களும், தனிமையில் உழலும் அவளின் வாழ்வியலும், தன்னை நேசிப்பவர்கள் அவளைப் பிரிவது மற்றம் மறைவதில் ஆற்றாமை கொள்வதிலும், பணியில் அவள் காட்டும் நேர்த்தியிலும் ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்தில் நிலைகொள்ளும் ஒரு பெண்ணின் புலம்பெயரும் வாழ்வு நாவலில் பதிவாகியுள்ளது. ரூபனின் அவள் கேட்கும் அருவி ஆசையும், அதற்கு ராஜனாகி ரூபன் சொல்லும் கதையும் அவர்களின் மும்தாஜ்-ஷாஜகான் காதலைப் போன்ற ஒரு வெளிப்பாடு.
ரூபனின் ஐ.டி.நண்பர்கள்
ரூபனின் ஐ.டி.நண்பர்களாக வரும் சைலேந்தர், விஷால், உபாசனா போன்றோர் அவனது மனநிலைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் முனைப்பு காட்டுவர். ரூபனின் மனநிலைப் பிறழ்வான அட்டூழியங்களை அவர்கள் பொறுத்துக் கொள்ளும் இடத்திலும் சரி, ரூபனுக்குத் தகுந்தவாறு அவனை ஆற்றுப்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் சரி சேரி நண்பர்களுக்கு இணையான அன்பில் அவர்களும் உள்ளார்கள். நட்புக்கு என்ன வேறுபாடு? அவர்கள் பள்ளித் தோழர்களாக இருந்தாலும், பணித் தோழர்களாக இருந்தாலும் என்ற இடத்தை அவர்கள் காட்டும் இடங்கள் ஒவ்வொன்றும் டச்சிங்.
ரூபனின் இலக்கிய ஆலோசகர் கிள்ளிவளவன்
கிள்ளிவளவன் சினிமா டைரக்டராக ஆக வந்து தீவிர உலகத் திரைப்படங்கள் பார்த்து கலை இலக்கிய விமரிசகராக ஆனவர். ரூபனுக்கு அவரே இலக்கிய ஆலோசகர். ரூபன் விரைவில் நாவல் எழுதுவாக போடும் பேஸ்புக் பதிவுக்குப் பின் அவனுக்கு நாவல் எழுதுவதற்கான ஐடியாக்களை அவர் அள்ளி விடுகிறார். சினிமாவுக்கு வந்த அதில் நிலைபெற முடியாமலும், அதிலிருந்து விலக முடியாமலும் ஊசலாடிக் கொண்டிருக்கும் பெருநகரப் பிரஜைகளின் அடையாளமாக கிள்ளிவளவன் இருக்கிறார்.
கிருஷ்ணாம்பேட்டை இடுகாடு பிரச்சனைகள்
சிந்தாதரிப்பேட்டையிலிருந்து மரணிப்பவர்களைக் கிருஷ்ணாம்பேட்டைக் கொண்டு சென்று அடக்கம் செய்கிறார்கள். அப்படிக் கொண்டு செல்லும் போது ஏற்படும் பிரச்சனைகளால் கேரம் கோச்சான மாசிலா எனும் மாசிலாமணியின் அடக்கம் அல்லலோகலப்படுகிறது. அதனால் லாரன்ஸின் அடக்கத்தின் போது அடக்கியே வாசிக்கிறார்கள் சிந்தாதரிப்பேட்டைவாசிகள். சமயங்களில் வேடிக்கைப் பார்க்கும் பெண்களைச் சீண்டி விடுவது, ஓவராக சவுண்ட் விடுவது, பறைமேளம் கொட்டுவது குதியாட்டம் போடுவதன் காரணமாக இரு பேட்டைக்காரர்களுக்கும் இடையே சண்டை மூண்டு விடுவது, கலவரங்கள் உருவாவது குறித்தும் நாவலில் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
நாவலின் மாந்தர்கள்
நாவலின் மாந்தர்கள் பெரும்பாலும் பேட்டைவாசிகளே. ஆங்கிலோ இந்தியர்களும் வருகிறார்கள். சுவிசேஷ சபையின் பாஸ்டர்கள், பிரதர்கள், சிஸ்டர்களும் நாவலின் முக்கியப் பாத்திரங்கள். தர்க்காவாசிகள், மாட்டிறைச்சிப் போடும் பாய்கள், சாமியார்கள், ஐ.டி.யில் பணிபுரியும் மனிதர்கள் ஆகியோரும் நாவலில் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...