15 Jan 2019

பேட்டை நாவல் குறித்த சில முன்வைப்புகள்


பேட்டை நாவல் குறித்த சில முன்வைப்புகள்
வசை மொழிகளால் ஆன நாவல்
நாவலை எழுதிய தமிழ்ப்பிரபா எதையும் மறைக்க விரும்பவில்லை. கதையில் மையச்சரடாக அவர் படைத்திருக்கும் ரூபன் அநேகமாக அவராகவே இருக்கும் என்று கருதுகிறேன். அவர் பேட்டையில் புழங்கும் வசைமொழிகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.
பொதுவாக வசைமொழிகள் ஒவ்வொன்றும் உடல்உறுப்புகளை பாலியலை மையமாகக் கொண்டவைகளே. முதன்முதலாக அவைகளைக் கேள்விப்படாதவர்கள், அது குறித்து அருவருப்புக் கொள்பவர்களுக்கு இந்நாவல் நிச்சயம் அதிர்ச்சிகரமான ஒன்றாக இருக்கலாம். 
வசைமொழிகள் பேட்டைவாசிகயின் அன்றாட வாழ்வியல் மொழிகளாகி விட்டது போன்ற தோற்றத்தை நாவல் தருகிறது. அதற்காக பேட்டைவாசிகள் மட்டுமே வசைமொழிகளைப் பயன்படுத்துவது போன்ற தோற்றத்தைக் கொண்டுவிடுவதற்கில்லை. உயர்ந்த கலாச்சாரத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தும் பாஸ்டர்டு போன்ற சொற்கள் போன்றவைகளே அவைகள். உண்மையான பேட்டையைக் கண்முன் கொண்டு நிறுத்துவதில் இந்த வசைமொழிகள் நாவலில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அவர்களைப் பொறுத்த வரையில் அந்த நேரத்து உணர்வு வெளிப்பாட்டின் வார்த்தைகள் மட்டுமே. மேலதிக உள்ளர்த்தங்கள் அவைகளுக்கு இல்லை.
வாய் டாக்கா, கை டாக்கா, பேக் அடிப்பது போன்ற பாலியல் சார்ந்த வட்டாரச் சொற்களும் இந்நாவலில் இருக்கின்றன.
ஒரு வகையில் பார்த்தால் தமிழ் நாவல் வரலாற்றில் பேட்டை நாவலில் இடம்பெற்ற இருக்கும் உரையாடல்கள் வெறு லெவல் வகையைச் சார்ந்தவையே. இவ்வளவு தைரியமாக, வெளிப்படையாக அவைகளை உள்ளது உள்ளபடியே எவ்வித மறைவு இல்லாமல் சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டியிருக்கும். அந்தத் துணிவும், அந்தத் துணிவினால் உந்தப்பட்ட உணர்வுமே தமிழ்ப்பிரபாவை வசனங்களில் எவ்வித சென்சாரும் இல்லாமல் எழுதத் தூண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
மாநகர தலித்திய பண்பாட்டு நாவல்
கிராம தலித்திய பண்பாடுகளைக் காட்டும் நாவல்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் மாநகர தலித்தியப் பண்பாட்டை உரக்கச் சொல்லும் நாவலாகவும் இந்நாவல் உள்ளது. வெள்ளந்தியான அவர்களின் அன்பும், நிர்ஆதரவால் கிறித்துவத்தைத் தழுவிய அவர்களின் வாழ்வியலும், புறக்கணிப்புன் வலியைச் சுமக்கும் அவர்களின் வேதனையும், கானாப் பாடலில் வெளிப்படும் அவர்களின் வாழ்முறையும், கேரம் ஆட்டத்தில் கில்லியாக இருக்கும் அவர்களின் விளையாட்டு அமைவும், குடியும் போதையுமாக சீரழியும் அவர்களின் பின்னணியும் அதற்கானப் பின்புலங்களும் இந்நாவலில் பதிவாகியுள்ளன. கூவம் நதி அவர்களின் அடையாளமாகவே நாவலின் கடைசி வரை பயணிக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் மத்தியச் சென்னை மாநகர தலித்திய வாழ்வியலின் அடையாளமாகவே இந்நாவலைச் சொல்லலாம்.
மனப்பிறழ்வின் உடல்மொழி பேசும் நாவல்
மனநிலைப் பிறழ்ந்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது இந்நாவலில் ரெஜினாவுக்கு நேரும் மனப்பிறழ்வின் போதும், ‍அதே மாதிரி பின்னர் ரூபனுக்கு ஏற்படும் மனப்பிறழ்வின் போதும் நன்கு பதிவாகியுள்ளது. உடலின் முறைப்பும், பற்களை நறநறவென வைத்துக் கொள்வதும், மிகை உணர்வில் அவர்கள் செய்யும் திமிறல்களும், கட்டுக்கடங்காமல் செய்யும் விடுபடல்களும் மிக நுட்பமாக நாவலில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ரூபன் கிளி போல பேசுவதும், கால் கட்டைவிரலால் நடப்பதும், சபைக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு சபையிலிருந்து ஓட்டம் பிடித்து பேய் போல ஓடி வருவதும், நாய்கள் சில துரத்த முயன்று ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நின்று விடுவதும், எச்சிலை சளியோடு காறித் துப்புவதும் மனநிலைப் பிறழ்வின் உடல்மொழியைக் காட்டும் இடங்கள்.
கேரம் ஆடுபவர்களின் உடல்மொழி சொல்லும் நாவல்
மத்திய சென்னையைப் பற்றிப் பேசும் இந்நாவல் கேரம் விளையாட்டு எவ்வாறு பேட்டைவாசிகளின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது என்பதைச் சொல்கிறது. கேரம் நுணுக்கமாக ஆடுபவர்கள் எவ்வாறு உடலை வைத்துக் கொள்வார்கள், ஸ்ட்ரைக்கரை எப்படி வைத்துக் கொள்வார்கள், அவர்களின் பார்வை எப்படியெல்லாம் அமையும் என்பதை நுட்பமாகச் சொல்கிறார் தமிழ்ப்பிரபா. கேரம் கோச்சான மாசிலாவும், கேரம் விளையாட்டால் வேலைக்குப் போன லாரன்ஸூம் பேசிக் கொள்ளும் இடங்கள் அதை மிக நுட்பமாகச் சொல்கிறது.
கவனம் ஈர்த்த நாவல்
2018 ஆம் ஆண்டின் கவனம் ஈர்த்த நாவல்களில் தமிழ்ப்பிரபாவின் 'பேட்டை' நாவலுக்கு முக்கிய இடம் இருக்கிறது. இந்நாவல் உயிர்மை வழங்கிய சுஜாதா விருது பெற்றிருப்பதுடன், விளிம்பு நிலை மக்களின் படைப்புக்கான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் வழங்கப்படும் விருதையும் பெற்றிருக்கிறது.
சென்னையைப் பேச விரும்புவோர்க்கும், அறிந்து கொள்ள விரும்புவோர்க்கும், சென்னையைப் பதிவு செய்ய விரும்புவோர்க்கும், திரையில் சென்னையைக் காட்சிப்படுத்த விரும்போர்க்கும் இந்நாவல் நல்ல ஒரு ரெபரன்ஸாக இருக்கும். வெறும் நாவலாக மட்டும் சுருக்கி விட முடியாமல் மத்தியசென்னையின் வாழ்வியலைப் பேசும் வரலாறாகவும் இந்நாவல் விரிவது இதன் ஆகப் பெரும் சிறப்பு.
நாவலின் துவக்கத்தில் இருக்கும் வரலாற்றுக் குறிப்புகளோடு நாவல் தொடங்கி நடைபோடும் இருநூற்றுப் பக்கங்கள் வரை ஒரு வித ஏமாற்றத்தைத் தந்த போதிலும் அதற்குப் பின் தன் இறுக்கமான இடத்தை இந்நாவல் அடைகிறது.
ஒரு அமெச்சூர் நாவலுக்கும், ஒரு கிளாஸிக் நாவலுக்கும் இடைபட்ட நிலையில் இந்நாவல் நின்ற போதிலும் இந்நாவல் பேசும் பொருள் இதுவரை தமிழ் நாவல் உலகில் பேசப்படாத ஒன்று.
இந்நாவலை எழுதிய தமிழ்ப்பிரபா ஒரு நேர்காணலில் தன் நண்பர்களின் மரணமே இந்நாவலை எழுதத் தூண்டியது என்பதைக் குறிப்பிட்டு இருக்கிறார். குடியும் போதையுமாக மாறிப் போன ஒரு பெருநகரக் கலாச்சாரத்தை எப்படியும் மீட்டுக் கொணர வேண்டும் என்ற மறைமுக அக்கறையையும் இந்நாவல் பேசுகிறது.
அதற்கானத் தீர்வை பாலுவின் பாத்திரத்தின் மூலம் தமிழ்ப்பிரபா தர முயற்சிக்கிறார். பாலு பெட்டிங் ஆடி சம்பாதித்து தன் சமூகத்துக்கான அடுத்த கட்டத்தை நோக்கியப் பணியில் இறங்குகிறார். இது அவரின் குருநாதர்களான மாசிலாவும் லாரன்ஸூம் சொன்ன முறைகளுக்கு எதிரானதுதான் என்றாலும் விளிம்பு நிலையில் நிற்கும் பேட்டைவாசிகளுக்கு கல்வியும், விளையாட்டும், கலையும் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை அதன் மூலம் சுட்ட விரும்புகிறார் என்றே சொல்லலாம். இருப்பவர்கள் தாமாக முன்வந்து அதுபோன்ற கல்வி, கலை, விளையாட்டு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டால் அது இந்நாவலுக்கு செய்யும்  நல்லதொரு நன்றிக்கடனாக இருக்கும்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...