19 Jan 2019

சிந்தாதரிப்பேட்டை - சில புரிதல்கள்


சிந்தாதரிப்பேட்டை - சில புரிதல்கள்
பேட்டை என்ற சொல்லுக்கு நகரத்துக்கு அருகில் உள்ள சந்தையுடன் கூடிய கூடல் நிகழும் ஊர் என்றும் புறநகர் என்றும், பிரயாண வண்டிகள் தங்கும் இடம் என்றும் பொதுவாக அகராதிகள் பொருள் தருகின்றன.
தொழிற்சாலைகள் அதிகமுள்ள இடங்கள் தொழிற்பேட்டை என்றும், சந்தைப் பகுதி மிகுந்துள்ள பகுதிகள் சந்தைப் பேட்டை என்றும், வண்டிகள் நிறுத்தும் இடங்கள் வண்டிப்பேட்டை என்றும் வழங்கப்படுகின்ற வழக்கத்தை அகராதி பொருளோடு ஒப்பு நோக்கலாம்.
சென்னை மாநகரில் பேட்டை, பாக்கம், சாவடி, பஜார், ஊர், ஏரி என்று முடியும் இடப்பெயர்கள் நிறைய உள்ளன.
பேட்டை என்று,
            சிந்தாதரிப்பேட்டை,
            தண்டையார்ப்பேட்டை,
            வண்ணாரப்பேட்டை,
            குரோம்பேட்டை,
            சைதாப்பேட்டை,
            தேனாம்பேட்டை என்று நிறைய இடப்பெயர்கள் பேட்டை என்ற பெயரில் முடிவடைகின்றன.
            தொண்டியார் என அழைக்கப்பட்ட குணங்குடி மஸ்தான் சாகிபு எனும் இசுலாமிய ஞானியும் புலவரும் தங்கியதால் தொண்டியார்பேட்டை என அழைக்கப்பட்டப் பகுதி காலப்போக்கில் தண்டையார்பேட்டை ஆகியுள்ளது.
            ஆங்கிலேயர்கள் ஆடைகளை வெளுப்பதற்காக சலவைத் தொழிலாளிகளை குடியமர்த்திய பகுதி வண்ணாரப்பேட்டை என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் வண்ணாரப்பேட்டையை Washermanpet என்று அழைத்தனர்.
            சேம்பர்ஸ் எனும் ஆங்கியேர் 'குரோம் லெதர்' எனும் தோல் பதனிடும் கம்பெனியைத் துவக்கியப் பகுதி குரோம்பேட்டை என வழங்கப்படலாயிற்று.
            குதிரை வியாபாரி சையது அகமது கானின் நினைவாக சையத்கான்பேட்டை என்று அழைக்கப்பட்ட பகுதி சைதாப்பேட்டை ஆகியுள்ளது.
            தெய்வநாயகம் முதலியார் நினைவாக தெய்வநாயகம்பேட்டை என அழைக்கப்பட்ட பகுதி காலப்போக்கில் தேனாம்பேட்டை ஆகியுள்ளது.
            இங்கிலாந்தில் ஏற்பட்ட காலிகோ பிராண்ட வகை துணிகளின் டிமாண்டுகளுக்காக நெசவாளர்கள் குடியமர்த்தப்பட்ட பகுதி சிறிய தறிகள் மிகுந்த பகுதியாக இருந்ததால் சின்னதறிப்பேட்டை என அழைக்கப்பட்டு காலப்போக்கில் சிந்தாதரிப்பேட்டையாக மருவியது.
            அந்த சின்னதறிப்பேட்டை என்பது 1719 இல் சென்னை மாகாண ஆளுநர் காலட் அவர்களால் சுங்குராமர் என்பவருக்கு உரிமைப்பத்திரமாக வழங்கப்பட்டப் பகுதியாகும்.
            சென்னையில் கூவம் வளைந்து செல்லும் தெற்குப் பகுதியில் அமைந்த அப்பகுதி மூன்று பக்கமும் நதியால் சூழ்ந்து பார்ப்பதற்கு தீபகற்பம் போல காட்சித் தந்திருக்கிறது.
            1735 இல் நெசவாளர் குடியேற்றங்களை ஏற்படுத்த முனையும் அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் மார்டன் பிட் என்பவர் சுங்குராமரின் உரிமைப்பத்திரமானது கல்கத்தா கெளன்சிலின் அனுமதியைப் பெறவில்லை என்பதை வில்லங்கமாகச் சுட்டிக் காட்டி சுங்குராமரின் இடத்தை அபகரிக்கிறார்.
            சுங்குராமர் குறித்த மேற்சொன்ன செய்திகள் கே.ஆர்.நரசய்யா என்பவரால் எழுதப்பட்டிருக்கும் 'மதராசப்பட்டினம் - சென்னை பெருநகரத்தின் கதை 1600-1947' என்ற நூலில் பதிவாகியுள்ளது.
            சிந்தாதரிப்பேட்டை குறித்து பேட்டை என்ற நாவல் எழுதியுள்ள தமிழ்ப்பிரபா சுங்குராமர் குறித்த இச்செய்திகளை தனது நாவலிலும் பதிவு செய்துள்ளார். கூடுதலாக அந்நாவலில் பதிவாகியுள்ள சுங்குராமர் இறப்பு குறித்த செய்தி என்னவென்றால்,
            சுங்குராமர் ஆளுநர் பிட்டை எதிர்த்து வழக்காட முடியாத இயலாமையாலும், நிலம் பறிபோவதைத் தடுக்க முடியாத ஆற்றாமையாலும் தனக்கு  உரிமைப்பத்திரமாக வழங்கப்பட்ட நிலத்தில் தாம் கட்டிய காரனேஸ்வரி கோயிலில் தூக்கி மாட்டிக் கொண்டு இறக்கிறார். அவரது இறப்பு கூட வெளியுலகுக்கு தூக்கில் தொங்கிய அவரின் பிணம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதுதான் தெரிய வருவதாக தமிழ்ப்பிரபா தனது நாவலில் சொல்கிறார்.
            சுங்குராமரின் நினைவாக சிந்தாதரிப்பேட்டையில் இப்போதும் ராமர்தோட்டம் என அழைக்கப்படும் பகுதி இருப்பதையும் தமிழ்ப்பிரபா தனது நாவலில் சுட்டுகிறார்.
            இப்படி ஒரு வரலாற்றுப் பின்புலத்துடன் கூடிய சிந்தாதரிப்பேட்டையை மையமாகக் கொண்டு தமிழ்ப்பிரபா புனைந்துள்ள பேட்டை எனும் நாவல் சிந்தாதரிப்பேட்டையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் அங்கு வாழும் விளிம்புநிலை மக்களின் வாழ்வையும் எவ்வித பாசாங்குமின்றி உள்ள உள்ளபடி படம் பிடித்துக் காட்டுகிறது. மாநகர விளிம்புநிலை மக்கள் குறித்து தமிழில் வெளிவந்துள்ள மிக முக்கியமான நாவலாகவும் முதன்மையான நாவலாகவும் இந்நாவலைக் குறிப்பிடலாம்.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...