14 Jan 2019

ஆதித் தமிழன் உலகில் ஆம்புலன்ஸ் இல்லை


ஆதித் தமிழன் உலகில் ஆம்புலன்ஸ் இல்லை
108 என்ற எண்ணைப் பயன்படுத்தி தமிழன் 108 முறை சிவாய நம எழுதியிருப்பான் அல்லது ராம ஜெயம் எழுதியிருப்பான்.
பாம்பு கடித்து விட்டால் அதற்கான விஷ முறி மருந்தை அவன் கொல்லையில் வைத்து இருந்தான். பெரிய நங்கை, சிறிய நங்கை என் பாட்டிமார்கள் சொல்வதைக் கேள்விபட்டு இருக்கிறேன். இப்போது விக்ஸ், அமிர்தாஞ்சன், மூவ், பாராசிட்டாமல் என்று என்னென்னவோ வைத்து இருக்கிறான்.
மாரடைப்பு வந்தால் பொட்டெனப் போய் விடுவான். கட்டிலில் கிடந்து சாவதெல்லாம் இருந்ததில்லை. ஒன்றிரண்டு வயசான கட்டைகள் அப்படிக் கிடந்தாலும் அதைப் பற்றிக் கவலைபடாமல் அதற்குரிய பணிவிடைகளைக் கவலைபடாமல் தினந்தோறும் செய்து கொண்டே வாயில் பால் ஊற்றிப் பார்த்துக் கொண்டே இருப்பான். கிழத்துக்குப் பிடித்ததையெல்லாம் செய்து கொடுத்துக் கொண்டே இருப்பான்.
ஆஸ்பிட்டலில் சேர்த்து சாகடிப்பதற்காக அவன் அஞ்சு லட்சம், பத்து லட்சம் எல்லாம் செலவு பண்ணியதில்லை. போர்க்களத்தில் வீரசாவு செத்தவனே அன்றி படிதாண்டிப் போய் செத்தவன் இல்லை ஆதித்தமிழன்.
நீரில் மூழ்கி உயிருக்குப் போராடுபவர்களுக்காக வண்டிச் சக்கரங்களை தயார் நிலையில் வைத்து இருந்தான் அவன்.
ஊசி போடுவதற்கு அழிச்சாட்டியம் பண்ணி ஊசி போட வந்தவர்களை உதைத்து இருக்கிறான்.
சாவு வந்தால் செத்துத் தொலையணும்டா! அதை வுட்டுபுட்டு லட்சக் கணக்கில செலவு பண்ணி ஆஸ்பத்திரியில இழுத்துக்கிட்டு கிடக்கக் கூடாதுடா! என்பதில் அவன் உறுதியாகவே இருந்திருக்கிறான்.
அவனைப் பொருத்த வரையில் சாவை மிக கெளரவமாகவே பார்த்திருக்கிறான். யாருக்கும் எந்தச் சங்கடமும் தராமல் போய் விடுவதை மிகப் பெருமையாகவே பார்த்திருக்கிறான். எப்பா எமதர்மா வயசாகிட்டேப் போகுதே எப்போ வந்து என்னை அழைச்சுகிட்டுப் போகப் போறே என்று செம கூலாக கேட்டிருக்கிறான்.
பெரும் பயணங்களை மிக சாவகாசமாகவே செய்திருக்கிறான். கல்யாணம், கருமாதி விஷேசங்களுக்குப் போனால் டேரா அடித்துத் தங்கி விட்டு ஆசுவாசம் செய்து கொண்ட பின்னே வந்திருக்கிறான். ஏனென்றால் அவனது அந்த ஆதித்தமிழன் உலகில் ஆம்புலன்ஸ் இல்லை.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...