10 Jan 2019

கணியன் சொல்வது என்னவென்றால்...


கணியன் சொல்வது என்னவென்றால்...
எல்லாம் ஒரு தாக்கம், சபலம்தான். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் எதுவும் ஏற்படப் போவதில்லை.
தனக்குள் இருக்கும் தன்னை அறிவது வெளிச்சம். தன்னிலிருந்து வெளிப்படுவதே தனக்கான செல்வம். அதற்கு முக்கியத்துவம் கொடுப்பவரை உலகின் எந்த செல்வமும் அடிமைப்படுத்த முடிவதில்லை.
ஒரு நிலைக்கு மேல் எதையும் செய்ய வேண்டியதில்லை என்பதைப் புரிந்து கொண்டவரே வாழ்க்கையின் தாத்பர்யம் தெரிந்தவர். இன்னும் இன்னும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் வாழ்க்கையின் தாத்பர்யத்தை உணர வேண்டியவர்.
இதைப் போதும் என்ற மனது என்று அனுபவப்பட்டவர்கள் சொல்வார்கள். ஆனால் இதுவோ திருப்தியான மனது என்ற ஞானிகள் சொல்வார்கள்.
சிறியதன் அழகு பெருத்ததில் இல்லை. பெரிது என்கிற பிரமாண்டம் எப்போது வேண்டுமானாலும் பலூன் போல் வெடித்துச் சிதற தயாராக இருக்கிறது. சிறியதைச் சிதறச் செய்வதோ, உடைத்து எறிவதோ எளிதில்லை. அப்படி உடைக்கப்பட்டால் அதைப் போன்ற சக்தியுடன் வெளிப்படுவது எதுவுமில்லை.
புதிது புதிதாக நிரம்புவதில் எதுதான் நிறைவடைகிறது? எவர்தான் நிறைவு அடைகிறார். அது மாயப்பாத்திரத்திற்குள் கொட்டப்படும் நாணயங்கள். மாயப் பாத்திரமோ ஒரு போதும் நிரம்புவதில்லை.
இயன்றதைச் செய்பவர் எங்கேயும் வழுக்கி விழுவதில்லை. அவரின் கால்கள் அளவானது. செயல்கள் கனக்கச்சிதமானது.
நிறைய செய்வதால் மட்டும் நிறைய பெற்று விட முடியாது. எதை எவ்வளவு செய்ய வேண்டும் என்ற தெளிவே அடைவதைத் தீர்மானிக்கிறது.
மென்மேலும் செம்மை என்பவர் இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு மாயக்குதிரையில் சவாரி செய்பவர் ஆவார். இயற்கையோடு செல்பவர் இன்னொரு குதிரையில் சவாரி செய்ய நினைப்பதில்லை. அவர் காற்றோடு காற்றாகவும் பயணம் செய்ய வல்லவர். காற்றோடு பயணம் செய்ய நினைப்பவர் தன்னை எடைகளால் நிறைத்துக் கொள்ள மாட்டார். பஞ்சைப் போன்று லேசாக ஆகுவார்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...