உங்களுக்கான அடிமை சாசனத்தை நீங்களே
எழுதிக் கொள்ள வேண்டாம்!
எவ்வளவு கவனமாக
இருந்தாலும் பிரச்சனையில் சிக்க வேண்டியிருக்கிறது என்றால் பிரச்சனையில் சிக்குவதற்குக்
காரணம் கவனக்குறைவு மட்டும் இல்லை மிக அதிகமாக கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும்தான்.
சாதாரணமாகச்
செயல்படுவதற்கு மிக அதிகமாக மனம் சிந்திக்கும். இதில் மிக அதிகமாகச் செயல்பட நினைக்கும்
போது மனம் மிக மிக அதிகமாகச் சிந்திக்கும்.
எதுவும் ஒரு அளவுதான் என்பது உண்மையானால் மிக அதிகமாக ஊதப்படும் பலூன் வெடித்து விடும்.
செயல்படுவது,
அதிகமாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பது என்று எல்லாவற்றிலும் அவரவர்க்கு ஏற்ற
ஓர் அளவு இருக்கக் கூடும். அளவுக்கு மீறி ஊற்றப்படும் தண்ணீர் பாத்திரத்திலிருந்து
வழியுமே அன்றி நிறையப் போவதில்லை.
நம்மைப் பைத்தியக்காரர்களாய்
நினைப்பவர்கள் முன் அந்தப் பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்து கொண்டிருப்பதைப்
போன்ற ஓர் அபத்தம்தான் அதிகமாகச் செயல்பட வேண்டும் என்று நினைத்து அதற்கே அடிமையாகி
விடுவது.
அடிமைப்படுவது
என்பது மனித இயல்பு அன்று. சுதந்திரமாக இருந்தலே மனித இயல்பும் குணமாகும்.
நீங்கள் அடிமைப்படலாம்.
ஆனால் அது வாழ்க்கைக்கு விரோதமானது.
ஒன்று நீங்கள்
உங்களுக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. இரண்டாவது மற்றவர்களுக்கும் அடிமையாக இருக்கக்
கூடாது.
ஏன் அப்படி
என்றால் சிந்திக்கத் தெரியாத ஒரு மனிதரால் மட்டுமே அடிமையாக இருப்பது சாத்தியம்.
சுதந்திரமாக
இருப்பதற்கு ஒரு பெரிய வானமே இருக்கும் போதே, ஒரு சிறு குழாய்க்குள் ரீங்காரமிட்டுக்
காதைக் கிழிக்கும் கொசுவாக இருக்க ஏன் பிரியப்பட வேண்டும்?
நான் வேலைக்கு
அடிமை என்று சொல்லலாம். வேலை ஒரு போதும் முதலாளியாக இருக்க முடியாது. மனிதரே முதலாளி.
வேலை தொழிலாளி.
மனிதருக்காகவே
வேலைகள் தொடரட்டும். வேலைகளுக்காக மனிதர்கள் உருவாக்கப்படாதிருக்கட்டும்.
*****
No comments:
Post a Comment