வீழ்ச்சி எப்போது வருகிறது?
மனிதர்கள்
யாரையும் நீங்கள் வீழ்த்த வேண்டியதில்லை. அவர்களின் ஆசைகளும், பயங்களுமே அவர்களை வீழ்த்தி
விடும்.
வீழ்த்த முடியாத
மனிதர் ஆசையற்றவராக இருக்கிறார். வெல்ல முடியாத மனிதர் பயங்கள் அற்றவராக இருக்கிறார்.
பேராசைப்படுபவர்
பெரும் அடிமையாக இருக்கிறார். தக்கை மிதக்கிறது. இரும்பு மூழ்குகிறது. அதனதன் இயல்பு
அப்படி. பேராசை அழுத்துகிறது. ஆசையற்ற தன்மை பறக்க விடுகிறது.
பேராசைப்படுவதில்
தவறு இருக்கிறது என யாரைக் கட்டுபடுத்த முடியும்? பேராசை தவறு என்ற சொல்வதில் எந்தத்
தவறு இருக்க முடியும்? அதனால் கதைகள் அதைத் தவறு என்று சொல்கின்றன. பேராசைப்படுபவன்
இழப்பான் என்று நீதி சொல்கின்றன.
பேராசைகளைச்
சமாளித்து வாழ முடியும் என்று மனிதர் நினைக்கலாம். பெரிய விசயங்களை அவ்வளவு எளிதில்
சமாளிக்க முடியாது. கனத்த உருவம் கீழே விழுந்தால் எழுவதில் சிரமம் இருக்கிறது.
செரிக்க முடியாத
உணவுப் பொருட்கள் மிகுந்த சுவை மிகுந்தவையாக இருக்கின்றன. சுவை குறைந்த உணவுப் பொருட்களில்
சுவை குறைந்து இருக்கலாம். உங்களது அஜீரணக் கோளாறு உணவுப் பொருட்களில் இருப்பதாகச்
சொன்னாலும் உங்களது உணவுத்தேர்வில் இருக்கிறது என்ற சொல்வது எப்படி தவறாகும்?
பேராசையில்
இரண்டு விதமான சிரமங்கள் இருக்கின்றன. அடைந்த பின் ஏற்படும் சலிப்பு ஒன்று. அடையாவிட்டால்
ஏற்படும் விரக்தி மற்றொன்று. இரண்டுமே தானாக தேர்ந்து கொண்டதால் நிகழ்ந்தது என்பதை
உணர்பவரே அதிலிருந்து விடுபடுகிறார். மற்றவர் காரணங்களை அடுக்குகிறார். சூழ்நிலைகளைத்
திட்டுகிறார். துணைக்கு நின்றவர்களை ஏசுகிறார்.
எளிமை எந்தப்
பிரச்சனையும் அற்றதாக இருக்கிறது. கடினமில்லாத நாணல் எல்லாவற்றுக்கும் வளையும். கடினமாக
வளரும் மரம் வளைய முடியாமல் முறியும். அதனதன் இயல்பே அதனதன் தன்மையைத் தீர்மானிக்கிறது.
வனையும் தன்மை
எளிமையின் இயல்பு. வளைவதால் ஒடியாமல் இருப்பது அதன் பண்பு. பண்புகள் நம் தேர்விலிருந்தே
உருவாகின்றன. தேர்வு என்பதில் நான் எதையும் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்பவரும்
தேர்ந்தெடுக்கவில்லை என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தவர் ஆகிறார்.
இந்த விசயங்களைக்
கடினமாகப் புரிந்து கொள்ள முடியாது. மிக எளிமையாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அந்த
எளிமையைப் புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறார்கள் என்பது எளிமையின் கஷ்டங்கள்.
*****
No comments:
Post a Comment