இனத்தை அழிப்பது இனப் படுகொலை என்கிறார்கள். அப்படியானால் மொழியை அழிப்பது மொழிப் படுகொலைதானே!
ஓர் இனத்தை
இன்னோர் இனம் அழிக்கும் என்பது போல,
ஒரு மொழியை
இன்னொரு மொழி அழிக்கும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட முடியாது.
ஒரு மொழியை
அந்த மொழிப்பேசும் மக்கள்தான் அழிப்பர். அந்த மொழியைப் பேசாமல் இருந்து, அந்த மொழியைப்
பேசுவது தகுதிக் குறைவு என்று எண்ணி, அந்த மொழியால் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லையென்று
குற்றம் சாட்டி ஒரு மொழியை அந்த மொழி பேசுபவர்களே அழிப்பர்.
இன்னும் சில
ஐந்தாண்டுகளிலோ, பத்தாண்டுகளிலோ தமிழ் நாட்டில் தமிழ் வழிப் பள்ளிகளைத் தேடிக் கண்டுபிடிக்க
வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
எந்த மொழியும்
ஓர் ஊடகம்தான் என்றாலும் தாய்மொழி வெறும் ஊடகம் மட்டுமா என்ன? நம் கலாச்சாரம், மரபு,
பண்பாடு எல்லாம் பொதிந்து இருக்கும் பாரம்பரியத்தின் விதை அது. அது விதைக்கப்பட்டுக்
கொண்டே இருக்க வேண்டும். நன்றாக விளைகிறது என்பதற்காக களைச்செடியைப் பயிரிடுவதைப்
போல வியாபாரம் ஆகிறது என்பதற்காக பிறமொழி வழிப் பள்ளிகளை தமிழகம் திறந்து கொண்டிருக்கிறது.
மாணவர் சேர்க்கையைக்
குறையாமல் தக்க வைப்பதற்காகவே பிறமொழி வழிப் பள்ளிகளைத் திறப்பதாக ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
கவர்ச்சியை
மக்கள் விரும்புகிறார் என்பதற்காக ஒரு திரைப்படம் முழுவதையும் கவர்ச்சிப் படமாக எடுப்பதைப்
போன்ற வாதம்தான் அது.
முறைகேடு
செய்தால் பணம் கிடைக்கிறது என்பதற்காக முறைகேட்டில் ஈடுபடுவதைப் போன்றதுதான் அது.
எவ்வளவோ
பேர் சொல்லி விட்டார்கள். பட்டால்தான் புத்தி வரும் ஒரு சூழ்நிலைக்கு நாம் வந்து விட்டோம்
என்றால்... யாரைச் சொல்லி எந்தக் குற்றமும் இல்லை. இன்னும் சில பல பத்தாண்டுகள் காத்திருக்க
வேண்டும், மீண்டும் தாய்மொழிவழிக் கல்விக்கூடங்கள் திறக்கப்பட.
எவ்வளவு நாள்
இன்னொருத்தர் காசில் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியும்? சொந்தக் காசில் சாப்பிடுவதற்கான
காலத்தை வடிவமைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படித்தான் தாய்மொழிவழிக் கல்விக்
கூடங்களை ஒரு கட்டத்துக்கு மேல் அமைக்காமல் இருக்க முடியாது. அதற்குக் காலங்கள் ஆகலாம்.
அந்தக் காலம் வராமல் இருக்காது.
*****
No comments:
Post a Comment