5 Jan 2019

மைண்ட் வாய்ஸ் மேட்டர்கள்


மைண்ட் வாய்ஸ் மேட்டர்கள்
மனதை அடிக்கடி மாற்றிக் கொண்டு இருப்பதுதான் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று எங்கள் தெக்குட்டுத் தாத்தா சொல்வார்.
அது என்னவோ நாமாக மெனக்கெட்டு மாற்றுவது போல அல்லவா சொல்கிறார். அதுவாக மாறிக் கொண்டு இருக்கிறது. அதுக்கு யார் என்ன செய்வது? என்று ஒலிக்கும் மைண்ட் வாய்ஸை தாத்தாவிடம் நான் காட்டிக் கொண்டதில்லை. அதனால் நான் தாத்தாவுக்கு எப்போதும் நல்ல பிள்ளை.
உணர்ச்சிதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம். அதை விட்டு விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று வெள்ளமேடு தாத்தா கூறுவார்.
உணர்ச்சிவசப்படாமல் இருக்க நாம் என்ன ஜடமா? கீழே கிடக்கும் கல் என்ன உணர்ச்சிவசப்படுகிறது? அதை எடுத்து வீசி அதை சுக்குநூறாய் உடைப்பதோடு இல்லாமல் எதிரே இருப்பவர்களையும் சுக்குநூறாய் உடைக்கிறார்கள். இந்த மைண்ட் வாய்ஸையும் நான் தாத்தாவிடம் காட்டிக் கொண்டதில்லை. அதனால் வெள்ளமேடு தாத்தாவுக்கும் நான் நல்ல பிள்ளைதான்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க என்றால் நனவிலி மனதில் கூட தப்பு செய்யக் கூடாது என்பதுதான். ஆக தன்னை அறியாமல் கூட கேடு செய்து விடக் கூடாது. எவ்வளவு நுட்பமாக சிந்தித்து இருக்கிறார் வள்ளுவர் என்பார் சொரிமுத்து தாத்தா.
நினைவில் வைத்துக் கொண்டு பிறன்கேடு செய்பவர்கள் எத்தனை பேர்? வள்ளுவர் அநியாயத்துக்கு நல்லவரை யோசித்து இருக்கிறார். இதுவும் மைண்ட் வாய்ஸ்க்குள்ளேயே நின்று விடும். அதனால் தான் சொல்வதை நான் மிகவும் ரசித்துக் கேட்பதாக தாத்தா நினைத்துக் கொள்வார். அவரிடமும் நல்ல பிள்ளைதான்.
கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? எப்படித்தான் இப்படி 24 மணி நேரமும் அப்படியே உட்கார்ந்து இருக்க முடியுதோ? வேலை கூட செய்ய வேண்டாம். எழுந்து கொஞ்சம் இப்படி அப்படி நடந்தாத்தான் என்ன! என்பார் மனைத்தலைவி.
பொறுப்பு இருக்கின்றதனால்தான் பொறுப்போடு அங்கே இங்கே நகராமல் வீட்டைப் பத்திரமாக பார்த்துக் கொண்டு இங்கேயே அங்கே இங்கே அசையாமல் உட்கார்ந்திருக்கிறேன் என்று மைண்ட் வாய்ஸில் தோன்றும். ஆனால் சொல்ல முடியுமா? எப்படித் தாத்தாக்களிடம் எல்லாம் மைண்ட் வாய்ஸை அடக்கி நல்ல பிள்ளை என்ற பேர் வாங்கி வைத்து இருக்கிறேனோ அதே முறையில் மனைவியிடமும் நல்ல பேரை வாங்குவதை விட்டு விட்டு அதை யாராவது உளறிக் கொட்டிக் கொண்டு அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வேட்டு வைத்துக் கொள்வார்களா என்ன!
இதிலிருந்து தெரிவது என்னவென்றால்... மைண்ட் வாய்ஸால் மனிதர்க்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதை உள்ளுக்குள் ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வெளியே உளறிக் கொட்டி தீபாவளிப் பட்டாசுகள் வெடிப்பது போல எரிமலைகளை வெடிக்கச் செய்து விடக் கூடாது.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...