மன்னர் கால ஜோக்குகள்
பத்திரிகைகளில்
நாம் படிக்கும் மன்னர் கால ஜோக்குகள் பல அரத பழசானவை. ஒரே மாதிரியான டெம்ளேட் வகையறாவைச்
சேர்ந்தவை. இன்னும் மன்னர் கால ஜோக்குகள் புழங்கவே செய்கின்றன.
இன்னும் இந்த
ஜோக்குகள் எப்படி புழங்கிக் கொண்டிருக்கின்றன என்று பல நேரங்களில் யோசித்திருக்கிறேன்.
மக்கள் நகைச்சுவைக்காக
ஏங்குகிறார்கள். அதற்கென சில பக்கங்கள் ஒதுக்க வேண்டியிருக்கிறது. பல வகை ஜோக்குகளில்
அதுவும் ஒரு வகையாக இருக்கிறது. அதற்கும் கொஞ்சம் இடம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
தவிரவும்
மன்னர் கால ஜோக்குகள் பல நிகழ்காலத்தைப் பிரதிபலிப்பவைகளாகவும் இருக்கின்றன. நேரடியாக
நகைச்சுவை செய்ய முடியாத தலைவர்களை, பிரபலங்களை மன்னரைச் சாக்காக வைத்து கலாய்த்து
விடுகிறார்கள்.
பெரும்பாலான
மன்னர் ஜோக்குகள் புறமுதுகிட்டு ஓடி வரும் மன்னவர்களை மையமாகக் கொண்டவை. மன்னர்கள்
என்றால் வீரமானவர்கள் என்ற கருத்துக்கு எதிராக சமைக்கப்படுபவை இவ்வகை ஜோக்குகள்.
மன்னரின்
அந்தப்புரத்தை மையமாகக் கொண்டு எழுதப்படும் ஜோக்குகளும் அநேகம் உண்டு. தூது அனுப்பிய
புறாவைக் கறி சமைத்து சாப்பிடுவதாக புனையப்பட்டிருக்கும் ஜோக்குகளும் ஏராளம்.
மன்னர்களிடம்
பாடி பரிசில் பெறும் புலவர்களை வைத்து புனையப்படும் ஜோக்குகளும் ஏராளமாக கிடைக்கும்.
இவைகளைத்
தாண்டி சமகால அரசியலை அங்கதமாக வைத்து செய்யப்படும் மன்னர் வகையறா ஜோக்குகள் எப்போதும்
கவனத்தைக் கவருகின்றன. அவ்வகை ஜோக்குக்கள் மக்களாட்சி என்ற பெயரில் நடைபெறும் மன்னராட்சி
வகையிலான ஆட்சியை நையாண்டி செய்பவகைளாக அமைகின்றன.
காலப்போக்கில்
மன்னர் என்ற முறைமையை அரசமைப்பும், மக்களும் புறக்கணித்தாலும் மன்னர் கால ஜோக்குகளைப்
புறக்கணிக்க தயாரில்லை. நன்றாகவே வைத்து செய்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment