26 Dec 2018

சினிமாவுக்கு ஒரு சோதனைக் காலம்


2.0 இல் வியக்க வைத்தது எது? என்று ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள்.
ஒரு வகையாகச் சொன்னால் 2.0 படம் என்பது செல்பேசி மற்றும் செல்பேசி நிறுவனங்களுக்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கிறது. இப்படி ஒரு கருத்தை முன்வைக்கும் படத்தை எப்படி வெளிநாடுகளில் செல்போன் வழங்கும் நிறுவனமாக இருக்கும் லைக்கா என்ற நிறுவனம் தயாரித்தது என்பதுதான் என்னை வியக்க வைப்பதாக இருக்கிறது. அவர்களைப் பொருத்த வரை இதுவும் வியாபாரம்.
ரஜினியின் ரசிகர்கள் கோபிக்க மாட்டார்கள் என்றால்... இந்தப் படத்தில் ரஜினியின் ரோல் என்பது ஒரு கெஸ்ட் ரோல் போல்தான் எனக்குத் தோன்றுகிறது.
பொதுவாக மனுசனுங்களுக்காகப் பறவைகளைக் கொல்வார்கள். பறவைகளுக்காக மனுஷங்களைக் கொல்வாங்களா என்றால், ஷங்கர்தான் இப்படிச் சிந்திக்க முடியும்.
ஆவி, ஆத்மா என அடித்து விட்டு அதை அறிவியலோடு இணைத்ததில் இது அறிவியல் படமா? ஆவிப் படமா? இரண்டும் கலந்த அவியல் படமா? என்று ரொம்பவே குழம்பி விட்டேன்.
ஷங்கர் தனது சினிமா அத்தியாயத்தில் பேய்ப் படம் எடுக்கவில்லை என்ற குறை இருக்கக் கூடாது என்பதற்காக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் கவனிக்கத்தக்க நிறைய விசயங்கள் இருக்கின்றன.
ரோபோவை ஹீரோயின் ஆக்கியிருக்கிறார்கள். அதாவது ஒரு நடிகை ஹீரோயினாக நடித்து இருக்கிறார். வருங்காலத்தில் நிஜ ரோபோவையே ஹீரோயினாக நடிக்க வைக்கும் புரட்சியையும் ஷங்கர் செய்வார் என்றே நம்புகிறேன். அவரைப் பொருத்த வரையில் வியக்க வைக்கும் விசயங்கள் அவர் படத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.
மூன்று முகம் திரைப்படத்துப் பிறகு ரஜினிக்கு நிறைய ரோல்களில் நடிக்கும் வாய்ப்பைத் தந்திருக்கிறார் ஷங்கர்.
வில்லனைச் சித்தரிப்பதாக நினைத்து ஹீரோவாகச் சித்தரித்திருக்கிறார். ஹீரோவைச் சித்தரிப்பதாக நினைத்து வில்லனைச் சித்தரித்திருக்கிறார்.
வசனத்திற்காக சுஜாதாவின் இடத்தை நிரப்புவதற்காக ஜெயமோகனையும், மதன் கார்க்கியையும் நிறைய மெனக்கெட வைத்திருக்கிறார் ஷங்கர். ம்ஹூம்! இந்த விசயத்தில் சுஜாதாவுக்கு நோ ஆல்ட்டரேஷன்!
ஹாலிவுட் தரத்துக்கு ஒரு தமிழ்ப் படத்தைத் தந்திருக்கிறார் ஷங்கர் என்பதில் மகிழ்ச்சி. ஒரு தமிழ்ப் படத்துக்கு உரிய தரத்தில் சறுக்கியிருக்கிறார் என்பதற்காக கொஞ்சம் வருத்தமும், கவலையும் இருக்கவே செய்கிறது.
இந்த 'ஆத்மா இடம் பெயர்தல்' என்பது அடுத்த தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக ஆகும் என்று நினைக்கிறேன். 2.0 வைத் தொடர்ந்து சீதக்காதி என்ற ஒரு படம் வந்து இருக்கிறது. அதிலும் இந்த ஆத்மா இடம் பெயர்தல் இடம் பெற்று இருக்கிறது. இனி தமிழ் சினிமாவில் நிறைய ஆத்மாக்கள் இடம் பெயரும் என்று எதிர்பார்க்கலாம். தமிழ் சினிமாவுக்கு இது ஒரு சோதனைக் காலம்தான்!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...