25 Dec 2018

மீண்டெழுதலில் இலக்கியத்தின் பங்கு


மீண்டெழுதலில் இலக்கியத்தின் பங்கு
இந்த உலகம் எத்தனையோ அழிவுகளைச் சந்தித்து இருக்கிறது. ஒவ்வொரு அழிவைக் கடந்தும் உலகம் மீண்டு எழுந்திருக்கிறது. அழிவுகளிலிருந்து இலக்கியமே மனித சமூகத்தை மீட்டு கொணர்கிறது.
மனித சமூகத்தின் மீட்பர் இலக்கியம்தான்.
அழிவிற்குப் பின்னும் தன்னைத் தானே மீட்டுக் கொள்ளும் சக்தி இலக்கியத்திற்கே உண்டு.
முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் கடற்கோளால் அழிந்த போதும், தமிழ் இலக்கியம் மூன்றாம் தமிழ்ச் சங்கம் மூலம் தன்னை மீட்டுக் கொண்டது.
அழிவிற்குப் பின் யாராலும் தர முடியாத ஆறுதலை இலக்கியம் தருகிறது. இழவு வீடுகளில் பாடப்பெறும் ஒப்பாரி அப்படி ஒரு மீட்பை ஆறுதல் எனும் வடிவில் தருகிறது. ஒப்பாரி நாட்டுப்புற இலக்கியத்தின் வடிவம்.
இந்திய தேசத்துக்கு இழந்த சுதந்திரத்தை மீட்டுத் தந்ததே இலக்கியம்தான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொன்ன பிரெஞ்சு இலக்கியத்திலிருந்து தொடங்கி, பொதுவுடைமைச் சித்தாந்தத்தை எடுத்துச் சொன்ன கம்யூனிச இலக்கியம் என்று நீண்டு, இந்திய எழுத்தாளர்கள் ஒவ்வொருவரின் இலக்கியக் கனலில் மூண்டெழுந்த தீயிலிருந்தே இந்தியா சுதந்திரம் எனும் சுவாசக் காற்றை மீட்டெடுத்தது. பாரதியின் பாடல்கள் அப்படி ஓர் அக்னிக் குஞ்சாய் சுதந்திர மீட்டெழுதலில் ஒளிக்கனல் வீசியது.
எதை இழப்பதற்கும் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்கள் ஷேக்ஸ்பியரின் காவியங்களை இழக்கத் தயாராக இல்லை என்று சொன்ன இங்கிலாந்து சொல்ல வரும் செய்தி எழுச்சியும், மீட்சியும் இலக்கியத்தின் மூலம் சாத்தியம் என்பதைத்தான்.
அழிவுப் பாதையை ஆக்கப் பாதையாக மாற்றும் சக்தி இலக்கியத்தின் தனிப்பெரும் சக்தி.
'கூரை எரிந்து விட்டது
இனி
நிலவை தடையின்றிப் பார்க்கலாம்'
என்ற ஜென் கவிதை மனதளவில் மீட்டெழுதலை அழகாகப் பேசுகிறது.
'இழப்பதற்கு எதுவுமில்லை
கைவிலங்குகளைத் தவிர' என்ற சிவப்புச் சிந்தாந்தக்காரர் கூட இலக்கியத்தின் மாபெரும் காதலர். இலக்கியத்தின் வரிகளை இணைத்து விஞ்ஞான சோசலிசத்தை உருவாக்கிய பிதாமகர் அவர்.
விஞ்ஞானம் புற வாழ்வை மீட்டுத் தரும். மனமெனும் அகவாழ்வை மீட்டுத் தரும் மந்திரச் சாவி இலக்கியத்திடம் அல்லவா இருக்கிறது.
ஒவ்வொரு அழிவிற்குப் பின் அழிந்து விடாமல் மனிதநேயத்தை இலக்கியம்தானே விதைக்கிறது.
அவசர நிலை என்று வந்தால் முதலில் குழந்தைகள், அடுத்து முதியோர்கள், அடுத்துப் பெண்கள் அதன் பிறகே மற்றோர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற விதிகளை நாம் இன்று கடைபிடித்தாலும் இவையெல்லாம் இலக்கியம் கடத்திய மரபுகளே.
எம் அம்பு கொன்று விடும், ஆகவே குழந்தைகள், பெண்டிர், பசுக்கள், அந்தணர் ஆகியோர் இவ்விடம் விட்டு அகலுவீர் என்று பேசும் புறநானூற்றுப் பாடலை நம் சங்க இலக்கியம் காட்டுகிறது.
நிலையாமையைப் பேசும் காஞ்சித் திணை நம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. அழிவிற்கு எதிராக கொட்டப்பட்ட போர் முரசு அது. நிலையாமையை எண்ணி அழிவுகளைக் கைவிடுக என்ற வேண்டுகொளை விதைக்கிறது அத்திணை.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்தாலும் உண்டாலம்ம இவ்வுகலம் இந்திரர் அமிர்தமே தந்தாலும் தனித்து உண்ணாதீர், பலரோடு பகிர்ந்து உண்ணுவீர் என்றல்லவா பேசுகிறார். இதுதான் இலக்கியம் பேசும் மானுடம். இதுதான் இலக்கியம் சொல்லும் மீண்டெழுதலின் சூட்சமம்.
அழிவிற்குப் பின்னும் பகிர்ந்துண்ணலைப் பேசும் அறம் இலக்கியம் தரும் கொடை. பேரழிவுகளை உள்ளது உள்ளபடிப் பேச மாபெரும் மனோதிடம் வேண்டும். அத்தகைய மனோதிடத்தை இலக்கியமே தருகிறது.
இலங்கையில் நிகழ்த்தப்பட் இனஅழிப்புப் போரை அறிக்கைகள், காணொலிகள் வெளியே கொண்டு வந்ததை விட புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தம் சிறுகதைகள், புதினங்கள், எழுத்துகள் மூலம் கொண்டு வந்தது ரத்தமும் சதையுமான ஆவணமாக பேரழிவை உள்ளது உள்ளபடியே கண்நிறுத்தியது.
எதையும் உள்ளது உள்ளபடி பேசும் உரைகல் இலக்கியத்திடமே இருக்கிறது. எதையும் சரியாக நிறுத்துப் பார்க்கும் தராசும் இலக்கியத்திடமே இருக்கிறது.
அரசியல் பொய் பேசினால் அதற்கு எதிரான சாட்டையை இலக்கியமே சுழற்றுகிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற எச்சரிக்கை மணியை ஒலிக்க இலக்கியம் தயங்கியதே இல்லை.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்பார் பாரதியார். இலக்கியம் தந்த வரிகள் மானுட சமூகத்தில் என்று எதிரொலித்துக் கொண்டிருப்பதால்தான் கண்ணில் வழியும் நீரைத் துடைக்கவும், ஆதரவின்றி கழியும் வாழ்வைத் தூக்கி நிறுத்தவும் கரங்கள் நீள்கின்றன. கரங்கள் அங்கே நீண்டாலும் அந்தக் கரங்களை நீள வைத்தது இலக்கியம் அன்றோ!
அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தம்நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.
பிறர் துன்பத்தை தம் துன்பமாக எண்ணிப் பார்ப்பதையே அறிவு என்கிறார் வள்ளுவர்.
அறிவை இப்படி மனிதநேயப் பார்வையில் திருப்பும் மகத்தானப் பணியைக் காலம் காலமாக இலக்கியம்தான் செய்து கொண்டிருக்கிறது. சந்திர மண்டலத்தையே நாம் அடைந்தாலும், செவ்வாய் கிரகத்தையே நாம் கைக்குள் கொண்டு வந்தாலும்... தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று மனிதருக்காக நின்று வக்காலத்து வாங்க இலக்கியம்தான் தேவைப்படுகிறது.
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான் என்று வள்ளுவரை உலகைப் படைத்ததாகக் கருதப்பட்டு கற்பிக்கப்படும் தெய்வத்துக்கு எதிராக பேச வைப்பதும் இலக்கியம்தான்.
இலக்கியத்துக்கு மதம் இல்லை. அது யார் புண்பட்டாலும் ஆறுதல் சொல்கிறது. இலக்கியத்திற்கு ஜாதி இல்லை. அது யார் காயப்பட்டாலும் மருந்திடுகிறது. இலக்கியத்துக்கு இனம், நாடு, மொழி என்று எந்த பேதமும் இல்லை. எந்த உயிர் பாதிக்கப்பட்டாலு கண்ணீர் சிந்துகிறது. அந்தக் கண்ணீரைத் துடைக்க கரம் நீட்டச் சொல்லி கட்டளை இடுகிறது.
காற்று, மழை, கடற்கோள், பூகம்பம், ஊழி என்று ஏதோ ஒரு வடிவில் இயற்கை அழித்தாலும், இலக்கியம் மீட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
இயற்கைக்கு ஆக்கவும் தெரியும், அழிக்கவும் தெரியும். இலக்கியத்துக்கு ஆக்க மட்டுமே தெரியும். அதனால்தான் இலக்கியம் காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது. அதன் வடிவங்கள் எழுத்து, பேச்சு, காட்சி, இசை, பாடல், ஆடல், திரை என்று மாறுபட்டாலும் நம்மை மீட்டுக் கொண்டு வர, நாம் மீண்டு வர இலக்கியம் தேவைப்படுகிறது.
இலக்கியம் நம் கைகளில் இருக்கும் வரையில் எந்த அழிவிலிருந்தும் நாம் மீண்டு வருவோம். அப்படி மீண்டு வருவதைத்தான் புதியதோர் உலகம் செய்வோம் என்று சொல்கிறாரோ பாரதிதாசன்!
            (24.12.2018 அன்று நடைபெற்ற அகத்தியர் இலக்கிய மன்ற இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரையாற்றியதன் வடிவம்)
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...