பேசுவது ஒரு கலை. பேச்சு வருகிறது என்பதற்காக
எல்லாராலும் ஒரு சூழலுக்குத் தகுந்த முறையில் பேசி விட இயலாது. பேச்சாளர்கள் உலக சரித்திரத்தையே
மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்துதான் பேச்சின் வலிமையைப் புரிந்து கொள்ள
முடியும்.
பொதுவாக எல்லாரும் அவரவர்களுக்குத் தெரிந்த
முறையில் பேசுகிறார்கள். அதில் சில கூடுதல் குறைகள் இருக்கும், பேசப் பேச இது சரியாகும்
என்று நம்புகிறார்கள்.
பேசுவதில் பிரச்சனை என்பது எதிர்மறை உணர்வுகளுக்கு
ஆளாவதுதான். சமயங்களில் அது நேர்கிறது. எதற்கும் எந்த தீர்வும் இல்லை என்பது போல பேசி
ஆரம்பித்து விடுவோம். பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது இல்லாமல் இல்லை. அந்தத் தீர்வை
நாம் விரும்பாததுதான் பிரச்சனையை உருவாக்குகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் பேசும்
போது நமது பேச்சு எதிர்மறை அலையை உருவாக்கும்.
நாம் விரும்பும் வகையில் தீர்வு உருவாக
வேண்டும் என்று நினைப்பது பல விசயங்களில் சாத்தியமில்லை. விரும்பும் வகையிலான தீர்வுக்காக
பல நேரங்களில் சாத்தியமான ஒரு நல்ல தீர்வை நிராகரித்து விடுகிறோம். இதை எப்போதும்
மனதில் கொள்ளும் போது பேச்சில் ஒரு பக்குவமும் நிதானமும் கூடும். அவ்வாறு இல்லையென்றால்,
அதன் தொடர்ச்சியாக ஏற்படும் பிரச்சனைகள் சொல்லும் தரமன்று. பிரச்சனைகள் மேல் பிரச்சனைகள்
ஊற்றெடுக்க அதுவே காரணமாகி விடுவதும் உண்டு.
எப்போதும் பேசும் போது தெரிந்த விசயங்களில்
ஒன்று குறைவாகப் பேசுவது நல்லது என்பதுதான்.
தன்னை ஒரு தனிப்பட்ட ஆளுமையாக முன்னிருத்தும்
ஒரு பேச்சு எப்போதும் ஆபத்தானது. பொதுவாகப் பேசுங்கள், அக்கறை காட்டிப் பேசுங்கள்.
உங்களைத் தனிப்பட்ட ஆளுமையாக ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பதை கேட்பவர்கள் தீர்மானிப்பார்கள்.
அப்படி நிலைநிறுத்த விரும்பினால் பேச்சு என்பது சுருக்கமாக அமைய வேண்டும்.
வெறும் அன்பான பேச்சினால் மட்டும் எதையும்
சாதித்து விட முடியாது. மனிதர்கள் அப்படி இல்லை. அவர்களின் சுயநலத்தின் முன் நாம் காட்டும்
அன்பான பேச்சு சுத்தமாக எடுபட முடியாத நிலையில் இருக்கிறது.
இது முதலில் ஏற்படும் சில அனுபவங்களே.
ஆனால் பேசப் பேச இதில் முன்னேற்றம் ஏற்படும். எப்படிப் பேச வேண்டும் என்பதற்கான நுணுக்கங்கள்
உண்டாகும்.
பொதுவாக நீங்கள் பேசுவதற்குக் காத்திருக்கத்
தயார் என்றால் நல்ல விளைவுகள் ஏற்படும். அதை விடுத்து அவசர அவசரமாக ஒரு தீர்வை நோக்கிச்
செல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் பேச்சே வேண்டாத விளைவுகள் உருவாகக் காரணமாகி
விடும்.
பேச்சில் உங்களுடைய அளவு எதுவோ அதைத்
தாண்டி பயணிப்பது நல்லதன்று. அது உங்களை வாய்ச்சொல் வீரராக்கி உங்களை எடுபடாமல் செய்து
விடும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமே விசமாகும் போது, எல்லை தாண்டுவது என்பது ஆபத்தானது.
அது இல்லாமல் இருப்பது என்பது நல்லது.
விசயங்களை எளிமையாக அணுகுவதே நல்லது. பேச்சும்,
செயலும் எளிமையாக இருப்பது இன்னும் நல்லது. பேச்சில் எளிமை எப்போதும் நல்லது. எளிமையாகப்
பேச முடியாத ஒன்றில் எப்போதும் இறங்காமல் இருப்பதே பேச்சுக்கலையில் கடைபிடிக்க வேண்டிய
முக்கியமான ஒன்று. அது போன்ற சந்தர்ப்பங்களில் மெளனத்தைப் போன்ற மிகச் சிறந்த பேச்சு
எதுவுமில்லை.
*****
No comments:
Post a Comment