எந்த எதிர்பார்ப்பும்
இல்லையென்றால் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒவ்வொரு எதிர்பார்ப்பும் மிகப்
பெரிய பிரச்சனையைக் கொண்டு வருகிறது. எதிர்பார்ப்பினால் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமே
என்ற எண்ணம் வருகிறது. அப்படி நடக்குமா என்ற சந்தேகம் வருகிறது. அப்படி நடக்கவில்லையென்றால்
ஏமாற்றம் உண்டாகிறது. எதிர்பார்த்தபடி நடக்குமா என்ற கவலை உண்டாகிறது. ஏமாற்றங்கள்,
கவலைகள் மனதின் உக்கிரத்தைத் தூண்டி விடுகின்றன. சற்று கூடுதலாகச் செயல்பட்டால் எதிர்பார்த்ததை
அடைந்து விடலாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அப்படியும் நடக்காமல் போனால் அதிதீவிரமாக
முயன்றாவது அடைய வேண்டும் என்ற மனநெருக்கடியை உண்டு பண்ணுகின்றன. அப்படியும் அடைய முடியாமல்
போகும் போது மனச்சோர்வை உண்டு பண்ணி விடுகிறது. மனச்சோர்வினால் மன இறுக்கம், மனஉளைச்சல்
போன்றவை ஏற்படுகின்றன. இவைகளால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இப்படித்தான் தேவையில்லாமல்
உடநலத்தைப் பாதிப்பு ஏற்படுகிறது.
எதிர்பார்ப்புகளே
இல்லையென்றால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். அனுபவபட்டவர்களுக்குத்தான் அது புரியும்.
எதிர்பார்ப்புகள்
இல்லாமல் வாழ துறவியாகத்தான் ஆக வேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள். ஆகவே, அளவான
எதிர்பார்ப்புகளோடு வாழ்வதே வாழ்வுக்கு நல்லது
என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.
எதிர்பார்ப்புகள்
இல்லாமல் முன்னேற்றம் இருக்காது. ஆகவே எதிர்பார்ப்புகள் அவசியம். அந்த எதிர்பார்ப்புகளைப்
புரிந்து கொள்வது முக்கியம் என்பவர்களும் இருக்கிறார்கள்.
என்னதான்
அளவாக எதிர்பார்த்தாலும், எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டாலும் எந்த எதிர்பார்ப்பும்
ஒரு எதிர்பார்ப்போடு நிற்காது. வட்டிக்கு வாங்கியப் பணம் வட்டிக்கு மேல் வட்டியாகக்
குட்டிப் போடுவதைப் போல எதிர்பார்ப்புகளும் குட்டி மேல் குட்டி போட்டு பெருகிக்
கொண்டேதான் இருக்கும். வாழ்க்கையின் ஒரு கட்டத்துக்கு மேல் எதிர்பார்ப்புகள் இல்லாமல்
பழகிக் கொள்வதே உடலுக்கும், மனதுக்கும் ஏற்றதாக இருக்கும்.
*****
No comments:
Post a Comment