உலகை எளிமையாகப்
புரிந்து கொள்வதற்கான ஒரு வாசகம்,
"உலகில்
யாரும் யாரையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் எல்லாரும் மற்றவர்கள் தங்களை மட்டும்
புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்"
இவர் ஏன்
இப்படி நடந்து கொள்கிறார்? என குழம்பிப் போக வேண்டாம். அவரை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை
என்பதையே அவர் அப்படிக் காட்டுகிறார்.
கணவர் - மனைவி
விசயத்தில் இது இன்னும் அதிகமாகவே நடக்கும். மனைவியின் எதிர்பார்ப்பு கணவர் தன்னை மிக
அதிகமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாக இருக்கும். அதில் கணவரின் நடத்தை இதற்கு
மேல் மனைவியிடம் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்பதாக இருக்கும்.
திடீரென்று
ஒருவர் கோமாளி போல், குழப்பவாதி போல் நடந்து கொண்டால் அது குறித்து யோசித்து மண்டையைப்
பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை. அவரை நெருங்கி அவர் செய்வதெல்லாம் சரி என்பது போல
பேசி, இப்படிப்பட்ட சூழ்நிலையை நீங்களாக இருந்ததனால் எதிர்கொண்டீர்கள் என்று பேசிப்
பாருங்கள் அவர் தானாக தெளிவடைந்து விடுவார்.
சம்பந்தம்
இல்லாமல் ஒருவர் எதிர்க்கிறார் என்றால் அதிலும் இந்த விசயம்தான் அடங்கியிருக்கிறது.
நீங்கள் அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் அவர் அப்படிக் காட்டுகிறார்.
அவரை தனிமையில் சந்தித்து அவரை நீங்கள் புரிந்து கொண்டுள்ளதாக ஒரு வார்த்தையை ஒப்புக்குக்
கூறினால் கூட போதும், அவர் சரணாகதி அடைந்து விடுவார்.
இதைப் படித்த
பின் உலகைப் புரிந்து கொள்வதில் உங்களுக்குச் சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன்.
இருப்பின் எழுதுங்கள். இருக்காது என்றே நம்புகிறேன்.
*****
No comments:
Post a Comment