வற்புறுத்தாமை அழகு. வற்புறுத்த
வற்புறுத்த வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறோம். வற்புறுத்தலை யாரும் விரும்புவதில்லை.
நம் வற்புறுத்தலுக்குக் கட்டுபடாதவர் யாருக்கும் நாம் உதவ வேண்டும் என்பதும் அவசியமில்லை.
நாம் அவசியம் கருதித்தான் வற்புறுத்துகிறோம் என்பதை உணர முடியாதவரால் நம்மையும் உணர
முடியாது. அப்படிப்பட்டவர்களை நாமும் உணர்ந்து கொள்ள முடியாது. அவர்கள் தற்குறிகள்.
அவர்கள் போக்கிற்குச் செல்பவர்கள். அவர்கள் அவர்களாக இருக்கும் விரும்புபவர்களை வேண்டிக்
கொண்டு கூட எதையும் செய்ய வைக்க முடியாது.
அவசியம் கருதிக் கூட அநாவசியமானவைகளைப்
பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் நினைக்கிறோம் அப்படிப் பகிர்ந்து கொள்வதன்
மூலம் மனதுக்கு ஒரு அமைதி கிடைப்பதாக. அமைதியின்மை கூட அந்தப் புள்ளியிலிருந்துதான்
ஆரம்பிக்கும். அவசியம் கருதி வேறுவழியில்லாமல் பேச வேண்டிய நிலைமையில் பேசுவதைத் தவிர
அவசியமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டியவைகளைக் கூட ஒன்றுக்குப் பலமுறை யோசித்துப் பகிர்வதே
நல்லது. பெரும்பாலும் முன் அனுபவங்களில் நாம் ஒருவரிடம் பெற்ற அனுபவத்திலிருந்து அநேகமாக
அவர் மாறியிருக்க மாட்டார் எனும் போது ஒரே மாதிரியாக அவரை அணுகி ஒரே மாதிரியானத் தவறை
மீண்டும் மீண்டும் செய்யத் தேவையில்லை.
வெகு சுருக்கமாகப் பேசுங்கள்.
மற்றவர்களின் பார்வைக்கு நீங்கள் மிகவும் அழகாகத் தெரிவீர்கள். அதை விடுத்து பகிர்வதால்
மனஅமைதி கிடைக்கிறது என நினைத்து கண்டபடி உங்களைப் பற்றி நீங்களே பகிர்ந்து உங்களை
நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
*****
No comments:
Post a Comment