ஒருவரை நம்பி
கொடுக்கல் வாங்கல் என்ற முயற்சியில் இறங்கிவது எவ்வளவு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி
விடுகிறது. ஒவ்வொருவரைச் சுற்றிக் குழப்பங்கள் சூழ்ந்துள்ளன. அந்தக் குழப்பங்களின்
காரணமாக அவர்களின் கொடுக்கல் வாங்கல் செயல்களும்
குழப்பமாகவே அமைகின்றன. அது மட்டும் அல்லாமல் ஒவ்வொருவரது மனமே குழப்பம் சூழ்ந்ததாகவே
இருக்கிறது. அதனால் அவர்கள் எதைச் செய்தாலும் அதில் தெளிவற்ற ஒரு குழப்பமே நிகழ்கிறது.
இதை நாம்
ஆரம்பம் முதலே அறிந்திருந்தும் நம் ஆசை காரணமாகவே சென்று சிக்குகிறோம்.
இனிமேல் எவரையும்
நம்பி எந்தச் செயல்களிலும் இறங்கி விடக் கூடாது. ஒருவரது முடிவைக் கேட்டு எதையும் செயல்படுத்தி
விடக் கூடாது. அது தீராத துன்பத்துக்குள் சிக்குவதற்குச் சமம். ஏற்கனவே இதில் பலருக்கு
பல அனுபவங்கள் இருக்கும். இருந்தும் அவ்வளவு மோசமான அனுபவத்தைச் சந்தித்தப் பிறகுதான்
ஒரு முடிவுக்கு ஒருவரால் உறுதியாக வர முடிகிறது.
ஒருவரை நம்பி
இறங்கிய செயல்களால் நமக்கு ஏற்பட்ட பண இழப்புகள் மிக அதிகமாக இருக்கலாம். ஒருவரின்
உழைப்பை கண்ட கண்ட நாய்கள் சாப்பிடுவதுதான் உலக வழக்கமாக இருக்கலாம்.
ஒன்றை வாங்க
வேண்டும் என்ற அவசியமே இல்லாத போது எதையும் வாங்க வேண்டியதில்லை. தேவையில்லாதவைகளை
வாங்கி தேவையில்லாத தலைவலிகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. இப்படித்தான் கொடுக்கல்
வாங்கலில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன.
விழிப்புணர்வு
நிறைய இருந்தால் நல்ல தொடர்புகளை எங்கு வேண்டுமானாலும் உருவாக்கலாம். சரியான கொடுக்கல்
வாங்கல்களை நிர்வகிக்கலாம். ஆக கற்றுக் கொள்ள வேண்டியது விழிப்புணர்வோடு இருக்கும்
வழிகளைத்தான். அதை விட்டு விட்டு வாங்க முடியாத, விலக்க முடியாத கொடுக்கல் வாங்கல்களில்
தேவையில்லாமல் ஈடுபடுத்திக் கொண்டு மோதிக் கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டிருக்கக்
கூடாது.
மனிதரை நிலையில்லாமல்
செய்வது ஆசைகள்தான். அதனால்தான் மனம் சபலம் அடைகிறது. ஊஞ்சல் ஆடுகிறது. ஆசையில்லாதவரை
எவரும் அசைக்க முடியாது. அதற்காக ஆசையில்லாமல் இருக்க முடியுமா எனலாம். ஆனால் அப்படி
ஒரு நிலை இருக்கிறது என்பதைக் கொஞ்சம் அனுபவப்பட்ட பிறகாவது பரிட்சித்துப் பார்க்கலாம்.
தன்னை யார்
என நிலைநிறுத்த வேண்டும் என்ற சிந்தனையில் இறங்கியும் கொடுக்கல் வாங்கலைச் செய்து
கொடுப்பதன் மூலம் அதை நிலைநிறுத்தலாம் என நினைக்கலாம். தன்னை யார் என்று ஒருவர் யாரிடம்
நிலைநிறுத்த வேண்டும்? அப்படி ஓர் அவசியம் எதற்கு வந்தது?
இயன்றதைச்
செய்து கொண்டு, இருப்பதில் நிறைவு கொண்டு இருப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது. அநாவசியமாக
தான் யார் என்று காட்டி தனக்குத் தானே எதற்கு இம்சைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?
தான் யார்
என்று காட்ட வேண்டும் என்ற செருக்கின் காரணமாகத்தான் ஒருவர் அவ்வாறு செயல்படுகிறார்
என்றால் அவரது கொடுக்கல் வாங்கல் விசயங்கள் ஆபத்தில்தான் முடியும். அப்படிச் செயல்படும்
போது அதில் ஏற்படும் இயலாமைகளை ஒருவர் ஏற்றுக் கொள்ள முடியாமல் சினம் அடையலாம். அந்தச்
சினத்தின் காரணமாக சிறுமையான செயல்களை முற்படலாம். விளைவு பெருமிதம் இல்லாத கேவலமான
ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்படலாம்.
இந்த கொடுக்கல்
வாங்கல் பிரச்சனையிலிருந்து தப்பிக்க ஒரே பேச்சை எப்போதும் பேச முடியாது. இந்தச் சமூகத்திடமிருந்து
தப்பித்துக் கொள்வதற்கும், தன்னைத் தானே தற்காத்துக் கொள்வதற்கும் ஒரு பேச்சு பேச
வேண்டியதாக இருக்கிறது. நியாயமாகவும், நேர்மையாகவும் இருப்பதற்கும் ஏற்ற வகையில் மனதளவில்
வேறு பேச்சு பேச வேண்டியதாக இருக்கிறது.
ஏமாற்றுவதற்கு
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதுதான் தவறு. தேவையில்லாத கொடுக்கல் வாங்கலிலிருந்து
தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு அவ்வாறு பேசுவது தவறில்லை. உள்ளதை உள்ளபடி பேசினால்
ஆபத்தைச் சந்திக்கும் வகையிலான சமூகச் சூழ்நிலைகள்தான் கொடுக்கல் வாங்கலில் நம்மைச்
சுற்றி இருக்கின்றன.
தெளிவான புரிதல்தான்
ஒருவருடைய சொத்து. அதை அநேக இடங்கில் நேரும் கொடுக்கல் வாங்கலில் ஒருவர் பயன்படுத்துவது
அவசியமாகும்.
*****
No comments:
Post a Comment