பெண் பார்க்கும் படலம்
தமிழ் சினிமா
பார்த்து அதை உண்மை என்று நம்பி வாழ்ந்த ஜீவராசிகளில் நானும் ஒருவன்.
அப்படித்தான்
பெண் பார்க்கப் போனால் பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா? எனக் கேட்டு பெண்ணைப்
பாட வைத்து பார்க்கலாம், ஆட வைத்துப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். இது ஓர்
ஆணாதிக்க மனோபாவம் என்று என்னைத் திட்டித் தீர்த்தாலும் நான் அப்படித்தான் நம்பியிருந்தேன்
என்பதைச் சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
ஆனால் நடந்ததெல்லாம்
வேறான அனுபவம். பெண்ணை அழைத்து வந்து அமர வைத்தார்கள். மூதாட்டியான ஒரு பெண்மணியைக்
கொண்டு காபி கொடுக்கச் செய்தார்கள்.
பெண்ணை
அழைத்து வந்து உட்கார வைத்த நேரம் பார்த்து, பெண்ணைப் பெற்ற பெருந்தகை அதாவது மாமனார்
ஓர் ஆல்பத்தைக் கொண்டு வந்து கொடுத்து பார்க்கச் சொன்னார். நான் ஒரு அசடு. அந்த
நேரத்தில் பெண்ணை அழைத்து வந்து அமர வைத்திருந்திருக்கிறார்கள். நான் ஆல்பத்தைப் பார்த்துக்
கோண்டு அமர்ந்ததில் பெண்ணைச் சரியாகப் பார்க்கத் தவறி விட்டேன்.
பெண்ணை
ஒரு ஐந்து நிமிடம், பத்து நிமிடம் உட்கார வைத்திருந்தால் ஒருவாறாக ஆல்பத்தைப் பார்த்து
முடித்த வேகத்தில் பார்த்து இருப்பேன்.
ஒரு இரண்டு
நிமிடமோ, மூன்று நிமிடமோ உட்கார வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதற்குள்
பெண்ணை எழுந்து உள்ளே போகச் சொல்லி விட்டார்கள்.
அப்புறம்
கையில் வைத்திருந்த அந்த போட்டோ ஆல்பத்தில் பெண்ணை ஒருவாறாக பார்த்துக் கொண்டேன்.
அப்புறம், கூட வந்த நண்பர்களிடம் ஒருவாறாகப் பெண்ணைப் பற்றி மாநிறமா, கருப்பா, சிவப்பா
என்று விசாரித்துக் கொண்டேன். அதில் ஒருத்தன் மாநிறம் என்றான். ஒருத்தன் சிவப்பு நின்றான்.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்ற மொமொண்ட் அது.
அப்புறம்
கல்யாணம் ஆகியது.
அப்புறம்
நடந்ததையெல்லாம் அவளிடம் சொன்ன போது, பொண்ணைப் பார்க்கிறதுன்னா இப்படியா கொட்டக்
கொட்டப் பார்ப்பாங்க? என்று கோபித்தாள்.
நான் ஆல்பத்தைத்தான்
பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை அவள் கடைசி வரை நம்பவில்லை.
*****
No comments:
Post a Comment