8 Dec 2018

ஒரு கிளாஸ் டீ வாங்கிக் கொடுங்கள்!


ஒரு கிளாஸ் டீ வாங்கிக் கொடுங்கள்!
சம காலத்தை உலுக்கும்
மிக மோசமான கவிதைகளை
எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னால்
என்னை மன்னித்து விடுங்கள்
நான் பிதற்றிக் கொண்டு இருக்கிறேன்
பிதற்றல் உண்மையாகும்
சமூகத்தில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்னால் மலையை மலையாக
பூவைப் பூவாக
நதியை நதியாகப் பார்க்க முடியாத
துரதிர்ஷ்டத்தில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன்
மொட்டையடிக்கப்பட்ட மலையில்
தவமியற்றிக் கொண்டு
வெடிக்கும் பூக்களை கைகளில் ஏந்திக் கொண்டு
சாக்கடை நதியை மூக்கைப் பொத்திக் கொண்டு
பித்தேறியவனாய் பெருங்குரல் எழுப்புவதில்
என்ன புரட்சி இருக்கிறது
மலையை வளர விடுங்கள்
சாகும் முன் ஓர் அகதியாகவாவது
பூவை நாடு கடத்துங்கள்
நதியைத் தூய்மை செய்து
புனித நீராடி களங்கம் செய்யாதீர்கள்
பைத்தியமென உளறுவதற்காகவாவது
சுதந்திரம் கொடுங்கள்
அதற்காகவெல்லாம் துப்பாக்கித் தூக்காதீர்கள்
தலையை வெட்டிக் கொண்டு வாருங்கள் என
விலை நிர்ணயிக்காதீர்கள்
விலைவாசியின் கோர உச்சத்தில்
ஒரு ரூபாயின் குறைவுக்காக
கைளைப் பிசைந்து குடலைக் கசக்கிக் கொண்டு
ஓரமாக நிற்பவனுக்கு தேநீர் வாங்கிக் கொடுங்கள்
அந்தத் தேநீர்க் கடைக்காரர்க்கு எல்லாம் தெரியும் என்பது
எல்லார்க்கும் தெரியும்
பாவம் பசி தின்றவனுக்கு எதையும் உணரும் சக்தியில்லை
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...