22 Dec 2018

நட்பாராய்தல்



நட்பாகப் பழகும் அநேக இடங்களில் அதிக அக்கறையை எதிர்பார்க்கிறார்கள். மிக அதிகமாக வருத்தப்படுகிறார்கள். இந்த அதிக அக்கறைக்கும், வருத்தத்துக்கும் காரணம் இருக்கிறது.
நட்பு கொண்ட பிறகு அவர்கள் சம்பந்தப்பட்டவைகளில் நேர்மையாக இருக்கக் கூடாது என்கிறார்கள். அவர்கள் எது செய்தாலும் நேர்மையைப் புறந்தள்ளி விட்டு அதை வழிமொழிய வேண்டும் என்கிறார்கள். இதனால் நான் இழந்த நட்புகள் அநேகம். இப்படித்தான் நண்பர்கள் எண்ணிக்கை எனக்குக் குறைவாகப் போனார்கள்.
பெரும் எண்ணிக்கையில் நண்பர்களைக் கொண்ட நபர்களைச் சந்திக்கும் போது சில நேரங்களில் இதனால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது. அது போன்ற நேரங்களில், "என்னுடைய வீடு சிறியதாக இருந்தாலும், இந்தச் சிறிய வீடு கொள்ளும் அளவுக்கு எனக்கு நண்பர்கள் இருந்தால் போதும்" என்ற சாக்ரடீசை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வதைத்  தவிர வேறு என்ன வழி இருக்கிறது?
இன்றைய நட்பு என்பது வேறு பல வடிவங்களையும் எடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்படி சில நட்புகளை நீங்கள் சந்தித்து இருக்கக் கூடும், நட்பு கொண்ட நான்காம் நாளே ஒரு இன்ஷ்யூரன்ஸ் எடுக்கச் சொல்பவர்கள், ப்ளாட் வாங்குவதற்கான மாதத் தவணைத் திட்டத்தில் சேரச் சொல்பவர்கள், லோன் போட்டு தரச் சொல்பவர்கள், தான் சார்ந்துள்ள வணிகத்திட்டத்திலிருந்து பொருட்கள் வாங்கச் சொல்பவர்கள் என்று.
இப்படி தங்களுக்குக் கிடைக்கும் சிறு தரகுத் தொகைக்காக பெரும் செலவினத்தை நம் தலையில் கட்டுவதற்காக நண்பர்கள் ஆக விரும்புபவர்களே நாட்டில் பெருத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிச் செய்ய முடியாமல் நண்பர்களை இழந்தவர்கள் நாட்டில் கோடான கோடி இருப்பார்கள் என்பது என் கணிப்பு.
இந்தக் கணிப்புச் சரியானதா என்பதை யாரேனும் சர்வே எடுத்து உறுதிபடுத்தினால் நன்றாக இருக்கும்.
அதற்கு முன் நீங்கள் உங்கள் கணிப்புகளைச் சொன்னால் ஒருவாறாக ஒரு முடிவுக்கு நாம் வந்து விடலாம்.
நட்பு குறித்து நிறைய ஆராயத்தான் வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் வள்ளுவர் நட்பாராய்தல் என்ற அதிகாரத்தைப் படைத்து இருப்பாரா?
*****

2 comments:

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...