இயக்கங்கள், களங்களின் பின்னடைவுகள்
சமூக இயக்கங்கள்,
அரசியல் களங்கள் சமத்துவத்தை நிலைநாட்டுவதில் பெரும்
பங்கு ஆற்றியிருக்கின்றன. சமீப காலமாக அவற்றின் செயல்பாடுகள்
ஒரு வெற்றிடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவோ என்ற ஐயப்பாடு எழுகிறது.
ஆணவக் கொலைகளுக்கு
எதிரான நிலைபாடுகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சார்ந்த நிலைபாடுகளில் பொது
சமூகத்தில் சமூக இயக்கங்களும், அரசியல் களங்களும் உருவாக்கி இருக்க வேண்டிய தாக்கங்கள்
குறைந்து வருகின்றது.
சரியான
நிலைபாடுகளைப் பெற நீதிமன்றத்தின் உதவியை அதிகம் நாட வேண்டியிருக்கிறது.
சமத்துவம்
தொடர்பான பொது சமூகத்தில் பரவலாக எழுந்திருக்க வேண்டிய கருத்தாக்கம் குன்றிக் கொண்டே
வருகிறது. பொது சமூகத்தின் மிகச் சிலரால் மட்டும் அக்கருத்தாக்கம் உணரப்படுகிறது.
பெரும்பான்மையை உருவாக்க முடியாத நிலையில் அவர்கள் நீதிமன்றத்தை நாடிப் பரிகாரங்களைப்
பெற்றுத் தருகின்றனர்.
சமத்துவம்
தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பிட்டப் பிறகும் அத்தீர்ப்பிற்கு எதிரான முணுமுணுப்புகள்
அண்மைக் காலமாக எழுவதைக் காண முடிகிறது.
பஞ்சாப்பில்
ஒரு சாமியார் பெண்களுக்கு எதிராக நிகழ்த்திய பாலியல் சீண்டல்களுக்கு எதிராக நீதிமன்றம்
தீர்ப்பிட்டப் பிறகு அத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு பொது சமூகமே தடையாக நிற்பது போன்ற
தோற்றம் உருவாக்கப்படுகுறது. இதே போல சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பிட்டப்
பிறகும் அதற்கும் பொது சமூகம் தடையாக நிற்பது போல தோற்றம் உருவாக்கப்படுகிறது.
இந்த வகையில்
பார்க்கையில் சமூக இயக்கங்களும், அரசியல் களங்களும் சமத்துவம் எனும் பாதையில் சென்றிருக்க
வேண்டிய தூரத்திலிருந்து ஒரு பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது என்பதே உண்மை. இதே பின்னடைவு
நிலை தொடருமானால் அது நாளை பொது சமூகத்தின் பின்னடைவாக அமையும். நாகரிகச் சமூகம்
தான் உருவாக்க வேண்டிய உயரிய பண்பாட்டிலிருந்து பின்னடைவு அடைவதற்கு இந்நிலையே ஒரு
காரணமாகவும் அமைந்து விடும்.
*****
No comments:
Post a Comment