வானுக்கும் வாசிப்புக்கும் எல்லை இல்லை!
வானுக்கு எல்லை இல்லை!
வாசிப்புக்கும் எல்லை இல்லை!
கல்வி கரையில
கற்பவர் நாள் சில
அதில் நாம் கற்கும் புத்தகங்கள் ஒரு சில
அந்த ஒரு சில பல என ஆக வேண்டும்.
அதற்காகத்தான் புத்தகக் கண்காட்சிகள்.
கற்றல் என்பது பாடப்புத்தகங்களோடு முடிந்து
விடுவதா?
கற்றல் என்பது பாடப்புத்தகங்களைத் தாண்டி
படர விடுவது அல்லவா!
வாழ்நாள் முழுவதும் சுவாசித்துக் கொண்டிருப்பது
போல, வாழ்நாள் முழுவதும் வாசித்துக் கொண்டிருக்க வேண்டும்.
யாதானும் நாடாமால் ஊராமல் என் ஒருவன் சாந்துணையும்
கல்லாதவாறு? என்று வள்ளுவர் கேட்பதில் பொருள் இருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கைக்கானப்
பொருள் வாசிப்பில்தான் இருக்கிறது.
வாசிப்பவர் வாழ்வே பொருள் உள்ளதாகிறது,
வாசிக்காதவர் வாழ்வு பொருள் அற்றதாகி விடுகிறது என்று சொன்னால் அதில் பிழையேது?
எல்லாவற்றையும் சுயநலத்துக்காகச் செய்து
பழகிய ஒரு சில மனிதர்கள் யாருக்காக வாசிக்க வேண்டும்? என வினவலாம்.
வாசிப்பில் கிடைக்கும் மகிழ்வு அலாதி.
அதை வாசிப்பின் சுயநலம் என்றும் சொல்லலாம்.
வள்ளுவர் அதை சுயநலம் அன்று என்று சொல்வதோடு
அதில் பொதிந்திருக்கும் பொதுநலத்தைத் தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர்
கற்றறிந்தார் என்கிறார். அதாவது யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல வாசிப்பினால்
உருவாகும் உலக நாட்டத்தைத் தாம் இன்புறுவது உலகு இன்புற என்று அறுதியிட்டுச் சொல்கிறார்.
அன்றாடம் வாசிப்பதன் பலன் வாசிப்பவர்களுக்குத்
தெரியும். ஒவ்வொரு நாளும் மனம் விரியும் அழகு அவர்களுக்கே புரியும். ஓதாமல் ஒரு நாளும்
இருக்க வேண்டும் என்ற வாக்கே அப்படிப் பிறந்ததுதான்.
புத்தகங்களை வாசிக்காமல் ஒரு நாளும் இருக்க
வேண்டாம். அப்படி வாசிக்காமல் இருந்தால் அந்த ஒரு நாள் வாழ்நாளின் பயனற்ற ஒரு நாளே
ஆகும்.
தினம் தினம் உடற்பயிற்சி செய்பவர்கள் அறிவார்கள்,
ஒரு நாள் செய்யாமல் இருந்தால் உடலில் உருவாகும் ஒரு வித சோம்பலை. அது போல்தான் தினம்
தினம் வாசிப்பவர்களுக்குதான் தெரியும் ஒரு நாள் வாசிக்காமல் இருப்பதன் வலி. நிச்சயம்
அது வலிதான். வாசிப்பதால் தீரும் வலி அது.
உடற்பயிற்சி செய்யாத ஒரு உடலில் சர்க்கரை
நோய், கொழுப்பு நோய், இரத்த அழுத்த நோய் என்று பலவித நோய்கள் புகுவதைப் போல்தான்,
வாசிக்காத ஒரு மனதில் அறியாமை, பேதைமை, இயலாமை, மனிதாபிமானமின்மை போன்ற உணர்வுகள்
புகுகின்றன.
இதை உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு
புத்தக வாசிப்பு என்கிறார் சிக்மண்ட் பிராய்டு என்ற உளவியல் அறிஞர்.
இந்த உலகில் நியூட்டனின் கண்டுபிடிப்புகளுக்குப்
பிறகு மிகப்பெரும் மாற்றத்தை உண்டாக்கியது ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளே. அவரின்
E=mcஸ்கொயர் எனும் கண்டுபிடிப்பு மாபெரும் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. அப்படி
மாபெரும் கண்டுபிடிப்பைத் தந்த ஐன்ஸ்டீன் எனும் அறிவியல் பேரறிஞரே மனிதர்களின் மகத்தான
கண்டுபிடிப்பு புத்தகங்கள்தான் என்கிறார்.
குழந்தைகளை தனது கார்டூன் படங்களாலும்,
தனது டிஸ்னி வேர்ல்டு என்ற கேளிக்கை உலகாலும் மயங்க அடித்தவர் வால்ட் டிஸ்னி. அவரது
மிக்கி மெளசுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றும் காதலர்கள். அபாரக் கற்பனைத்
திறன் மிக்கவர் அவர். தனது கற்பனை உணர்வால் உலகைப் பிரமிக்க வைத்தவர். அப்படிப்பட்டவரே,
"எவ்வளவோ கேளிக்கைகளைக் குழந்தைகளுக்காக உருவாக்கியிருக்கிறேன். ஆனால் அவை எதுவும்
புத்தகங்களை விடச் சிறந்ததில்லை" என்கிறார்.
உலகப் பேரறிஞர்களே சொல்லும் போது,
உலகக் கண்டுபிடிப்பாளர்களே சொல்லும் போது,
உலகை மாற்றிய சிந்தனைகளைத் தந்தவர்களே
சொல்லும் போது,
புத்தகங்களை விட சிறந்த கண்டுபிடிப்பு
இந்த உலகில் வேறு இருக்க முடியுமா? புத்தக வாசிப்பைச் சிறந்த விட சிறந்த தவம் இந்த
உலகில் வேறு இருக்க முடியுமா?
பாரதியார் அன்பில் சிறந்த தவமில்லை என்பார்.
அந்த அன்பை மனதுக்குள் விதைப்பதும், உருவாக்குவதும் கூட வாசிப்பில் சாத்தியம் எனும்
போது வாசிப்பை விட சிறந்த தவம் வேறு இருக்க வாய்ப்பில்லை அல்லவா!
இத்தகைய வாசிப்பை குழந்தைப் பருவத்திலிருந்து
துவங்க வேண்டும், அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் செங்காந்தள்
அறிவுத் திருவிழாக்கள் பள்ளிகள் தோறும் நடத்தப்படுகிறது.
வாசிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்
தராமல் வாசிக்காத ஒரு தலைமுறையை உருவாக்கி விட்டு அத்தலைமுறையைக் குறை சொல்வதில் அர்த்தம்
இருக்க முடியாது.
வாசிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கு,
குழந்தைப் பருவத்திலேயே அதற்கான வித்துகளை விதைப்பதற்கு ஓர் எளிய முயற்சி செங்காந்தள்
அறிவுத் திருவிழா ஆகும்.
பல் துலக்குவதிலிருந்து, கை அலம்புவது
வரை சொல்லிக் கொடுப்பதற்கும் பழக்கப்படுத்துவதற்கும் அதில் பல கூறுகள் இருக்கின்றன
என்று அதன் நுட்பங்கள் கற்றுக் கொடுக்கும் போது, வாசிப்பை சொல்லிக் கொடுப்பதற்கும்,
பழக்கப்படுத்துவற்கும் அதிலும் பல கூறுகள் இருக்கின்றன. அக்கூறுகளை இளம்பருவத்திலிருந்தே
சொல்லிக் கொடுத்து பழக்கப்படுத்தினால் வாசிக்கும் ஒரு தலைமுறை உருவாகாமலா போய் விடும்?
ஐந்தில் வளையும் போதுதான் ஐம்பதில் எளிதாக வளையும்!
வாசிக்கும் ஒரு தலைமுறை உருவாகும் போதுதான்
நாம் எல்லாம் கனவு காணும் மானுடத்தை நேசிக்கும் ஒரு தலைமுறை உருவாகும்.
மானுடத்தை நேசிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்க,
வாசிக்கும் தலைமுறையை உருவாக்குவோம்!
(29.10.2018
(திங்கள்) அன்று மாலை 3.00 மணி அளவில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம்,
பெரியகொத்தூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பதினோறாவது செங்காந்தள்
அறிவுத் திருவிழாவில் கட்டுரையாற்றியதன் வடிவம்)
*****
No comments:
Post a Comment