26 Nov 2018

கூண்டில் சுருளும் வானம்


கூண்டில் சுருளும் வானம்
விரிந்த வானை கூண்டுக்குள் தேடும் சிறுபறவை
அளந்து பார்க்கிறது
இவ்வளவு பெரிதா வானம்
அளக்க அளக்க கூண்டுக்குள்ளே மடங்கிச்
சுருண்டு கொள்கிறது வானம்
மடக்கி வைக்கப்பட்ட வானில்
ஏதோ ஒரு மடிப்பில்
சக பறவைகள் இருக்கக் கூடும்
ஏதோ ஒரு மடிப்பில்
மரமொன்று இருக்கும்
மற்றுமொரு மடிப்பில்
கனிகள் குலுங்கிக் கொண்டிருக்கும்
பூச்சிகள் பறந்து கொண்டிருக்கும்
விரித்துப் பார்க்கும் ஏதோ ஒரு மடிப்பில்
கூண்டுக்குள் அடைபட்ட வானின்
விரிந்து கொள்ளும் கூண்டின் திறவுகோல் இருக்கும்
வெட்டப்பட்டால் வளரும் சிறகுகளுக்கு
நம்பிக்கை எனப் பெயர் சூட்டி
அடிக்கடி சிறகடித்துக் கொள்ளும் சிறுபறவை
*****

2 comments:

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் மற்றும் சமரசமற்ற ஒன்று

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் அவர்கள் பிரமாண்டவர்களாக ஆனார்கள் தனித்துவம் மிக்கவர்கள் என உலகம் கொண்டாடியது அவர்கள் முன் நான் சாத...