ஆபத்து சகாயக் குறிப்புகள்
இதை எழுதுவதன்
மூலம் வாசகர்களுக்கு என்ன நன்மை ஏற்படும் என்று எஸ்.கே.வுக்குத் தெரியவில்லை. ஆனால்,
இதை எழுதுவதன் மூலம் தனக்கு நன்மை ஏற்படும் என்று நம்பினார் எஸ்.கே. இன்று எழுத வேண்டிய
நான்கு பக்கக் கணக்குக்கு அது சரியாக வரும் என்று தோன்றியது. உடன் எழுத ஆரம்பித்தார்...
''கடந்த இரண்டு நாள்களாக மிகப் பெரும்
மன உளைச்சலைச் சந்தித்து வருகிறேன். இதற்குத் துல்லியமான காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஆனால், பின்வருபவைகள் காரணமாக இருக்கலாம். தேவையில்லாத மன ஊகத்தில் வாழ்வது. அதாவது
அப்படி நடக்காது என்பதுதெரிந்தாலும் அப்படி நடக்கும் என்று நம்புவது.
இதனால் இழப்புகள் இருக்கலாம். சில விசயங்கள்
சம்பந்தமாக ஏற்பட்ட குழறுபடிகள் அதிகமாகியிருக்கலாம். தேவையில்லாமல் அதில் இறங்கி சில
ஆண்டுகளாக உயிரோடு சித்திரவதை அனுபவிப்பதைப் போல் இருந்திருக்கலாம். இப்படியாக ஒரு
தரித்திரியம் தாண்டவமாடிய ஒரு நிகழ்வை பார்த்திருக்கலாம்.
பணம் இல்லையென்றால் எதையும் வாங்க முடியாது.
பணத்தை வைத்துக் கொண்டு எதையும் வாங்க முடியாத, முறையாகப் பதிவைச் செய்ய முடியாத அவலத்தை
இந்த சில விவகாரத்தில்தான் பார்த்தேன். ஒரு விசயத்தில் நாமாகப் போய் மாட்டிக் கொள்ளக்
கூடாது அல்லவா. அது இதில் நடந்து விட்டது.
சுற்றியுள்ளவர்களைப் பற்றிச் சொல்ல ஒன்றும்
இல்லை. எனக்குத் தெரிந்து அவர்கள் மடத்தனமான காரியத்தைதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எல்லாவற்றிலும் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறார்கள். யார் சொல்வதையும் கொஞ்சம்
கூட கேட்க மாட்டார்கள், அனுசரித்தும் போக மாட்டார்கள். எதையாவது சொன்னால் அதைச் செய்யக்
கூடாது என்றே அவர்கள் மனம் சொல்லும் போலும். பெரிய இம்சை. இது தெரியாமல் அவர்களோடு
குலாவி அவர்களுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதிலும் அவர்களுக்குப் பல
விசயங்கள் புரிய வேறு மாட்டேன்கிறது. அதைப் புரிய வைக்க முயற்சிப்பது வீண் வேலை. யாரும்
புதிதாக எதையும் புரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டார்கள். அது போன்றவர்களை இனிமேல்
எதிலும் அவர்களை ஈடுபடுத்த நினைக்கக் கூடாது. மானம் மரியாதை போய் விடும் போலிருக்கிறது.
தேவையில்லாத மன உளைச்சலையும் சுமக்க நேரிடும் வேண்டியிருக்கிறது.
மனிதர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை
இப்போதுதான் கண்டு கொண்டு வருகிறேன். அவர்களிடம் அடிக்கடி நெருங்கியிருப்பது போல
காட்டிக் கொண்டு இருக்கக் கூடாது. அவ்வபோது விலகியிருப்பது போலவும் காட்டிக் கொள்ள
வேண்டியிருக்கிறது. அப்போதுதான் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள முடிகிறது. இல்லையென்றால்
மானம் கெட்டுதான் அலைய வேண்டியிருக்கிறது.
ஒன்றின் உள்மனசு என்ன சொல்கிறதோ அதைக்
கேட்டுதான் அது நடக்கிறது என்பதால் அந்தந்த உள்மனசு என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப
நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அசிங்கப்பட வேண்டியிருக்கிறது.
அத்துடன் யாரிடமும் ஆசையை வெளிப்படுத்துவது
போல ஒரு முட்டாள்தனம் இல்லை. தனக்கு அதில் ஆசையில்லை என்பதைப் போலத்தான் காட்டிக்
கொள்ள வேண்டியிருக்கிறது. அதுதான் நல்லது. ஒருவரது ஆசை இதுவென்று தெரிந்து விட்டால்
அதற்குப் பிறகு அதில் ஏகப்பட்ட சதித்திட்டங்கள் முளை விடத் துவங்குகின்றன.
மேலும் சில பொருட்களை வாங்க வேண்டும்
என்ற எண்ணம் இருக்கலாம். அதுவும் எந்த அளவுக்கு வாங்குவது சாத்தியம் என்பது தெரியாமல்
இருக்கலாம். வழக்கம் போல் எதையும் ஆராயாமல் அதில் விழுந்து விடக் கூடாது. அவைகளை முடிந்தால்
வாங்கலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம். இருக்கின்றவைகள் போதும். அதை வாங்குவதையே
நன்றாகக் குழப்பி விட்டு விடுவார்கள் சுற்றியிருப்பவர்கள்.
இதற்காகவெல்லாம் மன உளைச்சல் அடைவதா என்று
யோசித்துப் பார்க்கிறேன். இது அடைந்த மன உளைச்சல் அன்று. தொடர்ச்சியாக நிகழ்ந்த அல்லது
நிகழ்த்தப்படும் தோல்விகளால் ஏற்படும் மன உளைச்சல்.
ஓர் இடத்தில் எளிமையாக ஒன்றைச் செய்ய முடிகிறது.
அதுவே ஒரு சில இடங்களில் நடத்த முயற்சிப்பது என்பது சவாலாக உள்ளது. அதில் போய் தேவையில்லாமல்
முட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று
போய்க் கொண்டே இருக்கலாம்.
சில இரவுகளின் மன உளைச்சலுக்கு அளவில்லை.
அந்த அளவுக்கு எதிர்மறை உணர்வு தேவையில்லை. அந்த அளவுக்குப் போகக் கூடாது என்பது புரிந்தாலும்,
போய்க் கொண்டே இருப்பது தவிர்க்க முடியாததாகி விடும்.
எதிர்பார்ப்பில் விளைந்த ஏமாற்றத்தை சகித்துக்
கொள்ள முடியாத போது, அந்தச் சகிப்பின்மைக் கட்டுபாடற்ற நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
அப்படிக் கட்டுபாடற்ற நிலைக்குச் செல்வதால் எதிர்பார்ப்பு நிறைவேறி விடுகிறதா என்ன?
கால சூழ்நிலைகளில் எல்லாம் மாறுகிறது. அப்படி இருக்கையில் எந்த எதிர்பார்ப்பும் ஒரு
நாள் நிறைவேறும். அதை வெளியில் சொல்லாமல் பொறுமையாக இருக்க வேண்டியிருக்கிறது. எதிர்பார்ப்புகள்
வெளியில் தெரியும் போது எதிரிகள் உருவாகிறார்கள். அவர் எப்படி அப்படி எதிர்பார்க்கலாம்
என்று நினைக்கிறார்கள். ஆகவேத்தான் என்ன நினைத்தாலும் வெளியில் தெரியக் கூடாது என்பது
காலம் கடந்தும் மாறாத கொள்கையாக இருக்கிறது.
ஆசையினால் உண்டாகும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை
எப்போதும் வெளியில் சொல்லாமல் இருப்பதே எல்லா காலத்துக்கும் நல்லதாக இருந்திருக்கிறது.
எந்த ஆபத்தும் நெருங்கப் போவதில்லை. வெளியில் சொன்னால் எல்லா ஆபத்தும் நெருங்குவதைத்
தவிர்க்க முடியாமல்தான் போகிறது.''
இக்குறிப்புகள்
ஆபத்துக் குறிப்புகளா? சகாயக் குறிப்புகளா? என்ற ஐயப்பாடு இதை எழுதிய எஸ்.கே.வுக்கு
இருக்கிறது. உங்களுக்கும் இருக்கலாம். அது தவிர்க்க முடியாததுதான்.
*****
No comments:
Post a Comment