13 Nov 2018

எதிர்மறையாக ஏன் செயல்படுகிறோம் என்றால்...


எதிர்மறையாக ஏன் செயல்படுகிறோம் என்றால்...
            சில நேரங்களில் மனம் சோர்ந்துதான் விடுகிறது. அது தோல்விகளால் நேரும் சோர்வாக இருக்கலாம். சொல்வதை ஏற்க மாட்டேன் என்கிறார்களே என்பதால் ஏற்படும் சோர்வாக இருக்கலாம். மற்றும் சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளால் ஏற்படும் சோர்வாக இருக்கலாம். இது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஏனென்றால் இவைகள்தான் வாழ்க்கை என்பதாக இருக்கிறது. வாழ்க்கை அப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறதா என்றால் மனம் அப்படி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கட்டமைப்பிலிருந்து வெளிவர அவைகளை விளையாட்டாக ஏற்றுக் கொள்வது ஒரு வழியாக அமையலாம்.
            எல்லாம் அந்தந்த நேரத்து மனநிலைகள்தான். குறிப்பிட்ட நேரம் நீடிக்கும். அப்புறம் மறைந்து போகும். யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையின் எத்தனையோ மனச்சோர்வுகள் இப்போது எவ்வளவு ஆழமாக நினைத்துப் பார்த்தாலும் நினைவுக்கு வராது.
            மனச்சோர்வு அடைகிறோம் என்றால் அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்து வைத்துள்ளோம் என்பது பொருள். அதிக எதிர்பார்ப்புகள் தேவையற்றவை மற்றும் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளே போதுமானது எனும் போது அதிகபட்ச எதிர்பார்ப்புகள் ஆபத்தானவை.
            வாழ்க்கை மிக எளிமையானது. ஆனால் நாம் மிக எளிமையாக வாழ்வதில்லை. யாரையோ வெல்ல வேண்டும், எதையோ வெல்ல வேண்டும் என்ற உணர்ச்சிப் பிழம்பாகவே வாழ விரும்புகிறோம். இந்த உணர்ச்சிப் பிழம்பே எளிமையாக இருக்கும் வாழ்வைக் கடினமாக்குகிறது.
            மற்றவர்கள் சரியாக இருக்கிறார்கள் என்று நினைப்பதில்லை. அவர்களைச் சரியாக மாற்ற வேண்டும் என்று பாடுபட நினைக்கிறோம். யாராவது எதையாவது சொன்னால், எதற்காகவோ பிரதிவினை ஆற்றினால் அதை இயல்பாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு உடனே உணர்ச்சிக் கொந்தளிப்புடன் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.
            அவை அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதில் பிழை ஒன்றுமில்லை.
            எதற்கும் தேவையில்லாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும்?
            தேவையில்லாத ஒன்றை யாரிடமும் எதற்காகப் பேச வேண்டும்? அதை அவர்களால் புரிந்து கொள்ள இயலாத நிலையில் அவர்கள் இருக்கலாம். அவரவர்களுக்கு எது எது புரியுமோ அதை மட்டும் பேசினால் போதுமானது. அல்லது பேசாமல் இருந்தாலும் சரியானதாக அமையும்.
            இதற்கெல்லாம் மனதை நிதானப்படுத்தி சிந்திக்கவும், செயல்படவும் அதிக நேரம் ஆகிறது என்று நினைக்கலாம். அது ஆகவே செய்யும்.
            அத்தோடு விடாமல், மனம் திருப்திபடும் அளவுக்கு அதை மாற்ற நினைக்கிறோம். மனதிருப்தி என்பது மனதைப் போல நொடிக்கு நொடி மாறக் கூடியது என்பதை அறியாமல் அதை விரட்டிப் பிடிக்க நினைக்கிறோம். கடைசி வரை அதை நம்மால் விரட்டிப் பிடிக்க முடிவதில்லை. அந்த ஏக்கத்திலேயே எதிர்மறையாகச் செயல்பட ஆரம்பிக்கிறோம்.  அப்படித்தான் விளைவுகள் விபரீதமாக ஆகின்றன.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...