எச்சரிக்கை - குழந்தைகள் வளர்கிறார்கள்!
குழந்தைகள்
கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
அந்தக் கொண்டாட்ட
மனநிலையில்...
குழந்தைகளை
நொறுக்குத் தீனிக்குப் பழக்கப்படுத்தி அல்லது அவர்களாகவே நொறுக்குத் தீனிக்குப் பழக்கமாகி
உடல் பருமன் ஆக்கி விடுகிறோமோ? அல்லது உடல்பருமனாக காரணமாகி விடுகிறோமோ?
குழந்தைகள்
அவர்கள் விருப்பம் போல் இருக்கட்டும் என்று அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சியைப் பார்க்க
விட்டு அவர்கள் கண்ணாடி அணிய காரணமாகி விடுகிறோமோ?
படி... படி...
என்று நம் குழந்தைப் பருவக் கனவுகளையெல்லாம் குழந்தைகள் மீது திணித்து, அவர்களை வடிவேலு
காமெடியை இமிடேட் செய்து ரிலாக்ஸ் ஆகும் அளவுக்கு மனஇறுக்கத்துக்கு ஆளாக்கி விடுகிறோமோ?
அதாவது குழந்தைகளை வைத்து காமெடி, கீமெடி செய்கிறோமோ?
வெளியே சென்று
விளையாடினால் அடிபட்டு விடும் என்று பயந்து அவர்களை கணினி விளையாட்டுகளையும், அலைபேசி
விளையாட்டுகளையும் விளையாட விட்டு சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று நோய்கள் உருவாகக்
காரணமாகி விடுகிறோமோ?
எல்லாவற்றையும்
விட சிறுநீரகக் கல் பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு வந்த ஒரு சிறுவனைப் பார்த்த போது
அதிர்ந்து விட்டேன்.
மேலதிகமாக,
குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறோம் என்ற பெயரில் அவர்களை சிறைபடுத்தும்
பள்ளிக்கூடங்களில் காசுகளைக் கொட்டிச் சேர்த்து அவர்களை உலகியல் அறிவு இல்லாமல் செய்து
விடுகிறோமோ?
இவைகளையெல்லாம்
குழந்தைகளின் மீதான அதீத அக்கறைக் காரணமாகச் செய்கிறோமோ? அல்லது அவர்களின் எதிர்காலத்தின்
மீதுள்ள அதீத அச்சத்தின் காரணமாகச் செய்கிறோமோ? அல்லது சுற்றியுள்ளவர்கள் இப்படித்தான்
குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்று அப்படியே நகலெடுத்துச் செய்கிறோமோ?
நிறைய யோசிக்க
வேண்டியிருக்கிறது!
குழந்தைகள்
குழந்தைகளாக வளர்வது ஒரு சவாலாக இருக்கிறது.
இளம் வயதிலேயே
அவர்கள் ஒரு ஜூனியஸாக வளர்வதற்கு அவர்களின் குழந்தை பருவம் களவாடப்படுகிறது.
அவர்கள் அவர்களின்
மனப்போக்கில் வளர்ந்தால் ஜூனியஸ் ஆவது சாத்தியம் என்று கட்டுபாடில்லாமல் குழந்தைகள்
வளர்க்கப்படுவதும், கட்டுபாடுகள் இல்லாமல் ஜூனியஸ் ஆவது சாத்தியம் இல்லை என்று அதீத
கட்டுபாடுகளுடன் குழந்தைகள் வளர்க்கப்படுவதும் குழந்தை வளர்ப்பின் இருபெரும் பிரச்சனைகளாக
நம் முன் நிற்கின்றன.
ஒரு செடியின்
வளர்ச்சியைக் கொண்டு இப்பிரச்சனைக்கானத் தீர்வைச் சரியாகப் புரிந்து கொள்ளலாம்.
செடி விரைவாக
வளர வேண்டும் அதீதமாக எருவிடுவதும்,
அதுவாக வளரட்டும்
என்று எரு இடாமல் விடுவதும் போன்ற ஒரு பிரச்சனைதான் இது.
இரண்டுமே செடியின்
வளர்ச்சிக்குப் பாதமாக அமைவதைப் போலத்தான் குழந்தைகளைக் கட்டுபாடில்லாமல் தன் போக்கில்
விடுவதும், அதீத கட்டுபாட்டோடு தன் போக்கிற்குக் கொண்டு வருவதும்.
நடத்தையில்
எல்லலை மீறிச் செல்லும் போது கட்டுபாடுகளைக் கைகொள்ளவும், கட்டுபடுத்தப்பட்டது போல
உணரும் நேரங்களில் உரிய சுதந்திரத்தை வழங்கவும் செய்தவன் மூலமே இதற்கான தீர்வை நோக்கி
நகர இயலும்.
அதற்கு முதலில்
நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை நாம் எப்படிப் பார்க்கிறோம், எப்படி
அணுக விரும்புகிறோம் என்று நம்மை நாமே புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தபடியாக
குழந்தைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இருவரும் பரஸ்பரம் புரிந்து கொள்வதன்
மூலம் தீர்வுகளை நோக்கி நாம் தேடிச் செல்ல வேண்டாத, தீர்வு நம்மை நோக்கித் தேடி வரும்
சூழல் மிக எளிமையாக உண்டாகும்.
*****
No comments:
Post a Comment