2 Oct 2018

காட்சி முன்னெடுக்கும் வலிமையான அரசியல்


காட்சி முன்னெடுக்கும் வலிமையான அரசியல்
விஜய் சேதுபதி மாற்று சினிமாக்களை முன்னெடுப்பவர் என நூறு விழுக்காடு சொல்ல இயலாவிட்டாலும், வணிக ரீதியிலான மாற்று சினிமாக்களை முன்னெடுப்பவர் என சொல்லத் துணியலாம்.
இன்றைய நிலையில் அப்படி ஒரு நிலையை முன்னெடுப்பதற்கு விஜய் சேதுபதியை விட்டால் வேறு ஆளில்லை.
ஆனால், அவர் தனது தயாரிப்பில் முழுமையான மாற்று சினிமாவை முன்னெடுத்து இருக்கிறார். ஒரு சினிமா அச்சு அசலாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி ஒரு சினிமாவைத் தாயரித்திருக்கிறார்.
திரைப்படத் தயாரிப்பிற்குத் தனித்துணிவு வேண்டும். திரைப்படத் தயாரிப்பில் கையைச் சுட்டுக் கொண்டவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். நடித்துக் காசு பார்க்கும் எந்த மகாநடிகரும் திரைத் தயாரிப்பு என்றால் விட்டம் பார்ப்பார்கள். விஜய் சேதுபதி துணிந்து வணிக சமரசமற்ற ஒரு திரைப்படத்தைத் தயாரித்து இருக்கிறார்.
அவரது தயாரிப்பில் வெளியாகி இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அப்படி ஒரு திரைப்படம்.
எவ்வித மிகையோ, எந்த வித சினிமா சமாளிப்புகளோ இல்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் வாழ்வு என்னவோ அது அப்படியே திரையாகப் பதிவாகியிருக்கிறது.
இப்படிப்பட்ட சினிமாக்களை எடுப்பது ஒரு சவால். சமயங்களில் அது ஒரு டாக்குமெண்டரி தோற்றம் தருவதைத் தடுக்க முடியாது. அதை தனது அற்புத திரைக்கதை மற்றும் இயக்க உத்தியால் கடந்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. தமிழில் ஒரு தரமானத் திரைப்படம் என இதைச் சொல்லலாம்.
உழைப்பவருக்கு நிலம் இல்லாமல், அப்படியே நிலம் வந்தாலும் அது கை மீறிச் செல்வதை இப்படம் உள்ளது உள்ளபடிச் சொல்கிறது.
காட்சிகளால் இப்படம் பேசும் பொருளாதார அரசியல் கூர்மையானது.
விவசாயம் செய்தவர் கடன்காரர் ஆவதும், விவசாயிக்கு இடுபொருள் விற்றவர் பணக்காரர் ஆவதும் இந்த மண்ணின் தலையெழுத்து என்பதா? இந்திய மண்ணின் தலையெழுத்து என்பதா?
நேர்மை, நியாயம், கருணை, பெருந்தன்மை என்ற பெயரால் தொல்குடிகளை, விவசாயிகளை எப்படியெல்லாம் சுரண்ட முடிகிறது?
மலைவாழ் மக்களின் வாழ்வு அப்படியென்றால், சமவெளிவாழ் மக்களின் வாழ்வும் அப்படியேத்தான் உள்ளது. நிலத்திற்கு உரிமையாளராக இருந்தவர்கள்தான் இன்று நகரங்களில் கட்டடக் காவலாளியாக இருக்கிறார்கள்.
சோளக்காட்டு பொம்மையை விளைநிலத்தில் வைத்த விவசாயியே இன்று சோளக்காட்டு பொம்மையாக நீலநிறச் சீருடை அணிந்த கட்டிடக் காவலாளியெனும் பொம்மையாகி இருக்கிறான்.
எவரிடம் நிலம் பிடுங்கப்பட்டதோ அவரையே அந்நிலத்திற்குக் காவலாளியாக்கும் அவலம் காலத்திற்கு ஏற்ப மாறிய ஒரு நவீன அடிமைத்தனம்.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து அப்படியே பார்த்தால் கிழக்குத் தொடர்ச்சி மலை வரை நிலை அப்படியேத்தான் இருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை அவசியம் பார்க்கப்பட மற்றும் நோக்கப்பட வேண்டிய ஒன்று. ஆம் அம்மலையும் பார்க்கப்பட மற்றும் நோக்கப்பட வேண்டும், அம்மலையின் பெயரால் வெளிவந்துள்ள திரைப்படமும் பார்க்கப்பட மற்றும் நோக்கப்பட வேண்டும்.
இயக்குனர் பாலாவின் படமான பரதேசியையும் இவ்விடத்து ஒப்பு நோக்கும் போது பாலா வன்மத்தையும், குரூரத்தையும் வணிகமாக்கும் உத்தியில் ஈடுபடுகிறார். இயக்குனர் லெனின்பாரதி இவ்விடத்தில் பாலாவிலிருந்து வேறுபடுகிறார்.
அவ்வகையில் பாலாவின் பரதேசி எனும் திரைப்படமும், லெனின்பாரதியின் மேற்குதொடர்ச்சி மலை எனும் திரைப்படமும் முறையே கலையாக உருபெற வேண்டிய ஒரு சினிமாவை வணிகமாக்கும் உத்திக்கும், வணிகமாய் உருபெற வேண்டிய ஒரு சினிமாவை கலையாக்கும் உத்திக்கும் நல்லதொரு சான்றாகும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...